.

Tuesday, June 19, 2007

அப்துல் கலாமுக்கு மறுப்பு - தே.ஜ.கூட்டணி

குடியரசுத்தலைவர் அப்துல் கலாமை மீண்டும் போட்டியிடச் செய்யும் மூன்றாவது அணியின் முயற்சிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கலாமை வேட்பாளராக ஏற்கப் போவதில்லை என பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவித்துவிட்டது.

அதே போல காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆதரவும் இல்லாத நிலையில் இத் தேர்தலில் கலாம் மீண்டும் போட்டியிட மாட்டார் என்றே தெரிகிறது.

இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் சுஷ்மா சுவராஜ் கூறுகையில்,

இரண்டு மாதங்களுக்கு முன்பே கலாமை வாஜ்பாய் தலைமையிலான பாஜக தலைவர்கள் சந்தித்து மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு கோரினர். அப்போது, அனைத்து கட்சிகளும் ஒரு மனதுடன் ஆதரித்தால் மட்டுமே பதவி ஏற்க முடியும் என கலாம் கூறிவிட்டார்.

கலாம் மறுத்ததால்தான் துணை குடியரசு தலைவர் பைரோன்சிங் ஷெகாவத்தை ஆதரிக்க தீர்மானித்துள்ளோம். ஜனாதிபதி பதவிக்கான அனைத்து தகுதிகளும் ஷெகாவத்திடம் உள்ளன. பிரதீபாவைப் போல இது ஒரு குடும்பத்தின் (சோனியா குடும்பம்) மீதான விசுவாசம் அல்ல. நாடு, ஜனாதிபதி பதவி, அரசியல், சட்டம் ஆகியவற்றின் மீதான விசுவாசத்தினால் தேர்வு செய்திருக்கிறோம்.

காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக அறிவித்துள்ளவருக்கு ஜனாதிபதியாக எந்தத் தகுதியும் இல்லை. இந்த விஷயத்தில் எங்கள் கருத்துடன் 3வது அணியின் கருத்தும் உடன்படுகிறது. பைரோன்சிங் ஷெகாவத்தை 3வது அணி ஆதரிக்க வேண்டும் என்றார் சுஷ்மா.

அதே போல அப்துல் கலாமை ஏற்க இடதுசாரிக் கட்சிகளும் மறுப்பு தெரிவித்துள்ளன. இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பரதன், மூத்த தலைவர் ராஜா ஆகியோர் கூறுகையில்,

பிரதீபா பாட்டீல் பெண் வேட்பாளர் மட்டுமல்ல, பொறுப்பான கவர்னர். பொது வாழ்க்கையில் அனுபவம் மிக்கவர். அதுமட்டுமின்றி சட்ட நிபுணராகவும் இருக்கிறார். எந்தவிதமான சர்ச்சையிலும் சிக்காதவர். சிறந்த சமூக சேவகி. இத்தனை தகுதியுடன் கூடிய அவர் நிச்சயம் வெற்றி பெறுவார். அவரை விட்டுவிட்டு வேறு ஒருவரை ஏன் நாட வேண்டும். பாஜகவிற்கு உதவுவதற்காகவே 3வது அணி இந்த கோரிக்கையை விடுத்துள்ளது என்றனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மூத்த தலைவர் பாந்தே கூறுகையில்,

அப்துல் கலாமுக்கு பாஜக ஆதரவு கேட்டபோதே நாங்கள் அதை நிராகரித்து விட்டோம். இப்போது எப்படி ஆதரிக்க முடியும். கடந்த முறை ஜனாதிபதி தேர்தலிலேயே கலாமை ஆதரிக்காமல் லட்சுமி செகாலை நிறுத்தினோம். இப்போது ஏன் அவரை ஆதரிக்கப் போகிறோம். 3வது அணியின் இந்த கோரிக்கையை ஏற்க இயலாது என்றார்.

பார்வர்டு பிளாக் தேசிய செயலாளர் தேவராஜன் கூறுகையில்,

3வது அணியின் இந்த கோரிக்கை மிகவும் தாமதாக வந்துள்ளதால் இப்போது எங்களால் பின் வாங்க முடியாது. நாங்கள் பிரதீபா பாட்டீலை ஆதரிக்கிறோம் என்றார்.

அதே போல பிரதீபா பாட்டீலை ஆதரிக்க முடிவு செய்துள்ள பாஜகவின் முக்கிய கூட்டணிக் கட்சியான சிவசேனாவின் நிர்வாக தலைவர் உத்தவ் தாக்கரே கூறுகையில், கடந்த 5 வருட காலத்தில் அப்துல் கலாமின் பணியில் எங்களுக்கு திருப்தியில்லை. அவரது பணியை அவர் நிறைவாக செய்யவில்லை. இருப்பினும் இதில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் பால் தாக்கரேவுக்கே உண்டு என்றார்.

சுயேச்சையாகப் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பைரோன்சிங் ஷெகாவத்தையும் சிவசேனை ஆதரிக்காது என்றே தெரிகிறது.

மராட்டியரான காங்கிரஸ் வேட்பாளர் பிரதீபா பாட்டீலையே ஆதரிக்க அந்தக் கட்சி திட்டமிட்டுள்ளது. இந்த விஷயத்தில் பால் தாக்கரேவின் மனதை மாற்ற பாஜக தலைவர்கள் தீவிரமாக முயன்று வருகின்றனர்.

நன்றி: தட்ஸ்தமிழ்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...