.

Tuesday, March 20, 2007

சென்னையில் ரூ.200 கோடியில் ஐஐஐடி

தமிழகத்தில் ரூ.200 கோடி செலவில், இந்திய தகவல் தொழில்நுட்ப மையத்தை (ஐஐஐடி) நிறுவ மத்திய மனிதவள மேம்பாட்டு துறை முடிவு செய்துள்ளது. இந்த மையத்தில் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி குறித்த கல்வி கற்பிக்கப்படும். இந்த மையத்திற்காக, சென்னை அருகே 100 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.


புதிய மையத்தை நிறுவுவதற்காக வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் மேலக்கொட்டூர் கிராமத்தில் 100 ஏக்கர் நிலத்தை ஐஐடி தேர்வு செய்துள்ளது. தமிழ்நாடு சங்கங்களின் சட்டம் 1957ன் கீழ், இந்திய வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்ப மையம் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலக்கொட்டூரில் தேர்வு செய்யப்பட்டுள்ள 100 ஏக்கர் நிலத்தை ஐஐஐடி பெயருக்கு மாற்றித் தருமாறு, தமிழக அரசுக்கு சென்னை ஐஐடி கடிதம் எழுதியுள்ளது.

புதிதாக நிறுவப்படும், ஐஐஐடி மையத்தில் இளநிலை பட்ட வகுப்பில் 600 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். பாடத்திட்டத்தை வடிவமைக்க, சிறப்புக் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் தலைவராக கான்பூர் ஐஐடி இயக்குனர் சஞ்சய் ஜி.தாண்டே இருப்பார் என்றும், சென்னையில் அமைவதைப் போல், ஜபல்பூரிலும் ஐஐஐடியை நிறுவ, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை திட்டமிட்டுள்ளது என்றும் ஐஐடி வட்டாரங்கள் தெரிவித்தன.

சென்னை அருகே வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் அமைய இருக்கும் இந்த புதிய ஐஐஐடிக்கு, தகவல் தொழில்நுட்பச் சாலையுடன் இணைப்பு ஏற்படுத்தப்படும். மேலும், இந்த மையம் அமையும் பகுதியில் புதிய நகர் ஒன்றை உருவாக்க தமிழக அரசு திட்மிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சென்னையில் இருந்து மேலக்கொட்டூர் வழியாக மாமல்லபுரம் வரை, மின்சார ரயில்களை இயக்கவும் மத்திய அரசு திட்டம் தீட்டியுள்ளது.

தினகரன்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...