.

Thursday, May 17, 2007

டேரா பாபாவைக் கைது செய்ய கோரிக்கை:மாநிலங்களவையில் கடும் கண்டனம்

புது தில்லி, மே 17: சீக்கியர்களின் மனம் புண்படும் வகையில் நடந்துகொண்ட "டேரா சச்சா சௌதா" அமைப்பின் தலைவர் பாபா குர்மீத் சிங் ராம் என்பவரைக் கைது செய்ய வேண்டும் என்று மாநிலங்களவையில் உறுப்பினர்கள் புதன்கிழமை கோரிக்கை விடுத்தனர்.

சீக்கியர்களால் மிகவும் மதிக்கப்படும் 5 பெரிய குருமார்களில் (பஞ்ச பியாரா) ஒருவரான குரு கோவிந்த சிங்கைப் போல உடையணிந்து, ஒப்பனை செய்துகொண்டு தெருவில் ஊர்வலம் சென்றார் பாபா குர்மீத்சிங் ராம். பாபா குர்மீத்சிங் ராம், ஹரியாணா மாநிலத்தில் வசிக்கிறார்.

இந்தச் சம்பவம் குறித்து மாநிலங்களவையில் புதன்கிழமை பாரதீய ஜனதா, சிரோமணி அகாலிதளம் ஆகிய கட்சி உறுப்பினர்கள் கவலையும் கண்டனமும் தெரிவித்தனர். "இது மாநிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினை, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பஞ்சாபில் இருக்கும்போது மத்திய அரசால் ஏதும் செய்ய முடியாது" என்று உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் பதில் அளித்தார்.

பஞ்சாபில் பிரகாஷ் சிங் பாதல் தலைமையில் அகாலிதளம்-பாஜக கூட்டணி அரசும், ஹரியாணாவில் பூபிந்தர் சிங் ஹூடா தலைமையில் காங்கிரஸ் அரசும் ஆட்சி செய்கின்றன.

"சீக்கியர்களை வாத்துகள் என்று நினைத்துவிடாதீர்கள், இதைப் போன்ற செயல்களால் வட இந்தியா முழுக்க கலவரம் வெடிக்கும்" என்று தர்லோசன் சிங் என்ற சுயேச்சை உறுப்பினர் எச்சரித்தார்.

"கற்பழிப்பு, கொள்ளை, பணம் பறித்தல், கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் அந்த பாபா மீது பதிவு செய்யப்பட்டு, வழக்குகள் நிலுவையில் உள்ளன" என்று சுட்டிக்காட்டினார் எஸ்.எஸ். அலுவாலியா (பாஜக).

Dinamani

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...