.

Tuesday, May 15, 2007

உள்துறை செயலாளரை மிரட்டிய தயாநிதி!

மே 15, 2007

சென்னை: மதுரை தினகரன் சம்பவத்தைத் தொடர்ந்து உள்துறைச் செயலாளரைத் தொடர்பு கொண்டு மிரட்டுவது போல பேசினார் தயாநிதி மாறன் என அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.

முதல்வர் கருணாநிதியின் கடிதங்களை டெல்லிக்கு எடுத்துச் சென்று பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரிடம் கொடுத்து விட்டு நேற்று இரவு சென்னை திரும்பினார் ஆற்காடு வீராசாமி.

விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மதுரை சம்பவத்துக்கும், தனக்கும் தொடர்பு இல்லை என்று தயாநிதி மாறன் கூறுவதில் உண்மை இல்லை. மதுரை சம்பவம் நடந்த பின்னர் அவர் உள்துறை செயலாளருக்குப் போன் செய்துள்ளார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா, இல்லையா. உடனடியாக சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டும். தவறினால் குடியரசுத் தலைவரிடம் புகார் செய்வேன் என்று மிரட்டியுள்ளார். அது வரம்பு மீறிய செயல்.

அவரது தாத்தாதான் முதல்வர். விரும்பியிருந்தால் அவரிடம் பேசியிருக்கலாம். அதை விடுத்து உள்துறைச் செயலாளரை மிரட்டியுள்ளார் என்றார் ஆற்காடு வீராசாமி.

முன்னதாக டெல்லியில் பிரதமர், காங்கிரஸ் தலைவரை சந்தித்தார் ஆற்காடு வீராசாமி. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், முதல்வர் அனுப்பியிருந்த கடிதத்தை பிரதமரிடம் கொடுத்தேன். வாங்கிப் பிரித்துப் படித்துப் பார்த்த பிரதமர், அதில் உள்ளவற்றை நடைமுறைப்படுத்துவதாக கூறினார்.

அதேபோல சோனியா காந்திக்குக் கொடுக்கப்பட்ட கடிதத்தையும் அவரைச் சந்தித்துக் கொடுத்தேன். விரைவில் அமைச்சரவையில் மாற்றம் இருக்கலாம்.

தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத யாரும் அமைச்சராவார்களா என்பது எனக்குத் தெரியாது. தமிழக முதல்வரின் பரிந்துரைப்படி பிரதமர் நடவடிக்கை எடுப்பார் என்றார் ஆற்காடு வீராசாமி.

நன்றி :
தட்ஸ் தமிழ்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...