.

Tuesday, May 29, 2007

இடிக்கப்பட்ட 'ராப்ரி ரயில் நிலையம்'

பீகார் மாநிலத்தில் முன்னாள் முதல்வரும், ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவின் மனைவியுமான ராப்ரி தேவியின் பெயரால் அமைக்கப்பட்டிருந்த 'ரயில் நிலையத்தை' இடிக்க ரயில்வே உத்தரவிட்டது. இதையடுத்து அது இடித்துத் தள்ளப்பட்டது.

இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும் பீகாருக்கும் பல வித்தியாசங்கள் உண்டு. மற்ற மாநிலங்களில் காண முடியாததை பீகாரில் அதிகம் காணலாம். அதற்கு ஒரு உதாரணம், பீகாருக்குள் ஓடிக் கொண்டிருக்கும் ரயில்கள் ரயில்வேயின் கட்டுப்பாட்டிலேயே கிடையாது. இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான் பெரும்பாலும் ரயில்வே அமைச்சர்களாக வருகிறார்கள் என்பதால், யார் அமைச்சராக இருக்கிறாரோ அவர்கள் பெயரைச் சொல்லி அவர்கள் ரயில் என்றுதான் பீகாரிகள் செல்லமாக கூறுவார்கள்.

முன்பு ராம் விலாஸ் பாஸ்வான் ரயில்வே அமைச்சராக இருந்தார். பிறகு நிதீஷ் குமார் இருந்தார். தற்போது லாலு பிரசாத் யாதவ் இருக்கிறார். இந்த மூவரில் லாலு வந்த பிறகுதான் பீகாரிகளுக்கு ரயில்வே மீது அதிக 'பாசம்' வந்து விட்டது. 'லாலு கா ரயில்' என்று கூறியபடி அவர்கள் செய்யும் அலும்புகளுக்கு அளவே இல்லாமல் போய் விட்டது.

பீகாரில், சஸ்ராம் - பிகார்கஞ்ச் ஆகிய இரு ஊர்களுக்கு இடையிலான 45 கிலோமீட்டர் தொலைவில், வழக்கமாக உள்ள ரயில் நிலையங்கள் தவிர சில அதிகாரப்பூர்வமற்ற 'ரயில் நிலையங்களும்' உள்ளன. உள்ளூர் பிரபலங்களின் பெயரால் உள்ளூர் மக்களே அமைத்த 'ரயில் நிலையங்கள் தான் இவை. இவர்களே ஒரு பிளாட்பாரத்தை எழுப்பி, அதன் மேல் அந்த ஊர் பிரபலத் தலைவர்களின் பெயர்களால் ஒரு போர்டும் வைத்துள்ளனர். இந்தப் பகுதி வழியாக செல்லும் உள்ளூர் ரயில்கள் கண்டிப்பாக இந்த அதிகாரப்பூர்வமற்ற ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும். இல்லாவிட்டால் அவ்வளவுதான் அந்த ரயிலின் டிரைவருக்கு சரமாரியாக சாத்துப்படி கொடுக்கப்படுமாம். இவர்களுக்குப் பயந்து உள்ளூர் ரயில்கள் இந்த அதிகாரப்பூர்வமற்ற ரயில் நிலையங்களில் நின்று செல்லுமாம்.

அப்படிப்பட்ட ஒரு ரயில் நிலையத்திற்கு ராப்ரி தேவியின் பெயர் வைத்திருந்தனர் அந்தப் பகுதி மக்கள். இதுபோல கிட்டத்தட்ட 8 ரயில் நிலையங்கள் இந்த மார்க்கத்தில் உள்ளன. இவை அனைத்தையும் இடித்துத் தள்ளுமாறு ரயில்வே துறை சமீபத்தில் உத்தரவிட்டது. இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் இந்த ரயில் நிலையங்களை இடித்துத் தள்ளினர். ராப்ரி நிலையமும் கூடவே இடித்துத் தள்ளப்பட்டது.

தட்ஸ்தமிழ்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...