.

Friday, May 25, 2007

மக்களுக்காக நிலம் தராத விஜயகாந்த் : கருணாநிதி.

சொத்துக்களைக் குவித்தும், மாட மாளிகைகளைக் கட்டியும் வைத்துள்ள சில மனிதர்களுக்கு மக்களுக்காக நிலம் கொடுக்க மனம் வரவில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை மறைமுகமாக சாடியுள்ளார் முதல்வர் கருணாநிதி. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் பாணி அறிக்கை, சொத்துக்களைக் குவித்துக் கொண்டு, மாட மாளிகைகளைக் கட்டிக் கொண்டு இருக்கும் சிலருக்குத்தான் மக்களுக்காக கணிசமான நிலத்தைத் தர மனம் வரவில்லை. சென்னை விமான நிலைய விரிவாக்கத்திற்காக எடுக்கப்படும் நிலங்களுக்குரிய இழப்பீட்டுத் தொகையை அரசு வழங்கும். பெரிய பணக்காரர்களை விட ஏழை மக்களுக்கு எப்போதுமே பெரிய மனசு உண்டு. சிலரைப் போல, சொத்து போகிறதே என்று கூப்பாடு போடுவதில்லை, மக்கள் நலனுக்காக தங்களது நிலத்தை இழக்க எப்போதுமே அவர்கள் தயங்கியதில்லை. அரசியல் உள்நோக்கம் என்று வம்பாக குற்றம் சாட்டுவதும் இல்லை. கலைஞர் டிவி குறித்து ஒரு வாரப்பத்திரிக்கை மிக மோசமாக விமர்சித்திருக்கிறது. திருப்பித் தாக்கும்போது அதைத் தாங்கும் தைரியத்துடன் அந்தப் பத்திரிக்கை இருக்கட்டும். எனது வாழ்க்கையில் விமர்சனங்களை சாதாரணமாகத்தான் எடுத்துக் கொண்டுள்ளேன். அவமானமாக ஒருபோதும் நான் கருதியதில்லை. பொறியியல் கவுன்சிலிங்கை ஒரே இடத்தில் நடத்தினால் அது வேகமாகவும், வெளிப்படையாகவும் இருக்கும் என்பதால்தான் சென்னையில் மட்டும் நடத்த முடிவு செய்யப்பட்டது. வெளியூர்களிலிருந்து சென்னைக்கு கவுன்சிலிங்குக்காக வரும் மாணவர்களின் நலனுக்காக கவுன்சிலிங்குக்கான கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல பேருந்துக் கட்டணத்திலும் பாதி அளவுக்கு சலுகை தரப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்குள் அரசியல் மாற்றம் ஏற்படும் என வைகோ கூறி வருவது வியப்பாக உள்ளது. ஒரு வேளை அவரது கட்சியுடனான தொடர்பை அம்மா இந்த ஆண்டு இறுதிக்குள் துண்டித்துக் கொள்ளப் போகிறாரோ என்னவோ. திருப்பூர் டாஸ்மாக் மதுக் கடை பாரில் ஏற்பட்ட விபத்தில் 29 பேர் இறந்துள்ளனர். இந்த பாரை திமுகவைச் சேர்ந்தவர் நடத்தியதாக கூறுவது தவறு. உண்மையில் அந்த பாரை நடத்தி வந்தவர் மதிமுகவைச் சேர்ந்தவர் என்று பத்திரிக்கைகள் அனைத்திலும் செய்தி வந்துள்ளது என்று கூறியுள்ளார் கருணாநிதி.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...