அன்பழகனுக்கு பதவியா?
முதல்வர் கருணாநிதி 2 நாள் பயணமாக இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் நாளை தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக முதல்வர் கருணாநிதி இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். காலை 6.40 மணிக்கு டெல்லி சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் முதல்வர் சென்றார். அவருடன் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், மத்திய அமைச்சர் ராஜா ஆகியோரும் சென்றனர். உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் முதல்வரை வழியனுப்பி வைத்தனர். தனது டெல்லி பயணத்தின்போது குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் வேட்பாளர்கள் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார் முதல்வர் கருணாநிதி. இன்று காலை 10.30 மணிக்கு தமிழ்நாடு இல்லத்தில் முதல்வரை, விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார் சந்தித்துப் பேசுகிறார். 11 மணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் பிரகாஷ் காரத் சந்திக்கிறார். 12 மணிக்கு சோனியா காந்தியை அவரது இல்லத்தில் கருணாநிதி சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் வேட்பாளர்கள் குறித்து முக்கிய விவாதம் நடக்கிறது. குடியரசுத் துணைத் தலைவர் பதவியை திமுகவுக்கு அளிக்க காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. அப்பொறுப்புக்கு அமைச்சர் அன்பழகனை திமுக நிறுத்தக் கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதுகுறித்து இன்று முடிவு செய்யப்படும். மாலை 5.30 மணிக்கு மத்திய மனித வளத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங் முதல்வரை சந்திக்கிறார். இரவு 7 மணிக்கு பிரதமர் மன்மோகன் சிங்கை கருணாநிதி சந்தித்துப் பேசுகிறார். இரவு 8 மணிக்கு இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் ஏ.பி.பர்தான் கருணாநிதியை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். இதையடுத்து நாளை தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்று தமிழகத் திட்டங்கள் குறித்து பேசுகிறார். அதே போல உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் விபி சிங்கையும் சந்திக்கிறார். இதைத் தொடர்ந்து நாளையே தனது டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு கருணாநிதி சென்னை திரும்புகிறார்.
No comments:
Post a Comment