.

Friday, June 22, 2007

இராட்டினத்திலிருந்து மாணவி விழுந்த வழக்கு: பூங்கா உரிமையாளர் தலைமறைவு.

சென்னை அருகே உள்ள எம்.ஜி.எம். டிஸ்ஸிவேர்ல்ட் தீம் பூங்காவில் மாணவி ஒருவர் ராட்சத ராட்டினத்திலிருந்து கீழே விழுந்தது தொடர்பான வழக்கில் அந்த பொழுதுபோக்குப் பூங்காவின் உரிமையாளர் ராஜன் தலைமறைவாகி விட்டார். அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை அருகே முட்டுக்காட்டில் எம்.ஜி.எம். டிஸ்ஸிவேர்ல்ட் பொழுது போக்குப் பூங்கா உள்ளது. இந்தப் பூங்காவுக்கு சமீபத்தில் வந்த அண்ணா பல்கலைக்கழக மாணவிகள் ராட்சத ராட்டினத்தில் ஏறி சுற்றினர்.

அப்போது இருக்கை பெல்ட் சரியாக இல்லாத காரணத்தால் ஒரு மாணவி 30 அடி உயரத்திலிருந்து தூக்கி வீசப்பட்டார். இதில் அவரது இடுப்பு மற்றும் விலா எலும்புகள் முறிந்து போய் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் சமீபத்தில் லட்சுமி என்ற தோட்டத் தொழிலாளி, ராட்டினத்தின் இறக்கை மோதி பரிதாபமாக இறந்தார். இந்த இரு சம்பவங்களிலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவவோ, அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவோ பூங்கா ஊழியர்கள் முன்வரவில்லை.

மாணவி கீழே விழுந்த சம்பவம் தொடர்பாக இரு ஊழியர்களும், பூங்கா மேலாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பூங்காவுக்கு போலீஸார் சீல் வைத்துள்ளனர்.

தற்போது பூங்கா உரிமையாளர் ராஜன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தலைமறைவாகி விட்டார். அவரைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

எம்.ஜி.எம். பூங்காவில் பாதுகாப்பு அம்சங்கள் படு மோசமாக இருப்பதாக போலீஸார் கூறியுள்ளனர்.

தட்ஸ்தமிழ்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...