.

Monday, May 28, 2007

உழைப்பால் உயர்ந்த சிங்கம்

நேற்று ஐஸ் வியாபாரி இன்று கோடீஸ்வரர் -
உழைப்பால் உயர்ந்த சிங்கம்


லூதியானா. மே 28: வெளிநாட்டில் வேலை வாய்ப்பை தேடி அலைவதே இன்றைய இளைஞர்கள் பலரின் லட்சியமாக உள்ளது. ஆனால், எந்த வேலை செய்தாலும், அதை தாயகத்தில் செய்து முன்னுக்கு வரவேண்டும் என்பதை பஞ்சாபி ஒருவர் நிருபித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்தவர் ராஜேந்தர் சிங் பசந்த். இன்று இவர் மிகப் பெரும் கோடீஸ்வரர். ஆனால், 15 ஆண்டுகளுக்கு முன் இவர், சைக்கிளில் ஐஸ் விற்ற வியாபாரி. இவரால் எப்படி கோடீஸ்வராக முடிந்தது? அவரே சொல்கிறார்:

என் தந்தை, குல்பி ஐஸ் விற்கும் ஏழை வியாபாரியாக இருந்தார். என்னை படிக்க வைக்க கூட அவருக்கு வசதியில்லை. அதனால், குல்பி ஐஸ் விற்கும் தொழிலையே எனக்கும் கற்று கொடுத்தார். 1980ம் ஆண்டில் என் தந்தை இறந்தார். அது முதல் குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பும் என் மீது விழுந்தது. இதனால் முழு மூச்சில் குல்பி ஐஸ் தயாரித்து விற்கும் தொழிலில் ஈடுபட்டேன்.

அப்போது பஞ்சாபில் தீவிரவாதம் தலைவிரித்தாடிய காலம். லூதியானாவில் எப்போது ஊரடங்கு உத்தரவு இல்லாத நேரம் என்று கூற முடியாத நிலை. இரவு 8 மணிக்கு மேல் கடைகள் திறக்கப்படமாட்டாது. என்னை போல் சிறு வியாபாரிகள், எந்த வியாபாரமும் செய்ய முடியாது.

ஒருநாள், சைக்கிளில் குல்பி ஐஸ் பெட்டியை வைத்துக் கொண்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது, தினமும் என்னிடம் காசு கொடுக்காமல் மிரட்டி ஐஸ் வாங்கி சாப்பிடும் போலீஸ்காரர் ஒருவர் எதிரில் வந்தார்.

என்னிடம் ஐஸ் கொடுக்கும்படி கேட்டார். ஆனால், என்னிடம் ஐஸ் இல்லை. கோபம் தலைக்கேறிய நிலையில், அந்த போலீஸ்காரர், என் கண்ணத்தில் அறைந்துவிட்டு சென்று விட்டார். மன வேதனையுடன் வீட்டுக்கு திரும்பினேன். அப்போது வழியில், அதே போலீஸ்காரர், ஒரு அரசியல்வாதியிடம் மிகவும் பவ்யமாக, காலில் விழாத குறையாக வணக்கம் செலுத்துவதை பார்த்தேன்.

வாழ்க்கையில் பணமும் பதவியும் இருந்தால்தான் மதிப்புÕ என்பதை புரிந்துக் கொண்டேன். கடுமையாக உழைத்து வாழ்க்கையில் பணக்காரனாக வேண்டும் என்று உறுதி கொண்டேன். ஒய்வு என்று ஒரு நாள் கூட நான் இருந்ததில்லை. அதேநேரத்தில் பசந்த் குல்பி ஐஸ் தரமான ஐஸ் என்பதில் எந்த குறைவும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டேன்.

24 மணி நேரமும் ஐஸ் வியாபாரம்தான் எனது பணியாக இருந்தது. படிப்படியாக பஞ்சாபின் பல பகுதிகளில் எனது ஐஸ் கம்பெனியின் கிளைகளை திறந்தேன். சைக்களில் ஐஸ் விற்க ஆரம்பித்த நான், பின்னர், வேன்களில் விற்க ஆரம்பித்தேன். இன்று வட மாநிலங்களில் எனது நிறுவனத்தின் கிளைகள் இல்லாத இடமே இல்லை. ஏன்? லண்டனில் கூட பசந்த் குல்பி ஐஸ் கடை திறந்துள்ளேன். இத்துடன் பஞ்சாபில் பல பகுதிகளில் ஓட்டல்கள், திருமண மண்டபங்கள் எனக்கு சொந்தம்.

சாதாரண ஐஸ் வியாபாரியாக இருந்த நான், இன்று கோடீஸ்வரனாக இருப்பதற்கு காரணம் கடும் உழைப்பை தவிர வேறு எதுவும் இல்லை.
கடும் உழைப்பை என் தந்தை எனக்கு கற்று கொடுத்தார். இன்று என் குழந்தைகளுக்கு அதைதான் நான் சொல்லிக் கொடுக்கிறேன்.

இன்று இளைஞர்கள் பலருக்கு வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டும் என்பது கனவாக உள்ளது. பலர் வெளிநாடு செல்கிறார்கள். ஆனால், சாதிக்க முடிவதில்லை. கடும் உழைப்பை நம்பி எந்த தொழில் செய்தாலும் வெற்றிதான். அதில் நிச்சயம் தாயகத்திலேயே சாதிக்க முடியும் என்பதுதான் இளைஞர்களுக்கு என்னுடைய அறிவுரை.

வாழ்க்கையில் முன்னுக்கு வர கனவு காணுங்கள். அதற்கு உழைப்பை மட்டும் நம்புங்கள். அதே நேரத்தில் எந்த சூழ்நிலையிலும் நேர்மையையும் ஓழுக்கத்தையும் கைவிட்டுவிடக் கூடாது. எந்த தொழில் செய்தாலும் நிச்சயம் முன்னுக்கு வர முடியும். நாமும் முன்னேறலாம். நாடும் முன்னேறும் என்று கூறுகிறார் ராஜேந்தர் சிங் பசந்த்.


நன்றி: "தினகரன்"

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...