.

Saturday, July 28, 2007

காவல்துறையினர் செய்யும் பொதுமக்கள்அலைகழிப்பு களையப்படும். - ஐ.ஜி

விழுப்புரம் சரக காவல்துறை சார்பில் விழுப்புரம், கடலூர் மாவட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு பொதுமக்களிடம் நன்மதிப்பை பெறுவது குறித்த 1 வார கால பயிற்சி தொடக்க விழா சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக லிப்ரா அரங்கில் நடந்தது.

பயிற்சிக்கு அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் ரத்தின சபாபதி தலைமை தாங்கினார். விழுப்புரம் சரக உதவி பொது ஆய்வாளர் (டி.ஐ.ஜி) வன்னிய பெருமாள் வரவேற்றார். விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெரியய்யா, கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் பிரதீப் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பயிற்சியை சென்னை வடக்கு மண்டல பொது ஆய்வாளர் ((ஐ.ஜி)) ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர்,

தமிழக காவல் துறையில் அறிவாற்றல், திறமை, மனப்பாங்கு ஆகிய 3 அம்சங்கள் உள்ளது. அதில் அறிவாற்றல், திறமை போலீசாரிடம் உள்ளது. மனப்பாங்கு மட்டும் தேவைப்படுகிறது.

பொதுமக்களிடம் போலீசார் 2 விதத்தில் மட்டும் நன்மதிப்பை பெற்றுள்ளனர். குற்றங்களை கண்டு பிடித்தல், கட்டுப்படுத்துதல் ஆகியவற்றில் திறமையாக செயல்படுகிறார்கள்.

போலீசார் நடந்து கொள்ளும் முறையைதான் குறைத்து மதிப்பிடுகிறார்கள். நாம் பொதுமக்களிடம் நன்மதிப்பை பெறும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்.

நம்முடைய பணி நல்ல பணி. தமிழ்நாட்டு காவல் துறை மிக உயர்ந்த பணியை செய்துவருகிறது. இதனை யாராலும் மறுக்க முடியாது.

மதவாத, சாதிய, மொழிய, வட்டார சண்டை சச்சரவுகள் அதிகமாக உள்ளது. காவல்துறை மட்டுமே இதனை கட்டுப்படுத்த முடியும். மற்ற வேறு எந்த துறையாலும் கட்டுப்படுத்த முடியாது.

14 மாதம் ஐ.ஜி.யாக வேலைபார்த்து வருகிறேன். தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு முன்னேற்றம் அடைந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தமிழக காவல்துறையை பாராட்டியுள்ளார்.

போலீஸ் நிலையத்துக்கு வரும் பொதுமக்களுக்கு மன கஷ்டம் இல்லாமல் நம்முடைய வேலையை செய்து கொடுக்க வேண்டும். குறிப்பாக முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) போடுவதில் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். இது போன்ற மாற்றங்களை ஏற்படுத்தத்தான் இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது.


இவ்வாறு ராதா கிருஷ்ணன் கூறினார்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...