குடியரசுத்தலைவர் தேர்தலில் வென்றுள்ள பிரதீபா பாட்டீலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.கருணாநிதி எழுதிய வாழ்த்துக்கவிதை:
வெற்றி நமதே என வீராங்கனை சோனியா பற்று மிகக் கொண்டு,
ஜனநாயக நெறியில் வாழ்த்திய
அன்பும் பண்பும் இணைந்து நிறைந்த
அருமைச் சகோதரி பிரதிபா வென்றுவிட்டார்.
நாட்டுத் தலைமையேற்றிட நானே தகுதி என்று;
நரிக் குணத்தினரை வீழ்த்தி இதோ வந்து விட்டார்!
அக்கினிக் கணைகள் என்ன;
அவதூறு அம்புகள்தான் என்ன, என்ன!
வக்கனைப் பேச்சுகள் என்ன;
வஞ்சகச் சதிகள் என்ன; என்ன!
கூசாமல் கூறிய குற்றச் சாற்றுகள்,
கோபுர உயரமெனில் - வாய்
பேசாமல் வீசிய அணுகுண்டு
கார்ட்டூன் ஆயிரம், ஆயிரமாம்!
தேர்வு செய்து வேட்பாளர் பெயர் தெரிவித்தவுடன்
திகு திகுவென வயிறு எரிய ஆடித் தீர்த்தனர்!
என்னென்ன அஸ்திரங்கள்!
என்னென்ன மாயங்கள்! மந்திரங்கள்!
இன்னமும் இந்த நாட்டை விட்டகலா,
மதவாத போதனைகள்!
யாகம் வளர்த்துப் பார்த்தார்!
யோகம் கணித்துப் பார்த்தார்!
பொலிந்து நின்ற பூசுரர்கள்
பொட்டென்று போய்விட்டார் தோற்று!
மூன்று லட்சம் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தாலும்
மூன்றாம் அணி மூக்குடைந்து மூலையில் கிடந்தாலும்
முறைப்பு மட்டும் அங்கே போகவில்லை;
பார்த்தீர்களா?
முறைப்பிருந்த பாத்திரத்தில் உறைப்பு
இருப்பது இயற்கை தானே?
உண்மையைச் சொல்லுகிறேன் - இந்த
உறைப்பு என்பதும் ஒரு நடிப்புத்தானே அவர்களுக்கு!
பல்டிகள், கரணங்கள் பல போட்டாலும்
பகுத்தறிந்து திருந்தாத மூடர்களாய்
பக்கத்திலே பலே சகாக்கள் இருக்கும் வரை
பணத்தைத் தீண்டாத பத்தினி நான் என்று
பச்சைப் பொய் சொன்னாலும் -
இச்சையுடன் அவர் பாதம் பணிவார்.
சூதர்கள், சூழ்ச்சிக்காரர், சூனியக்காரர்
சோடித்த மாய வலையில் வீழாது-
மத வாதம் நாடாது -
மகத்தான வெற்றியினைப் பெற்றார்
மாதரசு பிரதிபா என மகிழ்வோம்!
வெற்றித் திரு மஙகையே! நீவிர்
சுற்றித் திரிந்த இந்தியா; இன்றும்மைப்
பற்றி நிற்பதை அறிந்திடுக!
இங்கு நெற்றி வியர்வை நிலத்தில் விழப் பாடுபடும்
வற்றிய வயிறுகள் பல கோடி; அவற்றை
வாழவைக்க வரிந்து கட்டுவோம்;
நாமெல்லாம ஒன்று கூடி!
No comments:
Post a Comment