.

Monday, April 2, 2007

நாமக்கல், ஈரோடு, களியக்காவிளையில் சரக்குகள் கோடிக்கணக்கில் தேக்கம்

நாமக்கல், ஏப். 2: கேரளத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக, நாமக்கல், ஈரோடு மற்றும் குமரி மாவட்டங்களில் இருந்து இருந்து செல்லும் லாரிகள் ஞாயிற்றுக்கிழமை முதல் களியக்காவிளையில் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளன. இதனால், கோடிக்கணக்கில் சரக்குகள் தேக்கமடைந்து உள்ளன.

கேரள மாநிலத்தில் இயக்கப்படும் அனைத்து லாரிகளிலும் ஏப்.1-ம் தேதி முதல் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்த வேண்டும் என்ற கேரள அரசின் உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கேரளத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

நாமக்கல்: கேரள மாநிலத்தில் லாரிகள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக நாமக்கல் பகுதியில் இருந்து கொண்டு செல்ல வேண்டிய 1.40 கோடி முட்டைகள், கறிக்கோழிகள், காய்கறிகள் தேக்கம் அடைந்துள்ளன.

நாமக்கல்லில் நாளொன்றுக்கு 2.50 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் கேரள மாநிலத்திற்கு மட்டும் 70 லட்சம் முட்டைகள் அனுப்பப்பட்டு வருகிறது.

ஈரோடு: லாரிகள் ஸ்டிரைக்கால் ஈரோடு மாவட்டத்தில் 2 ஆயிரம் லாரி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை நள்ளிரவே இங்கு லாரிகள் நிறுத்தப்பட்டன.

களியக்காவிளையில் சரக்குகள் தேக்கம்: கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து தினமும் 1500 சரக்கு லாரிகள் கேரளம் சென்று வருகின்றன. தற்போது லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளதால், ரூ.50 லட்சம் மதிப்பிலான சரக்குகள் இங்கு தேங்கியுள்ளன.

காய்கறிகள், துணி வகைகள், முட்டைகள் என பல்வேறு பொருள்களை ஏற்றிச் சென்ற லாரிகள் கேரளம் செல்ல முடியாமல் வாளையார் சோதனைச்சாவடியில் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றன. இந்த வேலைநிறுத்தம் காரணமாக வாடகை கட்டணமாக மட்டும் தினமும் ஒரு கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என தமிழக லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தினர் தெரிவித்தனர்.

திருப்பூரில் துணிகள் தேக்கம்: திருப்பூரில் இருந்து ஏற்றுமதி துணிவகைகள் கன்டெய்னர் லாரிகள் மூலம் கொச்சி துறைமுகம் வழியாக பெருமளவில் வெளிநாடுகளுக்கு அனுப்பி வருகின்றனர். தினமும் 150 லாரிகள் வரை துணிகளை ஏற்றிச் செல்லும். இந்த ஏற்றுமதி பணியும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையத்தில் காய்கறிகள் தேக்கம்: கேரளத்தில் லாரி வேலைநிறுத்தம் காரணமாக மேட்டுப்பாளையம் காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகள் தேக்கம் அடைந்துள்ளன. 100 டன்களுக்கு மேலாக காய்கறிகள் தேங்கியுள்ளன.

பொள்ளாச்சியில் லாரிகள் இயங்கவில்லை: பொள்ளாச்சியில் இருந்து தென்னை நார் பெரும்பகுதி கேரளம் வழியாக சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

Dinamani

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...