.

Wednesday, June 6, 2007

மூன்றாவது அணி-ஜெ அறிவிப்பு .

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் முயற்சியால் தேசிய அளவில் 8 கட்சிகள் கொண்ட புதிய கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இக் கூட்டணியில் அதிமுக தவிர முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், மதிமுக, ஓம் பிரகாஷ் செளதாலாவின் இந்திய தேசிய லோக் தள், அஸ்ஸாம் கன பரிஷத், கேரள காங்கிரஸ், ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா ஆகியவை இடம் பெற்றுள்ளன.
தேசிய அளவில் 3வது அணி அமைப்பது குறித்தும், குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து முடிவு செய்யவும் இன்று ஹைதராபாத்தில் இந்தக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களின் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்க தோழி சசிகலாவுடன் நேற்றிரவு ஜெயலலிதா ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றார். வைகோவும் இன்று காலை ஹைதராபாத் சென்றடைந்தார். இன்று காலை சந்திரபாபு நாயுடுவின் வீட்டில் நடந்த இக் கூட்டத்தில் மூன்றாவது அணி உருவானது. இக் கூட்டத்தில் கேரள காங்கிரஸ் சார்பில் யாரும் பங்கேற்கவில்லை. ஆனாலும் கூட்டணியில் சேர்வதாக அக் கட்சி கடிதம் அனுப்பியுள்ளது. இதில் ஜெயலலிதா, நாயுடு, முலாயம் சிங் யாதவ், அவரது வலதுகரமான அமர்சிங், சமாஜ்வாடி கட்சியின் கர்நாடக பிரிவுத் தலைவரும் முன்னாள் முதல்வருமான பங்காரப்பா, ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா சார்பில் பாபுலால் மராண்டி, அஸ்ஸாம் கன பரிஷத் சார்பில் பிருந்தாவன் கோஸ்வாமி, லோக் தள் சார்பில் செளதாலா, வைகோ ஆகியோர் பங்கேற்றனர். சமீபத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவில் ஏற்பட்ட பிளவில் உருவானது தான் ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா என்பது குறிப்பிடத்தக்கது. இக் கூட்டணியின் தலைவர், ஒருங்கிணைப்பாளர், நிர்வாகிகள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் எனவும் ஜெயலலிதா அறிவித்தார். ஜனாதிபதி தேர்தலில் இந்தக் கூட்டணி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்காது எனத் தெரிகிறது. பாஜக சார்பில் சுயேச்சையாக நிறுத்தப்படவுள்ள துணை ஜனாதிபதி ஷெகாவத்தை இக் கூட்டணி ஆதரிக்கக் கூடும். அல்லது தனி வேட்பாளரை நிறுத்தக் கூடும் என்று தெரிகிறது.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...