.

Friday, August 10, 2007

'முதல்வர் சொல்வதில் உண்மையில்லை' - இராமதாஸ்

விழுப்புரம், ஆக. 10: டாடா டைட்டானியம் டை ஆக்ûஸடு ஆலை அமைவதால் பாதிப்பு ஏற்படாது என்று முதல்வர் கருணாநிதி கூறுவதில் எள்முனை அளவும் உண்மையில்லை, இதனால் பாதிப்பு ஏற்படுமென ஏற்கெனவே அரசு அதிகாரிகள் அறிக்கை சமர்பித்துள்ளனர் என்று பாமக நிறுவனர் டாக்டர் எஸ்.ராமதாஸ் தெரிவித்தார்.

தைலாபுரம் தோட்டத்தில் வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி:

அரசின் பொதுத்துறை நிறுவனம் மூலமாக கேபிள் டி.வி நடத்தலாம் என்று முதல்வர் தலைமையில் அதிகாரிகள் கூட்டம் நடந்ததாக செய்தி வந்துள்ளது. இதனை வரவேற்கிறேன். இந்த ஆலோசனையை முதலில் கூறியவன் என்ற முறையில் முதல்வரின் முடிவை பாராட்டுகிறேன்.

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்குச் சென்று மக்களின் கருத்தை நேரில் அறிந்து வந்தேன். நான் அங்கு செல்வதற்கு முன் பாமகவைச் சேர்ந்த மூவர் குழுவை அங்கு அனுப்பி ஓர் அறிக்கை கேட்டேன். இந்த அறிக்கையையும் மக்களிடம் இருந்து பெற்ற கருத்தையும் கொண்டு நான் ஒரு அறிக்கை தயாரித்துள்ளேன். இந்த அறிக்கை தமிழக முதல்வரிடம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 10) கொடுக்கப்படும்.

டைட்டானியம் தொழிற்சாலை தொடர்பாக கருணாநிதி தொடர்ந்து பல அறிக்கைகளை வெளியிடுகிறார். இன்றும் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஏற்கெனவே அங்குள்ள நிலம் பலருக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது என்கிறார். டாடாவை ஒப்பிடும்போது இந்த நிறுவனங்கள் மிகச் சிறியவை. இவற்றினால் ஏற்படும் பாதிப்பு மிகக் குறைவாகவே இருக்கும். இந்த நிறுவனங்களின் முறைகேடு தடுக்கப்பட வேண்டுமே தவிர அவற்றை முன்னுதாரணமாக காட்டக்கூடாது.

கனிம வளங்களைப் பிரித்தெடுத்தால் அங்குள்ள நிலம் பாலைவனம் ஆகிவிடும் என்பதில் எள்முனை அளவும் உண்மையில்லை என்கிறார் கருணாநிதி. அவர் கூறுவதில் உண்மையில்லை என்று நான் சொல்கிறேன்.

கனிம வளங்களைப் பிரித்தெடுத்தால் இப் பகுதி பாலைவனம் ஆகிவிடும் என்று திருச்செந்தூர் வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பழனியாண்டிக்கு 26-9-2006-ல் அறிக்கை அனுப்பியுள்ளனர்.

இந்த அறிக்கையை அரசு செயலருக்கு மாவட்ட ஆட்சியர் அனுப்பி வைத்துள்ளார். அந்த அறிக்கையில் அப் பகுதி மக்களின் அச்சத்தையும், உண்மை நிலையையும் உணர்த்தும் விதத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுரங்கப் பணிகளை 8 மீட்டர் ஆழத்துக்கு மேற்கொண்டால் வேளாண்மை முற்றிலும் அழிந்து இப் பகுதி பாலைவனமாகி பஞ்ச நிலை ஏற்படும், இப் பகுதி மக்கள் பிழைக்க அகதிகளாகச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்று அரசுக்கு அனுப்பிய அறிக்கையில் மாவட்ட ஆட்சியர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

நிலைமை இவ்வாறு இருக்க மக்களின் கருத்தறிய தமிழக அரசு மூன்று அமைச்சர்களை அங்கு அனுப்பியுள்ளது. இந்த அமைச்சர்கள் டாடா தொழிற்சாலைக்கு ஆதரவாகப் பிரசாரம் நடத்துவதோடு, போட்டி போட்டுக் கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கின்றனர்.

ஏற்கெனவே திருச்செந்தூர் வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் சாத்தான் குளத்தில் சுரங்கம் அமைப்பது தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர். ஆகவே கருத்தறியும் ஆய்வுக் குழு தேவையில்லை.

ஏற்கெனவே இந்த நிலங்கள் எதற்கும் பயன்படாது என்றனர். ஆனால் அங்குள்ள பட்டா நிலங்களில் பெரும்பாலானவை விவசாய நிலங்கள். அதில் புளி, மா, முந்திரி, பனை, தென்னை என எல்லா வகை மரங்களும் உள்ளன.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு கழக உறுப்பினர் -செயலர் சேகர், மாவட்ட ஆட்சியருக்கு எழுதியுள்ள கடிதத்தில் 6 மீட்டர் ஆழத்துக்கு நிலங்களைத் தோண்டும்போது மரங்கள், தாவரங்கள் மற்றும் இயற்கையானவை அழிந்து போகும் என்று எச்சரித்துள்ளார்.

இந்த நிலங்களைப் பாதுகாக்க காற்று அரிப்பு கட்டுப்பாட்டு திட்டம் 1978-ம் ஆண்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது. "டேனிடா' உதவியோடு ஒருங்கிணைந்த நீர்வடிப் பகுதி மேம்பாட்டு திட்டம் ரூ.6.25கோடி செலவில் செயல்படுத்தப்பட்டுள்ளது. மரம் வளர்ப்புத் திட்டம் ரூ.41.72 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வேலையில்லாத காலத்தில் பனை ஏறும் தொழிலாளர்கள் இந்த திட்டத்தில் வேலை செய்துள்ளனர். ஆகவே மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய டாடா நிறுவனத்தின் டைட்டானியம் டை ஆக்ûஸடு தொழிற்சாலை இங்கு அமைவது ஏற்றதல்ல.

ஏற்கெனவே ரிலையன்ஸ் நிறுவனம் சில்லரை வணிகத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், வால்மார்ட் என்னும் பன்னாட்டு நிறுவனம், பார்த்தி நிறுவனத்திடம் இணைந்து சில்லரை மற்றும் மொத்த வணிகத்தில் ஈடுபட உள்ளது. மாநில அரசுக்கு இதைத் தடுக்க அதிகாரம் இல்லை என்று கூறுவதை ஏற்க இயலாது. இதற்கு அனுமதி வழங்கக் கூடாது என உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசு உத்தரவிட வேண்டும் என்றார் ராமதாஸ்.

தினமணியிலிருந்து நேரடி பதிப்பு செய்யப்பட்டுள்ளது

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...