.

Wednesday, June 20, 2007

ச:தமிழ்நாட்டில் பதின்ம வயது சிறுவன் நிகழ்த்திய அறுவை சிகிட்சை சர்ச்சையில்

கின்னஸ் உலக சாதனை படைக்க வேண்டும் என்று பத்தாம் வகுப்பு மகனை குழந்தைப்பேறு அறுவை நடத்த உதவிய மருத்துவ பெற்றோர்கள் இன்று சர்ச்சையில் மாட்டிக் கொண்டுள்ளனர். மூன்றுமாதங்களுக்கு முன் திலீபன் ராஜ் என்ற பதினைந்து வயது சிறுவன் தன் மருத்துவ தாய்,தந்தையர், மரு. முருகேசன் மற்றும் மரு.காந்திமதி முன்னணியில் மணப்பாறை மதி அறுவை மற்றும் குழந்தைபேறு மருத்துவமனையில் குழந்தைப்பேறு அறுவை சிகிச்சையொன்றை நிகழ்த்த தந்தை அதனை நிகழ்படமாக குறுந்தட்டில் பதிவு செய்தார். இன்று சாதனையாளர் என்று பாராட்டு கிடைக்கும் என்று ்இந்திய இந்திய மருத்துவக் கழகத்தின் சந்திப்பு ஒன்றில் வெளியிட மற்ற மருத்துவர்கள் வியப்பும் வேதனையும் அடைந்தனர். இதற்கு இந்திய மருத்துவக் கழகமும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

NDTV.com: Teenage surgeon triggers outrage in TN

2 comments:

Boston Bala said...

குமுதம் ரிப்போர்ட்டர்
பத்தாவது படிக்கும் மகனை சிசேரியன் செய்ய வைத்த டாக்டர்
(கர்ப்பிணியின் உயிரைப் பயணம் வைத்து சாதனை படைக்க முயன்ற கொடூரம்)
- ஷானு

பத்து மாதம் பொத்திப் பொத்தி வைத்துப் பாதுகாத்த கர்ப்பம்... பிரசவ வலி ஏற்படுகிறது... மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகிறார் அந்த கர்ப்பிணிப் பெண். இயற்கையான முறையில் குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்று டாக்டர்கள் சொன்னதை ஏற்றுக் கொண்டு, அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளச் சம்மதித்து, கையெழுத்துப் போட்டு விட்டு ஆபரேஷன் தியேட்டருக்கு வெளியே டென்ஷனோடு காத்திருக்கிறார் கணவர்.

‘சும்மாவா?... பிரசவம்ங்கிறது ஒரு பொண்ணுக்கு மறுஜென்மம் மாதிரி...’ என்று வெளியில் காத்திருக்கும் பாட்டிகள், தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு காத்திருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு அந்த ஆபரேஷன் தியேட்டருக்குள்... தன்னை நம்பி இரண்டு உயிர்களை ஒப்படைத்த குடும்பத்துக்கு அந்த டாக்டர் எந்தளவுக்கு உண்மையாக இருக்கிறார் என்பது தெரியுமா? தெரியாதுதான் என்றாலும், கடவுள் மேல் வைக்கும் நம்பிக்கைபோல் டாக்டர்கள் மீதும் நம்பிக்கை வைக்கிறார்கள் மக்கள்.

ஆனால், அந்த ஒரு சம்பவத்தில், குறிப்பிட்ட அந்த டாக்டர் என்ன செய்தார் தெரியுமா? தான் தள்ளி நின்று கொண்டு பத்தாவது படிக்கும் தனது மகனை விட்டு அந்த அறுவை சிகிச்சையைச் செய்ய வைத்தார். செய்ய வைத்தது மட்டுமன்றி, அதனை வீடியோ எடுத்து வைத்தும் பெருமைப்பட்டிருக்கிறார் அந்த டாக்டர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நடந்த இந்தச் சம்பவம்தான், திருச்சி வட்டார மருத்துவர்களிடையே (மிக ரகசியமாக விவாதிக்கப்படும்) தற்போதைய ஹாட் டாபிக்.

