.

Sunday, June 24, 2007

தமிழ்நாடு: விரைவில் மாலைநேர நீதிமன்றங்கள்.

நாட்டிலேயே முதல் முறையாக குஜராத் மாநிலத்தில், மாலை நேர நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டன. இதையடுத்து தற்போது தமிழகத்திலும் மாலை நீதிமன்றங்கள் தொடங்கப்படுகின்றன.

ஜூலை 3ம் தேதி முதல் மாலை நேர நீதிமன்றங்கள் செயற்பாட்டுக்கு வருகின்றன. முதல் கட்டமாக 11 நீதிமன்றங்கள் அன்றைய தினம் தொடங்கி வைக்கப்படும்.

இதில் சென்னையில் 4, கோவை, நெல்லையில் தலா 2, மதுரை, சேலம், திருச்சியில் தலா ஒரு நீதிமன்றம் செயல்படும். இந்த மாலை நீதிமன்றங்கள் அனைத்து வேலை நாட்களிலும் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும்.

தற்போதைக்கு பெருநகர மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்ற அந்தஸ்தில் செயல்படும் இந்த நீதிமன்றங்கள், சாதாரண வழக்குகளை மட்டும் விசாரிக்கும். தற்போது வழக்கமான நீதிமன்றங்களில் உள்ள நீதிபதிகளே இந்த நீதிமன்றங்களிலும் பணியாற்றுவர். இருப்பினும் அவர்களுக்கு கூடுதலாக பணிப் படி வழங்கப்படும்.

சோதனை அடிப்படையில் தொடங்கப்படும் இந்த 11 நீதிமன்றங்களின் செயற்பாட்டைப் பொருத்து இவற்றின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்படும்.

இதற்கிடையே, நாடு முழுவதும் உள்ள நீதிபதிகளுக்கு மடிக்கணினிகள் ஜூலை 9ம் தேதி வழங்கப்படுகின்றன. தமிழகத்தில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா மடிக்கணினிகளை நீதிபதிகளுக்கு வழங்குவார். மொத்தம் 695 மடிக்கணினிகள் வழங்கப்படவுள்ளன.

தட்ஸ்தமிழ்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...