.

Tuesday, April 3, 2007

சற்றுமுன்: குமரி மாவட்டத்தில் இன்று பந்த்!

நாகர்கோவில், ஏப்.3-குமரி மாவட்ட மீனவர்களை இலங் கை கடற்படையினர் சுட்டுக் கொன்றதற்குகண்டனம் தெரிவித்து தி.மு.க. கூட்டணி சார்பில் இன்று ஒரு நாள் முழுஅடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப் பட்டது.முழு அடைப்புக்கு மீனவ மக்கள், வியாபாரிகள் சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் முழு ஆதரவு தெரிவித்தன.தி.மு.க. கூட்டணி கட்சிகள் அறிவித்தபடி இன்று குமரி மாவட்டத்தில் `பந்த்'போராட்டம் நடந்து வருகிறது.


மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளும்அடைக்கப்பட்டு இருந்தன. மளிகை கடைகள், வர்த்தக நிறுவனங்கள், டீக்கடைகள்,ஓட்டல்கள் என வியாபார நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன


இதனுடன் தொடர்புடைய ஓரு செய்தி:-


துப்பாக்கி சூட்டில் பலியான மீனவர்கள் குடும்பங்களுக்கு அரசு வேலை: முதலமைச்சர் கருணாநிதி அறிவிப்பு

சென்னை, ஏப்.3-: சிங்கள ராணுவத்தினரின் வெறியாட்டத்துக்கு பலியான 5 மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும். முதல்-அமைச்சர் கருணாநிதி, சட்டசபையில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

சிங்கள கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டதில், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 5 மீனவர்கள் பலியானார்கள். இந்த சம்பவம் குறித்து, தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.


தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் ஜெயக்குமார் (அ.தி.மு.க.), வேல்முருகன் (பா.ம.க.), ஜான் ஜோசப் (மார்க்சிஸ்ட் கம்நனிஸ்டு), சிவபுண்ணியம் (இந்திய கம்நனிஸ்டு) ஆகியோர் பேசினார்கள்.


இந்த விவாதத்திற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் கருணாநிதி பேசியதாவது:-


குமரிக் கடலில் 5 மீனவர்கள் மீன் பிடிக்க சென்ற போது சிங்கள ராணுவ வெறியர்களால் சுட்டு வீழ்த்தப்பட்ட கொடுமை பற்றியும், அவர்களை இழந்த குடும்பங்களுக்கு நாம் ஆற்ற வேண்டிய கடமை பற்றியும் இங்கே உறுப்பினர்கள் விளக்கங்களை தந்திருக்கிறார்கள்.


அவையில் இருக்கின்ற அத்தனை பேருடைய குரலாக, தமிழகத்திலே இருக்கின்ற கோடானு கோடி மக்களின் குரலாக, உலகத்திலே பல்வேறு திசைகளிலே வாழ்கின்ற தமிழ் மக்களின் உள்ளத்தின் பிரதிபலிப்பாகத்தான் இந்தக் குரல்கள் இங்கே ஒலித்ததாக நான் கருதுகிறேன்.


ஏனென்றால் இலங்கையிலே இருக்கின்ற தமிழர்களுக்கு ஆபத்து- இங்கே இருக்கின்ற தமிழர்கள் இலங்கைக்குச் சென்றால் ஆபத்து- இப்படியரு சூழ்நிலை கடந்த பத்தாண்டு காலத்திற்கு மேலாக இருந்து வருகின்றது. இதற்கு விடியலே கிடையாதா என்று தான் அகில உலகத்திலே உள்ள எல்லா நாடுகளும் யோசித்து இதற்கொரு நல்ல தீர்வு நார்வே காணக்கூடும் என்று நம்பி அவர்களும் தூது வந்து பேசிப்பார்த்து, அந்தப் பேச்சு பயனளிக்காத ஒரு சூழ்நிலையில் மீண்டும் என்ன ஆகுமோ என்ற வினாக்குறி விசுவரூபமெடுத்த நிலையில் நாம் இன்றைக்கு இலங்கை ராணுவத்தால் நம்முடைய மீனவர்களுக்கு ஏற்பட்ட தொல்லை குறித்தும், இழப்பு குறித்தும், மரணம் குறித்தும் இங்கே பேசிக் கொண்டிருக்கிறோம்.