கடந்த மே மாதம் ஆறாம்தேதி மணப்பாறையில் ஐ.எம்.ஏ.வின் (இந்திய மருத்துவச் சங்கம்) கூட்டம் நடந்தது. வழக்கமாக நடக்கும் இது போன்ற கூட்டங்களில் பக்கத்து மாவட்டங்களில் இருந்து அல்லது பெரிய நகரங்களில் இருந்து பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் டாக்டர்கள் வந்து, தங்கள் துறை ரீதியாக கெஸ்ட் லெக்சர் கொடுப்பார்கள். தாங்கள் சந்தித்த வித்தியாசமான மற்றும் சிக்கலான கேஸ்கள், அவை தொடர்பான வீடியோக்கள், போட்டோக்கள் போன்றவற்றையும் காட்டி விளக்குவார்கள். அதே போல், அந்தப் பகுதியில் இருக்கும் டாக்டர்களும் தாங்கள் சந்தித்த சிக்கலான கேஸ்கள் பற்றி அங்கே பேசுவார்கள். இது, மருத்துவர்கள் புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்கும் துறை ரீதியான தங்களின் அறிவை மேலும் விரிவுபடுத்தி மக்களுக்குச் சேவை செய்யவும் நடக்கும் வழக்கமான ஒரு நிகழ்வு.

அன்று நடந்த கூட்டத்திலும் டாக்டர் கோவிந்தராஜ் என்ற யூராலஜிஸ்ட்டும், டாக்டர் ஜெய்கிஷ் என்பவரும் உரையாற்ற வந்திருந்தார்கள். அதற்கு முன்னதாக, மணப்பாறையைச் சேர்ந்த டாக்டர் முருகேசன் என்பவர் தானும் ஒரு சி.டி.யைக் போட்டுக் காட்ட விரும்புவதாகத் தெரிவிக்கவே, அவர் சந்தித்த ஏதோ ஒரு புதிய கேஸ் போலும் என்று டாக்டர்கள் அனுமதித்தனர். வீடியோவும் ஓடியது.

காட்சியில் கர்ப்பிணிப் பெண்ணின் வயிறு கிழிக்கப்பட்டு, குழந்தை வெளியே எடுக்கப்பட்ட பின்னர், மீண்டும் கர்ப்பப்பை உள்ளே வைக்கப்பட்டு வயிறு தைத்து மூடப்படுகிறது. தொடர்ந்து இதைப் பார்த்த டாக்டர்களுக்கு ஒரே குழப்பம். ‘இது மாதிரியான சிசேரியன்களை டாக்டர்கள் சாதாரணமாகச் செய்வார்களே, இதிலென்ன அதிசயம்?’ என்ற கேள்வியோடு ஒருவரையருவர் பார்த்துக் கொண்டனர்.

அப்போது டாக்டர் முருகேசன் ‘ஏதாவது வித்தியாசமாகத் தெரிந்ததா?’ என்று கேட்க, ‘இல்லையே டாக்டர்’ என்றனர். ‘அந்த அறுவைச் சிகிச்சையைச் செய்தது பத்தாவது வகுப்பு படிக்கும் என் மகன் திலீபன்’ என்று அவர் பெருமையாகச் சொன்னபோது, அங்கிருந்த டாக்டர்களுக்கு அதிர்ச்சியோ, அதிர்ச்சி!

இது சரியா?, சாதனை என்று நினைத்துக் கொண்டு இவர் செய்த இந்தச் செயலுக்கு சட்ட ரீதியாக என்ன தண்டனைகள் கிடைக்கும்? கணவன், மனைவி இருவருமே டாக்டர்களாக இருந்தும் இவருக்கு ஏன் புத்தி இப்படிப் போகிறது? அறுவை சிகிச்சை நிபுணரான இவர் எப்படி மயக்க மருந்து கொடுக்கலாம்? அப்படிச் செய்ததோடு மட்டுமல்லாமல், தான் செய்ததை வீடியோ எடுத்துக் கொண்டு வந்து போட்டுக் காட்டும் இவர், என்ன மாதிரியான ஆள்? இவருக்கு சித்தம் கலங்கிப் போய்விட்டதா? என்று பலருக்கும் பல்லாயிரம் கேள்விகள். அதனால் எழுந்த சலசலப்பு அடங்கியதும், இது தவறு என்று டாக்டர்கள் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்தனர்.

அவர்கள் கண்டித்ததும் கடுங்கோபம் கொண்டார் முருகேசன். ‘உங்களுக்கெல்லாம் பொறாமை. ஒரு சின்னப் பையன் சிசேரியன் செஞ்சுருக்கானேன்னு பாராட்டாமல் இப்படிப் பேசுறீங்களே? நான் என் பையனை கின்னஸ் சாதனைக்கு அனுப்பப் போறேன். நீங்கள்லாம் என்ன பண்றீங்கன்னு தெரியாதா? திருச்சியில இருக்குற டாக்டர்களில் எத்தனை பேர் இண்டர்நேஷனல் கிரிமினல்ஸ்னு எனக்குத் தெரியாதா? நான் ஐ.எம்.ஏ. (மணப் பாறை) மேலேயே கேஸ் போடப் போறேன்’ என்று ஆரம்பித்து கத்தித் தீர்த்து விட்டார்.

