.

Thursday, August 23, 2007

தனி இரயில்வே மண்டலம் கோருகிறது கேரளா

தெற்கு இரயில்வேயை இரண்டாக பிரித்து கேரளாவுக்கு தனி மண்டலம் அமைக்க வேண்டும் என்று மத்திய இரயில்வே அமைச்சர் லாலுவிடம் கேரள முதல்வர் அச்சுதானந்தன் திடீர் கோரிக்கை வைத்துள்ளார்.

கேரள மாநிலம் பாலக்காடு ரயில்வே கோட்டத்தை இரண்டாக பிரித்து சேலம் கோட்டம் உருவாக்க வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள வியாபாரிகள், தொழிலதிபர்கள், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் என பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து சேலத்தில் ரயில்வே கோட்டம் அமைக்கப்படும் என்று பார்லிமென்ட்டில் அறிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக ரூ.20 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது. தற்போது தற்காலிக அலுவலகம், சிக்னல்கள் அமைப்பது போன்ற பணிகளுக்காக ரூ.மூன்று கோடியில் பணிகள் முடிந்துள்ளன.

புதிய கோட்டத்தை வரும் செப்டம்பர் 14ம்தேதி தமிழக முதல்வர் கருணாநிதி துவக்கி வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து கேரள எம்.பி.,க்கள் பார்லிமென்ட்டில் அமளி செய்தனர். இதைத்தொடர்ந்து பேசிய ரயில்வே அமைச்சர் லாலுபிரசாத் "இரு மாநில முதல்வர்களுடன் பேசி பிரச்னைக்கு தீர்வு காணப்படும்' என்று கூறினார். இதற்கு தமிழக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.


இதற்கிடையில் டில்லியில் இன்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத்தை கேரள முதல்வர் அச்சுதானந்தன் நேரில் சந்தித்து பேசினார். அப்போது அவர் சேலத்தில் ரயில்வே கோட்டம் தொடங்கப்பட்டால், தெற்கு ரயில்வேயை இரண்டாக பிரித்து கேரளாவுக்கு என்று தனி ரயில்வே மண்டலம் உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகத் தெரிகிறது. இந்த சந்திப்பு குறித்து கூறிய லாலு, இரு மாநில முதல்வர்களுடன் பேச்சு நடத்தவிருப்பதாக தெரிவித்தார்.

தினமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...