.

Thursday, May 17, 2007

சக எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காப்பாற்றிய அதிமுக எம்.பி. நாராயணன்

தமிழக அரசைக் கலைக்கக் கோரி அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் கடந்த வாரம் முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உணர்ச்சி வேகத்தில் அதிமுக உறுப்பினர் ஒருவர், அவை அதிகாரிகள் அமர்ந்திருக்கும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு புத்தகத்தை எடுத்து தூக்கியெறிந்தார். நல்லவேளையாக யார் மீதும் படாமல் அது கீழே விழுந்தது.

சிறிது நேரத்துக்குப் பிறகு இன்னொரு உறுப்பினர் ரஹ்மான்கான் இருக்கைக்கு அருகே சென்று இருக்கையின் கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு அவையை ஒத்திவைக்குமாறு அழுத்தமாக வலியுறுத்தினார்.

அவையின் அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டத்தில் இதுபற்றி பிரச்சினை எழுப்பப்பட்டது. மாநிலங்களவைத் தலைவர் பைரோன் சிங் ஷெகாவத் மிகக்கோபமாக தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். ரஹ்மான்கானும் அதிமுக உறுப்பினர்கள் நடந்துகொண்டதைப் போல அவையில் இதுவரை யாரும் நடந்ததில்லை என்று கூறினார்.

அவர்களின் செயல் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று ஆலோசனை நடந்த நேரத்தில், பி.ஜி.நாராயணன் குறுக்கிட்டு, "இனிமேல் தனது கட்சி உறுப்பினர்கள் அப்படி நடந்துகொள்ள மாட்டார்கள். இது மாநிலத்தில் மிக முக்கியப் பிரச்சினை என்பதால் சற்று உணர்வுப்பூர்வமாக நடந்துகொண்டார்கள். மற்றபடி அவையையோ, தலைவர் மற்றும் துணைத் தலைவரையோ அவமதிக்கும் நோக்கம் இல்லை. இப் பிரச்சினையை இத்துடன் விட்டுவிடுங்கள்" என்று கேட்டுக் கொண்டார்.

பிரச்சினை சுமுகமாகத் தீர்க்கப்பட்ட நிலையில், புதன்கிழமை தங்கள் பிரச்சினையை வலியுறுத்தி அவையிலிருந்து அடையாள வெளிநடப்புச் செய்ததுடன் அதிமுகவினர் அமைதியடைந்தனர்.

Dinamani

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...