அரசியல் வாடையே வீசாமல் நாம் ஒரு நாட்டு மக்கள், இந்திய நாட்டு மக்கள், இந்திய நாட்டிற்கு ஒரு அறைகூவல் இன்றைக்கு இலங்கையிலிருந்து தொடர்ந்து விடப்படுகிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டிய கட்டத்திலே இருக்கிறோம் என்பதை மறந்து விட முடியாது. அப்படிப்பட்ட ஒரு சூழலிலேதான் ஐந்தாறு முறை நம்முடைய மீனவர்கள் தாக்கப்பட்டார்கள், அவர்களுடைய படகுகள் கவிழ்க்கப்பட்டன, ஒருசிலர் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தி வரிசையாக, படிப்படியாக வந்தபோதுதான் நான் சொன்னேன்- இனியும் இதைப் பார்த்துக் கொண்டு எங்கள் கரங்கள் மீன்களை மாத்திரம் பிடித்துக் கொண்டிருக்காது என்று சொன்னேன்.


அதற்குக் காரணம் இனியும் இதைப் பொறுத்துக்கொண்டே இருந்தால், இன்னும் எத்தனை மீனவர்களைப் பலி கொடுக்க வேண்டும் என்பதற்காகத் தான்.


அதுபற்றி பாரதப் பிரதமருக்கு, இந்திய அரசியலிலே ஈடுபட்டிருக்கின்ற மிக முக்கியமான இடத்திலே பணியாற்றிக் கொண்டிருக்கின்ற அலுவலர்களுக்கு, சோனியா காந்திக்கு கடிதங்களை எழுதி இதை உடனடியாகக் கவனிக்க வேண்டுமென்று நான் எடுத்துச் சொன்னபோதெல்லாம், அவர்களும் மிகுந்த அனுதாபத்தோடு அதற்குப் பதிலனுப்பியுள்ளனர்.


உச்சகட்டமாக ஐந்து மீனவர்கள் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தி வந்தவுடன் நான் அமைச்சர் சுரேஷ்ராஜனை அங்கே அனுப்பி வைத்து, ஆவன செய்யுமாறு கேட்டுக்கொண்டேன். அவரும் அங்கே சென்று மீனவ மக்கள் எஞ்சியிருப்போரையெல்லாம் விசாரித்து நிலைமைகளைத் தெரிந்து கொண்டு, அந்த வட்டாரத்திலே உள்ள பாதிரிமார்கள், மற்றுமுள்ள கிறிஸ்தவ பெருமக்கள், மீனவப் பெருமக்கள் - அவர்கள் எடுத்துரைத்த முறையீடுகள், கோரிக்கைகளையெல்லாம் குறித்துக் கொண்டு வந்திருக்கிறார்.


முதலில் அந்தக் கோரிக்கைகளின் நியாயத்தை நாம் புரிந்து கொண்டு அதற்கேற்ப கடமைகளையாற்ற வேண்டும் என்பதற்காக அதை இங்கே எடுத்துக்காட்ட விரும்புகிறேன். காணாமல் போன மீனவர்களைக் கண்டு பிடிக்க இனியேனும் அதிவேக விசைப்படகு மாவட்டத்திற்கென்று ஒன்று தனியாக வேண்டுமென்று கேட்டிருக்கிறார்கள். அதை மத்திய அரசோடு தொடர்பு கொண்டு உடனடியாகக் கொடுப்பதற்கு இந்த அரசு ஆவன செய்யும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய அரசு முன் வராவிட்டால் அந்த இயந்திரத்தின் மதிப்பு எவ்வளவு என்பதை அறிந்து மாநில அரசே அத்தகைய விசைப்படகினை வாங்கி அந்த மீனவர்களுக்கு வழங்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


மீனவர்கள் கடலில் செல்லும்போது அவர்களைத் தொடர்பு கொள்ள இன்றைக்குள்ள விஞ்ஞான தொழில் தட்பம் நிறைந்த கருவி, மற்றும் லைப் ஜாக்கெட் வழங்க வேண்டுமென்று கேட்டிருக்கிறார்கள். அந்தக் கோரிக்கையும் நிறைவேற்றப்படும். காணாமல் போன மீனவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க ஹெலிகாப்டர் வசதியும், தளமும் தேவைப்படுகிறது என்று கேட்டிருக்கிறார்கள். அதுவும் உடனடியாக செய்து தரப்படும்.


