.

Wednesday, August 29, 2007

துணைநகரம் திட்டம்: திரும்பவும் எதிர்க்கும் பா.ம.க

திருப்போரூர் அருகே துணைநகரம் அமைக்கும் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு பா.ம.க. மீண்டும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக செங்கல்பட்டு எம்பி ஏ.கே.மூர்த்தி, எம்.எல்.ஏ.க்கள் திருக்கச்சூர் ஆறுமுகம், து.மூர்த்தி ஆகியோர் திருப்போரூரில் நிருபர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:

கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்த புதிதில் 44 வருவாய் கிராமங்களை உள்ளடக்கி துணை நகரம் அமைக்கப்படும் என அரசு அறிவித்தது.

இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், மக்களிடம் சென்று குறைகளை கேட்டறியுங்கள் என எங்களிடம் கூறினார்.

அதன்பின் ஊரப்பாக்கத்தில் அவர் தலைமையில் கருத்தறியும் கூட்டம் நடந்தது. அதைத் தொடர்ந்து தமிழக அரசு துணை நகர திட்டத்தை கைவிட்டது.

இந்நிலையில், தற்போது திராவிடர் கழக பொதுச் செயலர் வீரமணி துணைநகரத் திட்டம் வேண்டும் என பேசி வருகிறார். அதை மாநில மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமியும் ஆமோதித்துள்ளார்.

முதல்வரும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு, சுகாதாரம் பேண துணை நகரம் அமைக்க வேண்டும் என்றும், இதற்கு அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்காமல் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

பா.ம.கவும் துணை நகரம் அமைப்பதை எதிர்க்கவில்லை. சென்னையில் இருந்து 50 கி.மீ தூரத்தில் உள்ள காஞ்சிபுரத்தில், திருவள்ளூரில் துணை நகரங்கள் அமைக்கலாம். மதுராந்தகம் வட்டத்திலும் அமைக்க லாம்.

ஆனால் திருப்போரூர் ஒன்றியத்தில் மட்டும் துணை நகரம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என அரசுக்கு வேண்டுகோள் வைக்கிறோம். வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்ய மாட்டார்கள் என நம்புகிறோம்.

20 ஆண்டுகளுக்கு முன்பு தாம்பரம், செங்கல்பட்டு மட்டுமே இருந்தன. தற்போது கூடுவாஞ்சேரி, வண்டலூர், கேளம்பாக்கம் என விரிவடைந்துள்ளன.

கருத்தறியும் கூட்டம்: துணைநகர திட்டம் தொடர்பாக பொதுமக்கள் கருத்தறிய வரும் செப். 5-ம் தேதி டாக்டர் ராமதாஸ் கேளம்பாக்கம் வருகிறார்.


துணைநகரம் திட்டத்துக்காக திருப்போரூர் பகுதியில் 25,000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தம் நிலை ஏற்படும். இதனால் தான் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். அடிப்படை போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தனர்.

தினமணி

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...