.

Friday, July 27, 2007

'டி.வி. சேனல் மன்னிப்பு கேட்க வேண்டும்': ரகசிய கேமரா வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு

லஞ்சம் பெற்றுக்கொண்டு அப்துல் கலாம் உள்ளிட்டோருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்ததை ஜீ (Zee) டிவி சேனல் ரகசிய கேமராவில் படம்பிடித்தது தொடர்பான வழக்கில் முக்கியத் திருப்பமாக, அந்த டி.வி. சேனல் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்கவேண்டும் என உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

இந்த வழக்கில் டி.வி. சேனல் அளித்த விளக்கங்கள் திருப்தியளிக்காததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தைச் சேர்ந்த 3 வழக்கறிஞர்கள் ரூ.40 ஆயிரம் கொடுத்து அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வி.என்.கரே, நீதிபதி பி.பிசிங் மற்றும் மூத்த வழக்கறிஞர் ஆர்.கே.ஜெயின் ஆகியோருக்கு எதிராக கீழ்நீலை நீதிமன்றத்தில் பிடிவாரன்ட் பெற்றதை ரகசிய கேமராவில் படம்பிடித்து 'ஜீ' டி.வி. 2004-ம் ஆண்டு ஒளிபரப்பியது.

இந்தியா முழுவதும் இச் சம்பவம் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. நீதித்துறையின் கீழ்மட்டத்தில் நடக்கும் முறைகேடுகளைகளைச் வெளிக் கொணரவே இந்த ரகசிய கேமரா நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஜீ டிவி தரப்பில் கூறப்பட்டது.

'இந்த ரகசிய கேமரா நடவடிக்கையால், நீதித்துறையின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை முற்றிலுமாகக் கேள்விக்குள்ளானது. இது போன்ற செயல்கள் நடந்திருக்குமோ என நாட்டில் உள்ள அனைவரும் நம்பினார்கள். நீதிபதிகளும் இதற்கு விதிவிலக்கல்ல' என தலைமை நீதிபதி கூறினார்.

நீதித்துறையின் நற்பெயருக்குக் களங்கம் கற்பிக்கவே இந்த ரகசிய கேமரா நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற நீதிபதிகளின் கருத்துக்கு டி.வி. தரப்பில் மறுப்புத் தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தால் மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி விடவேண்டும் என்ற எண்ணம் டி.வி.க்கு இல்லை; மக்களின் நலன் கருதியே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என டி.வி. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

'இந்த நடவடிக்கையால் மக்களுக்கு என்ன நன்மை செய்தீர்கள்' என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

'இந்த நடவடிக்கை மூலம், அதைச் செய்த செய்தியாளர் மிகப் பெரிய குற்றத்தைச் செய்துள்ளார். அவரது செயலால் வாரன்ட் வழங்கிய நீதிபதி இரண்டு ஆண்டுகள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டார். விசாரணையில் நீதிபதி எந்தத் தவறும் செய்யவில்லை என்று தெரியவந்துள்ளது. எந்த ஆவணமும் இல்லாமல் நீதிமன்றத்தில் பிடிவாரன்ட் பெறலாம் என்ற எண்ணம் எழுந்துள்ளது' என நீதிபதிகள் தெரிவித்தனர்.

வாரன்ட் பெற்ற வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பார் கவுன்சிலுக்கு முழு அதிகாரம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினமணி

NDTV.com: SC orders journalist to apologise
The Hindu News :: Cash-for-warrant: SC for unconditional apology from channel

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...