.

Tuesday, June 19, 2007

கிரிக்கெட்: 2011 உலகக்கோப்பை சரத்பவார் தலைமை.

2011-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆலோசனை கூட்டத்தில், ஒருங்கிணைப்பு கமிட்டி தலைவராக சரத்பவார் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். உள்ளூர் ரசிகர்களுக்கு டிக்கெட் விலையில் தாராளம் காட்டுவது, பொதுவான விசா வழங்குவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


2011-ம் ஆண்டு நடக்கும் 10-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய ஆசிய நாடுகள் இணைந்து நடத்த உள்ளன. இதில் இந்தியாவில் இறுதிப்போட்டி உள்பட 22 ஆட்டங்களும், பாகிஸ்தானில் 14 ஆட்டங்களும், இலங்கையில் 9 ஆட்டங்களும், வங்காளதேசத்தில் 6ஆட்டங்களும் நடக்கின்றன.

இந்த உலக கோப்பை போட்டிக்கான ஏற்பாடுகளை தொடங்குவது தொடர்பாக 4 நாட்டின் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் நேற்று முதல் முறையாக கூடி ஆலோசித்தனர். இந்த கூட்டம் பாகிஸ்தானின் புர்பான் நகரில் நடந்தது. இதில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஒருங்கிணைப்பு கமிட்டியின் தலைவராக இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சரத்பவார் தேர்வு செய்யப்பட்டார். மேலும் தலைமை கன்வீனராக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நசிம் அஷ்ரப், பொருளாளராக இலங்கையின் சுஜீவா ரஜபக்சே ஆகியோர் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. இதன் தலைமையகம் லாகூரில் செயல்படும்.

இந்த கூட்டத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வெஸ்ட் இண்டீசில் நடந்த 9-வது உலக கோப்பை போட்டியில் நடந்த குழப்பம், தவறுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மீண்டும் அது போன்று தவறுகள் நிகழாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. குறிப்பாக, கடந்த உலக கோப்பையில் டிக்கெட் விலை உயர்வால் உள்ளூர் ரசிகர்கள் போட்டியை புறக்கணித்தனர். இதனால் அந்த உலக கோப்பை போட்டி, உலக கோப்பைக்கே உரிய `களை'யை இழந்தது. இது பற்றியும், போட்டியின் கால அளவு குறித்தும் முக்கியமாக விவாதிக்கப்பட்டது.

இதன் முடிவில் 2011-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு அதிக ரசிகர்களை வரவழைக்க உள்ளூர் ரசிகர்களுக்கு டிக்கெட் விலையை குறைந்த விலையில் விற்பது என்று முடிவு செய்யப்பட்டது. இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சரத்பவார் கூறுகையில், `அடுத்த உலக கோப்பை போட்டி பார்வையாளர்கள் நட்பு முறையில் பழகுவதற்கான தொடராக இருக்கும் வகையில் தேவையான எல்லா முயற்சிகளும் எடுக்கப்படும். உள்ளூர் ரசிகர்களுக்கு குறைந்த விலையில் டிக்கெட்டுகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்' என்றார்.


மேலும் இந்த போட்டியை காண வரும் 4 நாட்டு ரசிகர்களுக்கும் தனித்தனியாக விசா வழங்காமல், 4 நாட்டிலும் போட்டியை காணும் வகையில் பொதுவான விசா வழங்க அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் தங்களது அரசிடம் உதவி கோருவது என்று முடிவு செய்யப்பட்டது. வெஸ்ட் இண்டீசில் நடந்த உலக கோப்பை போட்டிக்காக அங்குள்ள ஸ்டேடியங்களை புதுப்பிக்க ஐ.சி.சி. சிறப்பு நிதி வழங்கியது. அதே போன்று இந்த உலக கோப்பை போட்டிக்கும் தாங்கள் எதிர்பார்ப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நசிம் அஷ்ரப் கூறினார். `இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளுக்கு ஏற்கனவே உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்திய அனுபவம் உள்ளது. எனவே அடுத்த உலக கோப்பை போட்டி வரலாற்றில் தனிச்சிறப்பு பெற்றதாக இருக்கும்' என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த கமிட்டி அடுத்ததாக நவம்பர் மாதம் இந்தியாவில் கூடி, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க இருக்கிறது.

நன்றி: தினத்தந்தி


Pawar named head of 2011 World Cup Organising Committee

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...