தற்போது இறந்தவர்களின் குடும்பத்திலே உள்ள ஒருவருக்கு அரசு வேலை தர வேண்டும் என்ற வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. இதை அமைச்சர் சுரேஷ்ராஜன் தொலைபேசி வாயிலாக எனக்குத் தெரிவித்தவுடன், நான் தலைமைச் செயலாளரைத் தொடர்பு கொண்டு கேட்டேன். அவரும் யார் யாருக்கு வேலை கொடுக்க இயலுமென்று குறித்துக் கொண்டு நாளையே வந்தால் அவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.


கடல் நடுவே எல்லைப் பகுதியில் ரோந்து பணியில் அடிக்கடி கடலோரக் காவல்படை ஈடுபடவேண்டுமென்ற இந்தக் கோரிக்கையை நாம் தனியாக நிறைவேற்ற முடியாது. ஏனென்றால் நாம் மாநில அரசு. மத்திய அரசைக் கேட்டு, வலியுறுத்தி அதில் ஈடுபடுத்த வேண்டும். அப்படி ரோந்துப் பணியில் அடிக்கடி ஈடுபட்டு இந்தச் சிங்கள வெறியர்களைத் தடுத்து நிறுத்த ஆவன செய்யப்படும் என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.


ரோந்து பணி என்றதும் ஒன்று சொல்ல விரும்புகிறேன். ஏதோ நான் ரோந்து பணியில், சிங்கள ராணுவமும், நம்முடைய இந்திய ராணுவமும் சேர்ந்து ரோந்து நடத்தலாம் என்பதை ஒத்துக் கொண்டதாக ஒரு பிரசாரம் செய்யப்படுகிறது. நம்முடைய அமைச்சர் பெருமக்களும், கழக நண்பர்களும் பல்வேறு தோழமைக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் ஒரு நாள் இங்கேயுள்ள சிங்கள தூதுவர் அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்திய போது அவர்களை உள்ளே அழைத்து அந்த அதிகாரி பேசிய நேரத்தில்- அவர் தெரிவித்த கருத்து இது- நாம் கூட்டாக இருவரும் சேர்ந்து ரோந்து பணியாற்றலாம் என்று சொல்லியிருக்கிறோம், இந்திய அரசு இன்னும் அதற்கு சம்மதம் தரவில்லை என்று சொன்னார்.


அதை அமைச்சர்கள் வீராசாமியும், துரைமுருகனும் கேட்டு வந்து, நாங்கள் உள்ளே அழைக்கப்பட்டோம், இப்படிச் சொன்னார்கள் என்று சொன்ன போது, நான் அதற்கு எந்த சம்பந்தமும் தெரிவிக்காமல், நிருபர்களிடம் கூட இதைப்பற்றி முடிவெடுக்கவேண்டியது இந்திய அரசு தான் என்று சொன்னேன். இந்தக் கூட்டு எலியும், தவளையும் செய்து கொண்ட கூட்டாக ஆகிவிடக் கூடாது, அப்படிப்பட்ட கூட்டு முயற்சி, ராணுவங்கள் ஒன்றாக இந்தப் பணியிலே ஈடுபடுவது சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது, இதை மத்திய அரசு தான் தீர்மானிக்க வேண்டுமென்று தான் இறுதியாகச் சொல்லியிருக்கிறேன்.


ஆனால் நான் சொன்னதாக ஒரு கற்பனை இன்றைக்கு நாட்டிலே அவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. அதைப்பற்றி விமர்சனங்கள் எல்லாம் செய்யப்படுகின்றன. நான் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. என் காரியத்தை - நான் நன்மை செய்ய வேண்டுமென்று கருதினால் - தமிழர்களுக்காகப் பாடுபட வேண்டும், தமிழர்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டும், அந்தப் பொறுப்பு இந்த அரசுக்கு உண்டு என்பதை நான் ஏற்றுக்கொண்டு பணியாற்றினால், அதற்கு குறுக்கே யார் வந்தாலும் நான் அதைப்பற்றிக் கவலைப்படாமல் என் வழியிலே சென்று கொண்டே இருப்பேன்.


