.

Wednesday, August 29, 2007

சென்னை: குப்பையால் திணறும் மாநகராட்சி

சென்னையில் குப்பை அள்ள ஒப்பந்தம் செய்யப்பட்ட சிங்கப்பூர் ஓனிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தக் காலம் முடிந்து தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தனியார் நிறுவனம், நகர் முழுவதும் மலை போல குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற முடியாமல் தடுமாறி வருகிறது. இதனால் நகரமே நாறிப் போய்க் கிடக்கிறது.

தற்போது நீல் மெட்டல் என்கிற தென் ஆப்பிரிக்க நிறுவனத்திடம் இந்தப் பணி கொடுக்கப்பட்டுள்ளது. ஓனிக்ஸ் நிறுவனம் தனது ஒப்பந்தம் முடிந்ததைத் தொடர்ந்து தனது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வைத்திருந்த குப்பைத் தொட்டிகளை எடுத்துக் கொண்டு போய் விட்டது.

இதனால் கடந்த நான்கு நாட்களாக குப்பைகள் நகர் முழுவதும் பெருகிப் போய் விட்டன. தெரு முனைகள், சாலை ஓரங்கள் உள்பட கிடைக்கும் இடத்தில் எல்லாம் மக்கள் குப்பையை கொட்டி வைத்துள்ளதால் நகரமே நாறிப் போயுள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நீல் மெட்டல் நிறுவனம் தகுந்த ஏற்பாடுகளைச் செய்யாததால், மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். ஓனிக்ஸ் நிறுவனம் மக்கள் வசதிக்காக பெரிய பெரிய குப்பைத் தொட்டிகளை வைத்திருந்தது.

போதிய ஊழியர்களோ, வசதிகளோ இல்லாத பெருகிக் கிடைக்கும் குப்பைகளை அள்ள முடியாமல் நீல் மெட்டல் திணறி வருகிறது. அந்த நிறுவனத்திடம் குப்பையை அள்ள போதிய வாகனங்களும் இல்லை.

செனனை நகரின் முக்கியப் பகுதிகளான அடையாறு, தி.நகர், கோடம்பாக்கம், அண்ணா சாலை, மயிலாப்பூர், மந்தைவெளி, திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை என நகரில் எங்கு பார்த்தாலும் மலை போல குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. கடந்த நான்கு நாட்களாக இந்தக் குப்பைகள் அகற்றப்படாததால் பெரும் துர்நாற்றம் வீசுகிறது.

இன்னும் 10 நாட்களில் நிலைமை சீராகும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சரும், முன்னாள் மேயருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் இன்று காலை முதல் மழை பெய்து வருவதால் குப்பை அள்ளும் பணி முழுவதும் பாதித்து வீச்சத்தை அதிகரிக்கச்செய்தது.

குப்பைகளை அகற்றுவதில் மாநகராட்சி முனைப்புடன் செயற்பட்டாலும் போதிய ஊழியர்கள் இல்லாததால் மாநகராட்சியால் சமாளிக்க முடியவில்லை. நிலைமை மோசமாகி வருவதை அறிந்த சென்னை மாநகராட்சி, யார் வேண்டுமானாலும் குப்பைகளை அள்ளலாம், ஒரு லாரிக்கு ரூ. 500 வாடைகயாக தரப்படும் என திடீரென்று அறிவித்துள்ளது.

மழை பெய்ததால் தேங்கி கிடக்கும் குப்பைகளில் இருந்து கடும் துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

1 comment:

வடுவூர் குமார் said...

போச்சுடா! என்ன நடக்குது நகராட்சியில்?
புதிய நிறுவனம் தன் கட்டமைப்புகளை சரி செய்ய கால அவகாசம் கொடுக்கப்படவில்லையா? இல்லை அதற்கு முன்பே முன் உள்ள நிறுவனத்தை உடனடியாக காலி பண்ண சொல்லிவிட்டார்களா?

-o❢o-

b r e a k i n g   n e w s...