.

Friday, July 27, 2007

ஜனாதிபதி பதவியேற்பு விழா துளிகள்...

* நாடு சுதந்திரம் அடைந்த 57 ஆண்டுக்குப் பின் முதல்பெண் ஜனாதிபதியாக பதவியேற்ற பிரதீபா பட்டீலுக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இவர் ஜனாதிபதிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்த முதல் தலித் நீதிபதி.

* பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கிய ஜனாதிபதி பதவியேற்பு விழாவுக்கு, பகல் 1.30 மணியில் இருந்தே முக்கிய பிரமுகர்கள் வரத்தொடங்கிவிட்டனர். 1.50 மணிக்கு சோனியா வந்தார். எம்.பி.க்கள் புடை சூழ வந்த உ.பி. முதல் - மந்திரி மாயாவதி, நீண்டகால தோழியை போல் சோனியாவின் தோளில் கைபோட்டு வணக்கம் தெரிவித்தார்.

* கருணாநிதியுடன் வந்த துணைவியார் ராஜாத்தி அம்மாள், மகள் கனிமொழி கருணாநிதி எம்.பி. இருவரும் தலைமை நீதிபதியின் மனைவி மற்றும் பிரதீபா பட்டீலின் நெருங்கிய உறவினர்கள் அருகே அமர்ந்தனர்.

* ஜனாதிபதி தேர்தலில் முக்கிய பங்கு வகித்ததை உணர்த்தும் விதத்தில், முதல் மந்திரிகள் கருணாநிதி, மாயாவதி இருவரும் சோனியாகாந்தியின் அருகில் அமர்ந்து இருந்தனர்.

* முன்னாள் பிரதமர் வாஜ்பாய் சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்டார்.

* அத்வானி 4-வது வரிசையில் அமர்ந்து இருந்தார். பா.ஜனதா தலைவர் ராஜ்நாத்சிங் முதல் வரிசையில் பிரதீபா பட்டீலின் கணவருக்கு அருகில் உட்கார்ந்து இருந்தார்.

* ஜனாதிபதி தேர்தலில் தோல்வி அடைந்த பைரோன்சிங் செகாவத் விழாவில் பங்கேற்றார். முதலில் பிரதமர் மன்மோகன்சிங் அருகில் அமர்ந்த அவர், மத்திய மந்திரி அர்ஜுன்சிங் வந்ததும் அவருக்கு அந்த இடத்தை கொடுத்துவிட்டு அடுத்த இடத்தில் அமர்ந்து கொண்டார்.

* 2.10 மணிக்கு பிரதீபா பட்டீலின் கணவர் தேவிசிங் செகாவத்தை கவர்னர் மாளிகையின் மெய் காப்பாளர்கள் மரியாதையுடன் அழைத்து வந்து பார்வையாளர் முதல் வரிசையில் கடைசி இருக்கையில் அமர வைத்தனர்.

* விழா தொடங்குவதற்கு முன்பு அவரை யாருக்கும் தெரியவில்லை. விழா நிகழ்ச்சிகள் முடிவடைந்து சம்பிரதாய முறைப்படி பிரதீபா பட்டீல் மண்டபத்தின் பிரதான நுழைவாயிலை நோக்கி கைகளை கட்டியபடி மெதுவாக நடந்துசென்றபோது அப்துல் கலாம் உள்ளிட்ட அனைவரும் நேராக நின்றபடி மரியாதை செலுத்தினார்கள்.

மண்டபம் முழுவதும் அமைதி நிலவிய அந்த நேரத்தில் முன் வரிசையில் வெள்ளை நிற உடையில் இருந்த உயரமான தேவிசிங் மட்டும் பின்புறம் திரும்பி பிரதீபா பட்டீல் செல்வதை பார்த்தார். பிரதீபா பட்டீல் வெளியேறிய போது, தேவிசிங்கும் தனக்கு அருகில் இருந்த நுழைவாயிலை நோக்கி மெதுவாக நகர்ந்து சென்றதை பார்க்க முடிந்தது.

* விழா முடிந்ததும் பிரதீபா பட்டீலுக்கு முதலில் வாழ்த்து சொன்னவர் பா.ஜனதாவை சேர்ந்த ராஜஸ்தான் மாநில முதல் - மந்திரி வசுந்தரா ராஜே ஆவார்.

* ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் முதன் முறையாக மாநில முதல்-மந்திரிகள், கவர்னர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது.

* அப்துல் கலாம் ஜனாதிபதியாக பதவி வகித்தபோது ஆற்றும் உரைகளில் திருவள்ளுவரின் திருக்குறளில் இருந்து கவிதை வரிகளை எடுத்துச்சொல்வது வழக்கம். நேற்று உரையாற்றிய புதிய ஜனாதிபதி பிரதீபா பட்டீல் மராத்தி கவிஞர் துக்காராமின் கவிதை வரிகளை மேற்கோள் காட்டினார்.

* அ.தி.மு.க. மற்றும் ம.தி.மு.க. தலைவர்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்கவில்லை.

தினத்தந்தி

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...