இப்போது யார் சொன்னார்கள் என்று அல்ல - முதன் முதலில் ஜெயக்குமார் தான் சொன்னார், அந்தக் குடும்பங்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றார்- அதைத் தொடர்ந்து இங்கே உரையாற்றிய நண்பர்கள் எல்லோரும் அதையே சொன்னார்கள். இப்போது இதுபோல சம்பவங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்குவது தான் வழக்கம். விபத்து என்பதற்காக இரண்டு லட்ச ரூபாய் கொடுப்போம். இது விபத்தோடு இல்லை, இது வேண்டுமென்றே திட்டமிட்டு சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்ச்சி. நம்முடைய தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆகவே இதை விபத்தாக கருதாமல், உங்களுடைய வேண்டுகோள்படி, அல்லது உங்களுடைய ஆணைப்படி ஐந்து லட்ச ரூபாய் அந்தக் குடும்பங்களுக்கு தரப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


ஞானசேகரன் பேசும்போது, ஒரு சிறு குழப்பம் ஏற்பட ஏதுவாயிற்று. அவர் சுட்டிக்காட்டியது - சிங்கள ராணுவத்திற்கு இந்திய ராணுவம் கைக்கூலியாக ஆகிவிட்டது என்று வந்துள்ள ஒரு செய்தியைப் பற்றிச் சொன்னார்கள். நான் இன்னொரு பத்திரிகையிலே பார்த்தேன். சிங்கள அதிபர் ராஜபக்சேயின் ஊதுகுழலாக ஆகிவிட்டார் கருணாநிதி என்று அவர்கள் எங்கேயோ சொன்னார்கள். நான் அதை இங்கே படித்துப் பதிவு செய்கிறேன், பரவாயில்லை, நான் சிங்கள சர்வாதிகாரிக்கு ஊதுகுழலாக ஆகி இங்கேயுள்ள தமிழர்களையெல்லாம் வதைப்பேன் என்று அதற்கான காரணமாக, கருவியாக இருக்கிறேன் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. பரவாயில்லை. சொன்னவர் பழைய நண்பர் தான், இன்னும் சொல்லப் போனால் பழைய தம்பி தான் சொல்லியிருக்கிறார், பரவாயில்லை, நான் விட்டு விடுகிறேன்.


ஆனால் ஒன்றை மறந்துவிடக் கூடாது. எல்லோரும் ஒன்றுபட்டு செய்ய வேண்டிய காரியங்கள் சில இருக்கின்றன. சில பொதுப் பிரச்சினைகள் இருக்கின்றன. இப்போது இட ஒதுக்கீடு என்றால் எல்லோரும் ஒன்று பட்டு செய்ய வேண்டிய காரியங்கள். காவிரி பிரச்சினை என்றால் எல்லோரும் ஒன்றுபட்டு செய்ய வேண்டிய காரியங்கள். அது போல தமிழன் கொல்லப்படுகிறான், தமிழனின் எதிர்காலமே கேள்விக்குறியாக உள்ளது என்றால், அவனை மீட்க வேண்டியது எல்லோரும் சேர்ந்து செய்ய வேண்டிய காரியங்கள். இதிலே ஒருவருக்கொருவர் நாம் மோதிக் கொண்டால், பொதுப் பிரச்சினை கெட்டு விடும் என்பதை மாத்திரம் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.


