.

Tuesday, June 19, 2007

மூன்றாவது அணி: அப்துல் கலாமை நாளை சந்திக்கிறது

தேசிய அளவில் காங்கிரஸ், பா.ஜ.வுக்கு மாற்றாக சமாஜ் வாடி, அ.தி.மு.க., தெலுங்கு தேசம், ம.தி.மு.க., அசாம் கணபரிஷத், ஜார்க்கண்ட் விகாஸ் மோட்சா, இந்திய தேசிய லோக்தளம் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி ஆகிய 8 கட்சிகளும் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த கூட் டணிக்கு ``ஐக்கிய தேசிய முற் போக்கு கூட்டணி'' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த கூட்டணி கட்சித் தலைவர்கள் கடந்த 6-ந் தேதி ஐதராபாத்தில் கூடி பேசினார்கள். அந்த அணியின் 2-வது கூட்டம் நேற்று சென்னை போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டில் நடந்தது.

கூட்டத்தில் சமாஜ்வாடி தலைவர் முலாயம்சிங் யாதவ், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்- மந்திரி பாபுலால் மராண்டி, அரியானா முன்னாள் முதல்-மந்திரி சவுதாலா, அசாம் கணபரிஷத் தலைவர் பிருந்தாவன் கோஸ்யாமி ஆகியோர் கலந்து கொண்டனர். சுமார் 1 மணி நேரம் இந்த ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் ஜனாதிபதி தேர்தலில் அப்துல் கலாம் மீண்டும் போட்டியிட ஆதரவு தெரிவிப்பதாக முடிவு எடுக் கப்பட்டது.

``இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவைப் பெற கூடிய தகுதி அப்துல் கலாமுக்கு மட்டுமே உள்ளது. அவரை அனைவரும் ஆதரிக்க வேண்டும்'' என்று 8 கட்சி கூட்டணித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

8 கட்சி கூட்டணி தலை வர்கள், தாங்கள் இறுதி முடிவு எடுக்கும் முன்பு அப்துல் கலாமை தொடர்பு கொண்டு பேசவில்லை. நேற்று மதியம் அவர்கள் ஜனாதிபதி மாளிகையுடன் தொடர்பு கொண்டு அப்துல் கலாமை சந்திக்க அனுமதி கேட்டனர். அவர்களுக்கு 20-ந் தேதி (புதன்கிழமை) பிற்பகல் 3.30 மணிக்கு நேரம் ஒதுக்கி அனுமதிக்கப்பட்டது.

இதையடுத்து ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணியில் உள்ள தலைவர்கள் நாளை ஜனாதிபதி அப்துல் கலாமை சந்திக்க உள்ளனர். இதற்காக 8 கட்சித் தலைவர்களும் நாளை டெல்லி செல்கிறார்கள்.

ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணியின் முக்கிய தளகர்த்தாவாக கருதப்படும் அ.தி.மு.க. பொதுச் செயலா ளர் ஜெயலலிதா நாளை காலை சென்னையில் இருந்து விமானத்தில் டெல்லி செல்கிறார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவும் நாளை டெல்லி செல்கிறார்.

ஜனாதிபதி அப்துல் கலாமிடம் 8 கட்சித் தலைவர்களும், ``ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட வேண்டும்'' என்று கேட்டுக் கொள்வார்கள். ``நாட்டின் நலன்கருதி ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி முடிவை ஏற்க வலியுறுத்தவும் 8 கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

அவர்களுக்கு ஜனாதிபதி அப்துல்கலாம் நன்றி தெரிவிப்பார். ஆனால் 3-வது அணி முடிவையும் கோரிக்கையையும் ஏற்பாரா என்பது இன்னமும் உறுதியாக தெரியவில்லை.

எல்லாரும் சம்மதித்து ஏகமனதாக தேர்வு செய்தால் மீண்டும் ஜனாதிபதி பொறுப்பை வகிக்க அப்துல் கலாம் சம்மதிப்பார் என்று ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் போட்டியிட சம்மதிப்பாரா என்பதில் கேள்விக்குறி நிலவுகிறது.

பா.ஜ.க. கூட்டணியும் ஆதரித்து, ஷெகாவாத் விலகும் பட்சத்தில் அப்துல் கலாம் போட்டியிட கூடும் என்றும் டெல்லியில் பேசப்படுகிறது. இது தொடர்பாக இன்னும் ஓரிரு நாட்களில் தெளிவான நிலை தெரிந்துவிடும்.

நன்றி: மாலைமலர்

1 comment:

selventhiran said...

கலாம வச்சி காமெடி, கீமெடி பண்ணலியே

-o❢o-

b r e a k i n g   n e w s...