ஒரு வழியாக பிரச்னை ஓய்ந்து, கெஸ்ட் லெக்சர் கொடுக்க வந்தவர்கள் கிளம்பிப் போனாலும் முருகேசனின் பேச்சு மணப்பாறையில் உள்ள மருத்துவர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்திவிட்டது. அவருக்கு அறிவுரை சொல்லும் நிலையில் உள்ள அவரது நண்பர்கள், சீனியர்கள் மூலம் ‘மூவ்’ செய்தும் முருகேசன் எந்தவித வருத்தமும் தெரிவிக்காமல் தொடர்ந்து மணப்பாறை ஐ.எம்.ஏ.வை தாக்கி வந்திருக்கிறார். அதனால் மணப்பாறை ஐ.எம்.ஏ. 11.05.07 அன்று தனது அவசரக் கூட்டத்தை நடத்தி முருகேசன் மீது கண்டனத் தீர்மானம் நிறைவேற்றி, அதை சென்னையில் உள்ள ஐ.எம்.ஏ.வுக்கு அனுப்பி வைத்திருக்கிறது.

‘மதி சர்ஜிகல் அண்ட் மகப்பேறு மருத்துவமனை’ என்ற பெயரில் சுமார் பத்து வருடங்களாக மணப்பாறையில் மருத்துவம் செய்து வருகிறார் டாக்டர் முருகேசன். இவரது மனைவியான காந்திமதியும் ஒரு மகப்பேறு மருத்துவ நிபுணர். இருவரும் ஒரே கட்டடத்திலேயே நர்ஸிங் ஹோம் நடத்த, அதன் மாடியிலேயே வீடு என்பதால், முழுநேரமும் தொழிலைக் கவனிக்க முடிந்திருக்கிறது. இவர்களுக்கு திலீபன்ராஜ் என்ற ஒரே மகன். தற்போது பத்தாவது முடித்திருக்கும் இவனுக்குத்தான் பயிற்சி கொடுத்து சிசேரியன் செய்ய வைத்து அதனை வீடியோ எடுத்திருக்கிறார் முருகேசன்.

பொதுவாக மருத்துவர்கள் தங்களது சிகிச்சையில் ஏதேனும் தவறு நேர்ந்து விட்டால், ஒருவரையருவர் காட்டிக் கொடுப்பதில்லை. காரணம், தாங்கள் ஒரே துறையைச் சார்ந்தவர்கள் என்பது மட்டுமன்றி இந்தத் தொழில் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை கெட்டுப் போய்விடக் கூடாது என்பதுதான். அதையும் மீறி இந்த விஷயம் கண்டனக் கடிதம் எழுதுமளவுக்குப் போனது எப்படி என்று மணப்பாறை ஐ.எம்.ஏ. உறுப்பினர்களாக அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட சில மருத்துவர்களிடம் கேட்டோம். சி.டி.யில் தாங்கள் பார்த்ததை எல்லோருமே ஒப்புக் கொண்டனர். “நாங்கள் ஏதாவது பேசினால் தொழில் போட்டியாலும் பொறாமையாலும் இப்படிப் பேசுகிறான் என்று சண்டைக்கு வருவார். அதனால் எங்க பேரைப் போடாதீங்க. விஷயத்தை மட்டும் கேளுங்க’’ என்ற கண்டிஷனோடு சில மருத்துவர்கள் பேசினர்.

“அந்த மீட்டிங்கில் அவர் சி.டி. போட்டுக் காட்டியது உண்மை. அதைப் பார்த்து நாங்கள் அவரைக் கண்டிச்சதும் உண்மை. அதுக்கு அவர் கோபப்பட்டதும் உண்மை. முதலில் அவரைக் கண்டிச்சு விட்டுடலாம்னுதான் நெனைச்சோம். இவர் மேல நடவடிக்கை எடுத்தால் அது அந்தப் பையனோட எதிர்காலத்தையும் பாழாக்கிடும் என்பதாலேயே இனிமேல் இதுமாதிரி செய்யாதீங்கன்னு சொன்னோம். அதுக்கு அவர் `நான் என்ன புளூஃபிலிம் சி.டி.யா காட்டினேன்? என் பையன் சிசேரியன் பண்ணுனதைத்தானே சிடியில காட்டுனேன்’னு சொல்லிட்டார்.