இது ஏதோ சிங்களப் படைக்கு இந்திய ராணுவம் அடிமையாகி விட்டது, கூலியாகி விட்டது என்றால், ஏறத்தாழ நம்முடைய முன்னாள் முதலமைச்சர் அம்மையார் அவர்களைக் கேட்டால் - இது ஏறத்தாழ அந்தக் காலத்து திருமங்கலம் பேச்சுப் போலத் தான் என்று அவர்கள் சொல்லக்கூடும். அதையே கூட உதாரணமாக எடுத்துக் கொண்டு, இன்றைக்கு இருக்கின்ற மத்திய அரசு, அன்றைய முன்னாள் முதலமைச்சர், இதைக் கண்டிக்கவில்லையா, இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லையா, அதே நடவடிக்கை நாங்கள் எடுத்தால் என்ன தவறா என்று கூட மத்திய அரசு கேட்கக் கூடும். அதற்கெல்லாம் இடம் தராமல் இப்போது எது குறி, எது தேவை, எது பிரச்சினை என்பதை மாத்திரம் பார்த்து, அதில் நம்முடைய கவனத்தைச் செலவிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டு இந்த ஒத்தி வைப்பு தீர்மானத்தை இந்த அளவோடு விவாதமின்றி முடித்துக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு கருணாநிதி கூறினார்.

நன்றி:- விகடன் டாட் காம்

4 comments:

ஜோ / Joe said...

தொடர்ந்து புறக்கணிக்கப்படும் மீனவ சமுதாயத்தின் குரலை ஓங்கி ஒலித்த சுரணையுள்ள குமரி மாவட்ட மீனவர்களுக்கும் ,கோரிக்கைகளுக்கு செவிமடுத்த கலைஞர் ஐயாவுக்கும் நன்றி!

திரு/Thiru said...

ஜோ,

சிங்கள இராணுவம் நிகழ்த்திய இந்த படுகொலைகளுக்கு பின்னால் ஒரு சதியே இருக்கிறது. சார்க் மாநாடு நடைபெறும் சூழலில் இந்தியாவை தனக்கு சாதகமாக நகர்த்த சிங்கள இனவெறியாளர்களால் திட்டமிடப்பட்ட படுகொலை இது. இந்திய உளவு நிறுவனங்களும், முன்னாள் உளவு அதிகாரியாக இருந்து தற்போது பலவாய்ந்த பதவியை தனக்குள் வைத்திருக்கும் இந்திய அதிகாரிக்கும் இதில் பங்கு இருக்கலாம் என சந்தேகம் வலுவாக எழுகிறது.

இந்தியாவை இழுத்து வைத்து மீண்டும் பழைய காட்சிகளை அரங்கேற்ற சிங்கள தேசம் செய்யும் சதி. நல்லவேளை தமிழக மக்களும், தலைமையும் இதில் ச்ற்று விழிப்பாக இருக்கிறார்கள்.

ஜோ / Joe said...

//இந்திய உளவு நிறுவனங்களும், முன்னாள் உளவு அதிகாரியாக இருந்து தற்போது பலவாய்ந்த பதவியை தனக்குள் வைத்திருக்கும் இந்திய அதிகாரிக்கும் இதில் பங்கு இருக்கலாம் என சந்தேகம் வலுவாக எழுகிறது. //

இருக்கலாம் .தமிழர் வெறுப்பு என்பது வட இந்தியாவில் மட்டுமல்ல ,தமிழகத்திலும் இருக்கிறது .தினமலர் படித்தால் தெரிந்து கொள்ளலாம் .சமீபத்திய விமானத்தள தாக்குதலை "4 ராணுவ வீரர்கள் பலியான பரிதாபம் " என்று தினமலர் உருகுகிறது .40-க்கு மேல் பச்சிளம் குழந்தைகள் கொல்லப்பட்ட போது கூட தினமலர் பரிதாபப்படவில்லை .நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த துரோகிகளை நினைந்து விட்டால் .ஆனாலும் பெரும்பான்மை தமிழக தமிழர்கள் என்றும் விழிப்போடிருப்பார்கள் .

Anonymous said...

// தினமலர் படித்தால் தெரிந்து கொள்ளலாம் .சமீபத்திய விமானத்தள தாக்குதலை "4 ராணுவ வீரர்கள் பலியான பரிதாபம் " என்று தினமலர் உருகுகிறது .40-க்கு மேல் பச்சிளம் குழந்தைகள் கொல்லப்பட்ட போது கூட தினமலர் பரிதாபப்படவில்லை .நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த துரோகிகளை நினைந்து விட்டால் . //


உண்மை! 100% உண்மை

-o❢o-

b r e a k i n g   n e w s...