.

Tuesday, July 3, 2007

தொடரும் வாயாட்டங்கள்: இராமதாசுக்கு கருணாநிதி பதில்

சுயநிதி கல்லூரிகளின் அதிக கட்டணத்தை முன்வைத்து தமிழகத்தில் சுழன்றடிக்கும் அரசியல் அக்கப்போரில் இம்முறை பா ம க நிறுவனரும் தோழமை கட்சியினருமான மருத்துவர் இராமதாஸுக்கு முதலமைச்சர் கருணாநிதி விளக்கமளித்துள்ளார்.

அதில்,

கடந்த ஆட்சியானாலும், இந்த ஆட்சியானாலும் சுயநிதிக் கல்லூரிகள் அதிகக் கட்டணம் வாங்குகின்றார்கள் என்றால், அதன் மேல் நடவடிக்கை எடுப்பதற்கு அந்த சுயநிதிக் கல்லூரிகள் அதிகக் கட்டணம் பெற்றதற்கான ஆதாரம் வேண்டுமல்லவா என்றுதான் அந்தத் துறையின் அமைச்சர் பொன்முடி திரும்பத் திரும்பக் கேட்கிறார்.

டாக்டர் அவர்களே, தானே இதற்கான முயற்சியை எடுத்துக் கொண்டு, இதற்கான ஆதாரத்தை தோழமைக் கட்சி என்ற முறையிலே பெற்றுத் தருவாரானால், அதற்கு சட்டப்படி மாநில அரசினால் எத்தகைய நடவடிக்கை எடுக்க முடியுமோ அதனை எடுக்க நான் தயாராக இருக்கின்றேன் என்ற உறுதியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சுயநிதிக் கல்லூரிகளுக்கு ஆதரவாக இந்த அரசு நடக்கவில்லை. அரசுக்கும், சுயநிதிக் கல்லூரிகளுக்கும் இடையே வழக்கே நடைபெற்று நேற்று தான் அதில் அரசுக்கு சார்பான தீர்ப்பு கிடைக்கப் பெற்றுள்ளது. அந்தத் தீர்ப்பைப் பற்றி கோ.க.மணி இன்று வெளியிட்ட அறிக்கையில் வரவேற்றுப் பாராட்டியிருப்பது மகிழ்ச்சி தரக்கூடியதாகும்.

இந்த அரசைப் பொறுத்த வரையில் மாணவர்கள் நலன்களைக் காப்பதில் யாருக்கும் சளைத்தது அல்ல. மாணவர்களின் நலன்களை விட சுயநிதிக் கல்லூரி உரிமையாளர்களின் சொந்த நலனைப் பற்றி இந்த அரசு என்றைக்கும் கவலைப்பட்டது கிடையாது.

அதனால் தான் பொறுப்பேற்ற முதல் ஆண்டிலேயே நுழைவுத் தேர்வினை ரத்து செய்திருக்கிறோம். அது மட்டுமல்லாமல் மூன்று பல்கலைக்கழகங்களையும் நான்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளையும் தொடங்கியிருக்கிறோம்.

டாக்டர் ராமதாஸ், அமைச்சர் பொன்முடி தவறே நடக்கவில்லை என்று கூறுவதாக பேசியிருக்கிறார். தவறே நடக்கவில்லை என்று அமைச்சர் எப்போதும் கூறவில்லை. நடப்பதற்கான ஆதாரத்தையும், புகாரையும் பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்தால் தானே நடவடிக்கை எடுக்க இயலுமென்று தான் அமைச்சர் பொன்முடி சொல்லி வருகிறார்.

சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் கொள்ளை அடிப்பதாகவும் பா.ம.க. நிறுவனர் கூறுகிறார். சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய் யக் கூடிய அதிகாரம் மத்திய அரசின் அமைச்சர் அன்புமணியின் பொறுப்பிலே உள்ள இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் தானே உள்ளது. அங்கீகாரத்தை அவர் ரத்து செய்ய வேண்டுமென்றாலும், அவரிடம் புகார் கொடுத்தால் தானே நடவடிக்கை எடுக்க இயலும்.

``தோழமையுடன் இருக்கும் நாம், இந்த ஆட்சியிலும் போராட வேண்டுமா?'' என்று டாக்டர் ராமதாஸ் பேசியிருக்கிறார். இதைத் தான் நானும் கேட்கிறேன். ஜெயலலிதா ஆட்சியை விட உயர் கல்வித்துறை அமைச்சகம் மிகவும் மோசமாக உள்ளது என்று அறிக்கை விடுத்தால் அதையும் கேட்டுக் கொண்டு தோழமைக் கட்சி கூறுகிறது என்பதற்காக விளக்கம் சொல்லாமல் இருக்க முடியுமா?

இன்னும் சொல்லப் போனால் ஜெயலலிதா ஆட்சியில் உயர் கல்வித்துறை அமைச்சகம் என்ற ஒன்றை கிடையாது. ஆனால் அதை விட தற்போது மோசம் என்று ஒரு தோழமைக் கட்சியின் தலைவர் வெளிப்படையாக விமர்சனம் செய்வது தான் முறையா?


என்று வினவியுள்ளார்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...