மணப்பாறை ஐ.எம்.ஏ. தலைவர் டாக்டர் நசிருதீன் போனில் பேசுனப்போ, அவரை கம்யூனலா சில வார்த்தைகள் சொல்லி முருகேசன் பேசிட்டார். ‘இந்த ஆர்கனைசேஷனைப் பத்தி நான் கவலைப்படவில்லை. நான் ஐ.எம்.ஏ.வை நம்பி இல்லை’ன்னு சொல்லிட்டார். இத்தனைக்கும் அந்த முருகேசனே ஐ.எம்.ஏ.வோட முன்னாள் செயலாளர்தான். அதனால் அவரைக் கண்டித்துத் தீர்மானம் போட்டு, மேல் நடவடிக்கைக்காக சென்னையில் உள்ள ஐ.எம்.ஏ சென்ட்ரல் கமிட்டிக்கு அனுப்பிட்டோம்’’ என்ற அவர்கள், தங்களின் பெயரை வெளியிட வேண்டாம் என மீண்டும் கேட்டுக் கொண்டனர்.

திருச்சியின் பிரபல மருத்துவரும் ஐ.எம்.ஏ.யின் முன்னாள் மாநிலத் தலைவருமான டாக்டர் அஷ்ரப்பிடம் இது பற்றிக் கேட்டோம். “இந்தச் சம்பவம் பற்றி நானும் கேள்விப்பட்டேன். இதைக் கேட்கவே ரொம்ப ஷாக்கா இருக்கு. இது நூறு சதவிகிதம் தவறான செயல். அதில் சந்தேகமேயில்லை. ஆனால், ஐ.எம்.ஏ.ங்கிறது ரோட்டரி, லயன்ஸ் மாதிரி ஒரு அமைப்புத்தான். அதனால இந்த விஷயத்துல ஐ.எம்.ஏ. நடவடிக்கை எடுக்க முடியாது. தற்போது மெடிக்கல் கவுன்சில் இருக்கு. அவங்கதான் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்கணும். அவர் செஞ்சது சரியா தப்பான்னு முடிவு பண்ணணும்.

மிகச் சிறந்த மருத்துவர்கள்கூட எல்லா ஆபரேஷன்களையும் வெற்றிகரமாக முடிப்பார்கள் என்று சொல்ல முடியாது. அதிலும் ஃபெயிலியர்கள் இருக்கும். எல்லா மனிதர்களுக்கும் எல்லா உறுப்புகளும் ஒரே மாதிரி அமைவதில்லை. அப்படியிருக்கும்போது ஆபரேஷன் பண்ணும்போது ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் அதை ஒரு சின்னப் பையன் எப்படிச் சமாளிக்க முடியும்? அதுவும் மயக்க மருந்து நிபுணர் இல்லாமலே ஓர் அறுவை சிகிச்சை நடப்பதும் தவறு. தாய், குழந்தை இரண்டு உயிர்கள் சம்பந்தப்பட்ட இந்த விஷயத்தில் எப்படி ரிஸ்க் எடுக்க முடியும்? அடுத்தவர்களின் உயிர்களை ஆபத்துக்கு உள்ளாக்கி சிறுவனுக்கு ட்ரெயினிங் கொடுக்கும் அதிகாரத்தை இவருக்கு யார் கொடுத்தாங்க? எம்.பி.பி.எஸ். படித்தவர்கள் சர்ஜரி பண்ணலாம். ஆனால், அவர்கள் செய்வதில்லை. அதற்கென உள்ள எக்ஸ்பர்ட்ஸ்தான் பண்றாங்க. மெடிக்கல் கவுன்சிலுக்குப் போனா இதனுடைய விளைவுகள் மிக மோசமாக இருக்கும்’’ என்றார் நம்மிடம்.

சரி! இந்தப் பிரச்னை பற்றி முருகேசன் என்னதான் சொல்கிறார் என்று தெரிந்து கொள்ள அவரைச் சந்தித்தோம். இரண்டு நாட்கள் அலைச்சலுக்குப் பின்னர் மணப்பாறையில் உள்ள மாண்ட்போர்ட் பள்ளியில் தனது மகன் திலீபன்ராஜை ப்ளஸ் ஒன் சேர்த்து விட்டு வந்த அவரைப் பிடித்தோம். “இங்க லோக்கல்ல உள்ள ஐ.எம்.ஏ. மெம்பர்கள் பதவிப் போட்டியில் இப்படி என் மேல குறை சொல்லுறாங்க. நான் என் மகனுக்கு ஏழாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே ட்ரெயினிங் குடுத்திருக்கேன். சாதனை பண்றதா நெனச்சுத்தான் பண்ணுனேன். லோக்கல் ஐ.எம்.ஏ.யில உள்ளவங்களுக்கு என் டெவலப்மெண்ட்டுல விருப்பம் இல்ல. பத்து வயசுப் பையன் கார் ஓட்டுறான். அமெரிக்காவுல பதினைந்து வயசுப் பையன் டாக்டர் பட்டம் வாங்குறான். பொதுமக்கள், மருத்துவ அமைப்புகள் ஏத்துக்கிட்டாலும் ஏத்துக்காட்டியும் நான் என் மகனுக்கு ட்ரெயினிங் குடுத்திருக்கேன். அவன் சிசேரியன் செய்யும் திறமையுள்ளவன் என்பது உண்மைதான்.

