இதுபற்றி தினமலர் செய்தி பின்வருமாறு:
ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய டாக்டர் முகமது அனீப் விவகாரத்தில் மேலும் ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது. முகமது அனீப்பின் டைரியில் பயங்கரவாதிகள் சிலர் பற்றிய தகவல்களை ஆஸ்திரேலிய போலீசாரே எழுதியுள்ளனர் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பிரிட்டனில் உள்ள பயங்கரவாத அமைப்பை சேர்ந்த கபில் அகமதுவுக்கு மொபைல் போன் சிம் கார்டு கொடுத்ததாக முகமது அனீப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ விமான நிலையம் மீது ஜீப்பை மோதி பெரிய அளவில் விபத்தை ஏற்படுத்த முயற்சித்தவர் கபில் அகமது. அந்த ஜீப்பில் இருந்து தான் சிம் கார்டு கிடைத்ததாக முதலில் தகவல் வெளியானது. பின்னர், கபில் அகமது வீட்டில் இருந்து சிம் கார்டை கைப்பற்றியதாக ஸ்காட்லாந்து யார்டு போலீசார் தெரிவித்தனர். இது ஆஸ்திரேலிய போலீசாருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இத்துடன் புதிய தகவல் ஒன்றும் தற்போது வெளியாகியுள்ளது. பிரிஸ்பேன் விமான நிலையத்தில் கடந்த 2ம் தேதி முகமது அனீப் கைது செய்யப்பட்டார். உடனடியாக அவரிடம் குயின்ஸ்லாண்டு புலனாய்வு சார்ஜென்ட் ஆதம் சிம்ஸ் மற்றும் பெடரல் போலீஸ் அதிகாரி நீல் தாம்சன் ஆகியோர் விசாரணை நடத்தினர். அப்போது முகமது அனீப்பின் டைரியில் பயங்கரவாதிகள் சிலரது பெயர்கள், முகவரி உள்ளிட்ட தகவல்களை போலீசாரே எழுதியுள்ளனர் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. முகமது அனீப்பிடம் நடத்திய விசாரணை தொடர்பாக 142 பக்க அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை உள்ளூர் பத்திரிகைகளிடம் கிடைத்துள்ளன. அதில் இருந்தே போலீசார் இந்த வேலையில் ஈடுபட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விஷயம் ஆஸ்திரேலிய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய அரசுக்கு ஆதரவு அளித்து வரும் தொழிலாளர் கட்சி எம்.பி.,க்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் அலெக்சாண்டர் டவ்னரும் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். முகமது அனீப் விவகாரத்தில் சர்வதேச அளவில் நகைப்பு செயலை செய்து விட்டதாக போலீசாருக்கு ஆஸ்திரேலிய பசுமை கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளது. இத்துடன் முகமது அனீப்புக்கு தற்காலிக விசா வழங்க வேண்டும் என ஆஸ்திரேலிய சட்ட கவுன்சில், குடியேற்ற அமைச்சர் கெவின் ஆன்ட்ரூசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
தினமலர்
No comments:
Post a Comment