.

Wednesday, May 23, 2007

வறுமைக் கோட்டுக்குக் கீழே மேற்கு வங்க மாநில ஆளுநர்

மேற்கு வங்க மாநிலத்தில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களின் பட்டியலில் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தியின் பெயர் இடம்பெற்றுள்ளது.

இத் தகவலை அவரே வெளியிட்டார். அப்போது அவர், எனக்கு இந்த அந்தஸ்து கிடைத்திருப்பது தெரிந்தால் எனது தாத்தா மகாத்மா காந்தி மகிழ்ச்சி அடைந்திருப்பார் என்றார்:

ராய்கஞ்ச் நகரில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களின் பட்டியலில் எனது பெயர் இடம்பெற்றுள்ளதை நாளிதழ்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.

மத்திய அரசு உயர் அதிகாரியாகவும், பல்வேறு நாட்டு தூதரகங்களிலும் பணியாற்றி ஓய்வு பெற்ற தனது பேரனின் வருமானம் மற்றும் சொத்து மதிப்பு, ஏழைகளைக் காட்டிலும் குறைவாக இருப்பதை அறிந்தால் எனது தாத்தா மகாத்மா காந்தி மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார். ஒரு மாநிலத்தின் ஆளுநரான தனது பேரன் ஆளுநர் மாளிகையில் வசிக்காமல், ராய்கஞ்ச் போன்ற குக்கிராமத்தில் வசிப்பதை எண்ணி பெருமைப்பட்டிருப்பார்.

இது போன்ற செயலை நகைச்சுவை உணர்வு மிகுந்த அல்லது சமுதாயத்தில் சமதர்மம் மலர வேண்டும் என்று நினைக்கும் ஒருவர்தான் செய்திருக்க வேண்டும். ஆனால் இது போன்ற தவறை அதிகாரிகள் தவிர்த்திருக்கலாம் என்றார்.

உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ராய்கஞ்ச் நகராட்சியின் 9-வது வார்டில் வசிக்கும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்பவர்களில் 23-வது பெயராக ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தில் 6 பேர் இருப்பதாகவும் அதில் உள்ளது. இது குறித்து ராய்கஞ்ச் நகர்மன்றத் தலைவர் மொஹித் சென்குப்தாவிடம் கேட்டதற்கு, பட்டியலில் இடம் பெற்றிருப்பது பிகாரில் இருந்து வந்து துணி வியாபாரம் செய்த கோபாலகிருஷ்ண காந்தி என்பவராக இருக்கலாம் என்றார்.

தினமணி

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...