.

Wednesday, June 6, 2007

வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை ரத்து: ரூ.4.65 லட்சம் அபராதம் - 19 ஆண்டு வழக்கில் தீர்ப்பு

வருமான வரித்துறை வழக்கில் நடிகை வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கு கீழ் கோர்ட் விதித்த 2 ஆண்டு சிறைத் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. அதே நேரத்தில் அவருக்கு ரூ. 4.65 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

1986-ம் ஆண்டு அ.தி.மு.க. நிதியில் இருந்து ரூ.4.65 லட்சம் ரொக்கமாகப் பெற்றார் வெண்ணிற ஆடை நிர்மலா. அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். இத்தொகையை அவருக்கு வழங்கினார்.

10,000 ரூபாய்க்கு அதிகமான தொகையை வாங்கினால் அதை ரொக்கமாக வாங்கக் கூடாது என்றும், காசோலை அல்லது டிராப்ட் மூலமாகத்தான் வாங்க வேண்டும் என்றும் வருமான வரிச் சட்டத்தின் 269-வது பிரிவில் கூறப்பட்டுள்ளது.

எனவே ரூ.4.65 லட்சத்தை நடிகை நிர்மலா ரொக்கமாக வாங்கியது குற்றம் என்று 10.3.1988-ல் வருமான வரித்துறை வழக்குத் தொடர்ந்தது. இவ்வழக்கை விசாரித்த சென்னை எழும்பூர் பொருளாதாரக் குற்றவியல் நீதிமன்றம், நிர்மலாவுக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனையும், அவர் அ.தி.மு.க.விடம் இருந்து பெற்ற ரூ.4.65 லட்சத்தை அபராதமாகச் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியது. 1.10.1997-ல் இத்தீர்ப்பு வெளியானது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நிர்மலா அப்பீல் மனு தாக்கல் செய்தார். நீதிபதி ஏ.சி. ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன் இவ்வழக்கை விசாரித்து செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார். நிர்மலாவுக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்தார். கீழ் கோர்ட் விதித்த அபாரதம் சரியானதே என்று தீர்ப்பளித்தார். இந்த அபராதத் தொகையை ஏற்கெனவே நீதிமன்றத்தில் செலுத்தி விட்டார் நிர்மலா.

தினமணி

1 comment:

dondu(#11168674346665545885) said...

இது பற்றி ஒரு பதிவு போட்டுள்ளேன், பார்க்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

-o❢o-

b r e a k i n g   n e w s...