.

Saturday, July 14, 2007

பள்ளி ஆசிரியை: நூதன தண்டனை வேதனை ஆனது.

மாணவிகள் மூவரின் சட்டையைக் கழற்ற சொன்ன ஆசிரியை ஒருவர், இந்த அநாகரிகச் செயலால் கழற்றி விடப்பட்டுள்ளார்.
இதுபற்றிய தினமலர் செய்தி பின்வருமாறு:

சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் ரெக்கார்டு நோட்டுக்கு அட்டை போடாத மாணவிகளை மேல்சட்டையை களையச் சொல்லி ஆசிரியை நூதன தண்டனை அளித்தார். விஷயம் தெரிந்து கொதிப்படைந்த பெற்றோர் ஆர்ப்பாட்டம் செய்தனர். சர்ச்சைக்குரிய ஆசிரியையை தனியார் பள்ளி நிர்வாகம் "டிஸ்மிஸ்' செய்தது.

சென்னை தண்டையார்பேட்டையில் தனியார் பள்ளி உள்ளது. இங்கு ஏழாம் வகுப்பில் மாணவிகள் மோனிஷா, முக்தா, புவனேஸ்வரி படிக்கின்றனர். மூவரும் ரெக்கார்டு நோட்டுக்கு மேல் அட்டை போடாமல் பள்ளிக்கு எடுத்துச் சென்றனர். கோபமடைந்த பள்ளி ஆசிரியை ஜெயந்தி "ரெக்கார்டு நோட்டுக்கு அட்டை போடாத உங்களையும், மேல் சட்டை போடாமல் நிற்க வைத்தால் தான் புத்தி வரும்,' என்று கூறி மூன்று பேரையும் மேல் சட்டையை களையச் சொன்னார்.

அது இருபாலர் படிக்கும் பள்ளி. எனவே, தண்டனையை அவமானமாக கருதிய மாணவிகள் அழுதபடி மறுத்தனர். ஆசிரியை தொடர்ந்து வற்புறுத்தினார். இதனால், மாணவிகள் அழுதபடியே வீட்டிற்கு சென்றனர். பெற்றோரிடம் நடந்த விவரத்தை தெரிவித்தனர். இதனால், அதிர்ச்சியடைந்த மாணவிகளின் பெற்றோர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் தனியார் பள்ளிக்குச் சென்று நியாயம் கேட்டனர். மாணவிகளை அநாகரிகமாக தண்டிக்க முயன்ற ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக் கோரினர். பள்ளி நிர்வாகத்தினர் ஆசிரியையைக் கண்டிப்பதாக கூறியும் பெற்றோர் சமாதானம் அடையவில்லை. "இந்த ஆசிரியை இருக்கும் வரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம். அவரை "டிஸ்மிஸ்' செய்ய வேண்டும்,' என்று வலியுறுத்தினர்.

தகவலறிந்து தண்டையார்பேட்டை போலீசாரும் பள்ளிக்கு வந்தனர். ஆசிரியை ஜெயந்தி "டிஸ்மிஸ்' செய்யப்பட்டதாக பள்ளி நிர்வாகம் அறிவித்ததை அடுத்தே பெற்றோர் அங்கு இருந்து கலைந்து சென்றனர்.

இதே போல் சென்னை முத்தியால்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியர் கண்டித்ததால் மாணவிகள் எலிமருந்து சாப்பிட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

1 comment:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

இது பல பள்ளிகளில் இருக்கும் கொடிய மனப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய தண்டனை. LKG பிள்ளை முதல் 15 வயதுப் பிள்ளைகள் வரை இப்படி தண்டனை கொடுத்து கூனிக்குறுக வைக்கிறார்கள். dismiss செய்தது சரியே. எந்த ஆசிரியருக்கும் இதே தண்டனையைத் தர வேண்டும்.

-o❢o-

b r e a k i n g   n e w s...