சிலர் இது தவறுன்னு சொல்லுவாங்க. சிலர் இது சரின்னு சொல்லுவாங்க. அதைப்பத்தி நான் கவலைப்படலை. என்கிட்டயும் ஐ.எம்.ஏ. அனுப்புன அந்த லெட்டர் வந்தது; விளக்கம் கேட்டிருந்தாங்க. நான் என் சீனியர் ஒருத்தர்கிட்ட டிஸ்கஸ் பண்ணுனேன். அவர் ‘இப்படிச் சொல்லாதீங்க. நான்தான் சர்ஜரி பண்ணுனேன். என் மகன் பக்கத்துல நின்னான். இன்ஃபெக்ஷன் ஏதும் ஆகக் கூடாதுன்னுதான் அவனுக்கும் க்ளவுஸ் போட்டிருந்தேன்னு சொல்லிடுங்’கன்னு சொன்னாரு. சிடி என்கிட்டதானே இருக்கு. நானா பார்த்துக் குடுத்தாத்தானே. அதுனால பிரச்னை தீர இப்படி எழுதிக் குடுத்துட்டேன். ஐ.எம்.ஏ. ஒண்ணும் ஆத்தரஸைடு பாடி கெடையாது. அதுக்கு ஒரு டாக்டரை கண்ட்ரோல் பண்ண பவர் கெடையாது.

ஒவ்வொரு ஆஸ்பத்திரியில ஆயாதான் டெலிவரியே பாக்குது. நான் ஸ்வீப்பரைக் கூட்டியாந்து ட்ரெயினிங் குடுக்கலை. எல்லாம் ஓர் அதிர்ஷ்டத்துல நடக்குது. நல்லாப் படிக்கிற என் மகனுக்குத்தான் ட்ரெயினிங் குடுத்தேன். எல்லாரும் ஒரு ஆஸ்பத்திரி கட்டிட்டு, தான் டாக்டரா ப்ராக்டிஸ் பண்ணிட்டு தன் புள்ளையையும் டாக்டராக்கி பின்னாளில் தனக்கு ஒரு வாரிசை உருவாக்குறாங்க. நான் அதைச் செய்யக் கூடாதா? நான் மணப்பாறையிலேயே ஹார்ட் ஆபரேஷன் பண்ணுனவன்’’ என்றார் அதிரடியாக.

நல்லமுறையில் மகப்பேறு முடியும் என்று நம்பி, இவரைத் தேடி வந்தவர்களுக்கு ஒரு கத்துக்குட்டிப் பையனை வைத்து இவர் சிசேரியன்கள் செய்தது அந்த கர்ப்பிணிகளுக்கும், உறவினர்களுக்கும் தெரிந்தால் என்ன நடக்கும்? மற்றவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து சாதனைகள் செய்யப் போக, இவரோ மற்றவர்களின் உயிரைப் பணயம் வைத்து தன் மகனை சாதனையாளராக்கி இருக்கிறார். அந்த நிலையில் ஓர் அசாதாரண சூழ்நிலை உருவாகி, தாயின் உயிருக்கோ அல்லது குழந்தையின் உயிருக்கோ ஏதாவது ஆபத்து ஏற்பட்டிருந்தால், இவரும் சர்வ சாதாரணமாக பில்லைப் போட்டு பணத்தை வாங்கிக் கொண்டு பிணத்தை ஒப்படைத்திருப்பார். சம்பந்தப்பட்ட உறவினர்களும் “டாக்டர் நல்ல டாக்டர்தான், விதி முடிஞ்சு போச்சு. என்ன பண்றது?’’ என்று புலம்பிக் கொண்டே வீட்டுக்குப் போயிருப்பார்கள். இது போன்ற டாக்டர்களை என்ன செய்வது?

- ஷானு

மணியன் said...

தமிழ்நாடு அரசு விசாரணைக்கு உத்தரவு இட்டுள்ளது...Govt orders probe into surgery by minor- Hindustan Times

-o❢o-

b r e a k i n g   n e w s...