.

Saturday, April 7, 2007

☈ வாண வேடிக்கையில் விபரீதம் : ஆட்டோ வெடித்து மூவர் பலி

குடியாத்தம் அருகே வாண வேடிக்கையில் விபரீதம் : ஆட்டோ வெடித்து மூவர் பலி

வேலூர்: குடியாத்தம் அருகே, கோயில் திருவிழாவில் நடந்த வாண வேடிக்கை நிகழ்ச்சியில், ஆட்டோ வெடித்து சிதறியதில் மூவர் இறந்தனர். ஐம்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகேயுள்ளது சென்றாம்பள்ளி கிராமம். ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ள இக்கிராமத்தில் கோயில் திருவிழா நடந்து வருகிறது. அதையொட்டி இரவு பூப்பல்லக்கு விழா நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், விழாவில் பங்கேற்றனர். பல்லக்கு ஊர்வலத்தின் முன்னணியில், ஆட்டோவில் வர்ண விளக்கு, மைக் செட் கட்டி, அறிவித்தபடி சென்றனர். அப்போது பக்தர்கள், வாண வேடிக்கை நிகழ்ச்சி நடத்தினர். கண்ணை கவரும் ஒளி வெள்ளத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறின. வெடித்த பட்டாசுகளில் ஒன்று, பல்லக்கு ஊர்வலத்தில் சென்ற ஆட்டோ மீது விழுந்தது. பட்டாசு விழுந்து தீப்பற்றிய அடுத்த சில வினாடிகளில், ஆட்டோ வெடித்து சிதறியது. அந்த விபத்தில் ராமாலை கிராமத்தை சேர்ந்த அசோக் (40) என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். 15 பேர் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ராஜாகோவில் பகுதியை சேர்ந்த ஆஷாக் (12), குடியாத்தத்தை சேர்ந்த சண்முகம் (32) ஆகியோர் பலியாகினர். இந்த சம்பவத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருக்கலாம் என்றும், சாவு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...