.

Tuesday, June 5, 2007

அ.தி.மு.க. கட்டிடத்தை இடிக்க நோட்டீசு: அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை - கருணாநிதி விளக்கம்

முதல் அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வருமாறு:-

கேள்வி:-முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா, இந்நாள் முதல் அமைச்சரான உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறாரா?

பதில்:- ஓ! பத்திரிகை அறிக்கை மூலமாக அந்தப் பிறந்த நாள் வாழ்த்தைத் தெரிவித்திருக்கிறார். ஆனால் ஒரு சில பத்திரிகைகள் நாகரீகம் கருதி அந்தப் பகுதியை வெளியிட விரும்பவில்லை. இருந்தாலும் அவர் குறிப்பிட்ட சில பகுதிகளை இந்த நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக நான் கூறுகின்றேன்

"கருணாநிதி நயவஞ்சக மனிதர்'', "இதிகாசங்களில் வரும் கொடூர பாத்திரங்களாகிய துரியோதனன், துச்சாதனன், சகுனி, கம்சன் முதல் இருபதாம் நூற்றாண்டு காலத்து கொடூர ஆட்சியாளர்களாகிய ஜார் மன்னர், ஹிட்லர், முசோலினி, இடி அமீன் ஆகியோர் வரை உள்ள அனைவரின் கொடூரத் தன்மையை ஒருங்கே கொண்ட ஒரு மனிதர் கருணாநிதி'' - இதுதான் ஜெயலலிதா எனக்குத் தெரிவித்த பிறந்த நாள் வாழ்த்து.

அவர் எப்படிப்பட்டவர் என்பதை தமிழ்ச் சமுதாயம் உணர்ந்து கொள்ள இந்த ஒரு அறிக்கை போதுமல்லவா? "வாழ்க வசவாளர்கள்'' என்று அண்ணா சொன்னதுதான் இந்த அறிக்கையைப் படித்தவுடன் என் ஞாபகத்திற்கு வருகிறது.

கே:- சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அனுப்பியுள்ள நோட்டீஸ், எம்.ஜி.ஆர். கட்டிய கட்டிடத்தை இடிப்பதற்காக தரப்பட்டுள்ளது என்பது உண்மைதானா?

ப:- அந்தக் கட்டிடம் எம்.ஜி.ஆர். கட்டியதுதானா என்பது பற்றி இன்றைய ஒரு காலை நாளேடே அந்தக் கட்டிடத்தைப் பற்றிய விவரத்தை எழுதியுள்ளதே! "1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க. பொதுச் செயலாளராக இருந்த போது கட்டப்பட்டது. 1997-98 ஆம் ஆண்டில் கட்டிடம் புதுப்பிக்கப்பட்டது.

அதே இடத்தில் இரண்டு மாடிகள் கட்டப்பட்டன. இது தவிர பத்திரிகையாளர்களுக்கு ஜெயலலிதா பேட்டி கொடுப்பதற்கான அறை போன்றவை, நவீன வசதிகளுடன் சமீபத்தில் கட்டப்பட்டது'' என்று அந்தக் கட்டிடம் பற்றி எழுதியிருப்பதிலிருந்தே, எம்.ஜி.ஆர். வாங்கிய கட்டிடத்தை முதன் முதலாக இடித்து, மாற்றிக் கட்டியது அம்மையார்தான் என்பதும், தற்போது மக்களையும், கட்சித் தொண்டர்களையும் ஏமாற்றுவதற்காகத்தான் எம்.ஜி.ஆர். கட்டிய மாளிகையை இடிக்க நோட்டீஸ் என்று பம்மாத்து செய்கிறார் ஜெயலலிதா என் பதும் தெளிவாகத் தெரியும்.

கே:- ஜெயலலிதா கூறுகின்ற கட்டிடம், உண்மையிலேயே விதிமுறைகளுக்கு மாறாகக் கட்டப்பட்டுள்ளதா?

ப:- சென்னையிலே யார் வீடு கட்டுவதாக இருந்தாலும் அனுமதியின்றி கட்டக்கூடாது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். அதுவும் ஒரு கட்சியின் தலைவருக்கு, முதல்- அமைச்சராகவே இருந்தவருக்கு அது தெரியாதா? அந்தக் கட்டிடம் முறையாக அனுமதி பெற்று கட்டப்பட்டது என்றால், அதை எடுத்து செய்தியாளர்கள் முன்னிலையில் இதோ இருக்கிறது அனுமதிக் கடிதம், அனுமதி பெற்றுத்தான் கட்டியிருக்கிறோம் என்று விளக்கியிருக்கலாம் அல்லவா?

அவர்களே அனுமதி பெறாமலும், பெருமளவிற்கு விதிகளை மீறி கட்டியதாலும்தான், 2000 ஆம் ஆண்டில், வரைமுறைப்படுத்தும் திட்டத்தின்கீழ் தேவையான விவரங்களை கொடுக்காமல், விண்ணப்பத்தை மாத்திரம் தாக்கல் செய்தார்கள். அப்போதே அந்த விண்ணப்பம் போதுமான ஆவணங்கள் இணைக்கப்படவில்லை என்பதால் திருப்பி அனுப்பப்பட்டது.

அதன் பின்னர் 2001 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா ஐந்தாண்டு காலம் ஆட்சியிலே இருந்தாரே, அப்போதே அந்த அனுமதி பெறாத கட்டிடடத்திற்கான அனுமதியை முறைப்படி பெற்றிருக்கலாம் அல்லவா? அப்போதெல்லாம் சும்மாயிருந்து விட்டு, உச்சநீதி மன்றம் இதற்காகவே கண்காணிப்புக் குழு ஒன்றை நீதி மன்ற சார்பில் அமைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட பிறகு, அந்த கண்காணிப்புக் குழுவின் அறிவுரைகள் படி ஒரு நோட்டீஸ் அனுப்பப்பட்டதை வைத்துக் கொண்டு, முண்டா தட்டுவது எந்த வகையில் நியாயம்ப அவர் முண்டா தட்ட வேண்டியது, நீதி மன்றத்தை எதிர்த்துத் தானே தவிர, இதற்கு எந்தவித சம்மந்தமும் இல்லாத தமிழக அரசை எதிர்த்து அல்ல.

கே:- சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் அனுப்பிய நோட்டீஸ் முடிந்த முடிவானதா?

ப:- நோட்டீஸ் கிடைக்கப் பெற்றவர்கள் தங்களிடம் ஆவணங்களும், தகுந்த விளக்கமும் இருந்தால், கண்காணிப்புக் குழுவிடம் அவற்றை விளக்கமாகத் தரலாம். நீதி மன்றம் நியமித்த அந்தக் கண்காணிப்புக் குழுதான் இறுதி முடிவினை எடுக்க வேண்டும். இதிலே அரசுக்கு எந்தவிதமான உரிமையும் கிடையாது. தற்போது ஜெயலலிதா கொடுத்துள்ள அறிக்கை நீதிமன்ற நடவடிக்கையை அவமதிக்கும் செயலாகும்.

கே:- அ.தி.மு.க. அலுவலகத்திற்கு வரப்பெற்ற நோட்டீஸ் சம்மந்தப்பட்ட கோப்பில் முதல் அமைச்சரோ, அந்தத் துறையின் அமைச்சரோ கையெழுத்திட்டுள்ளார்களா? ஏனென்றால் நீங்களே அந்த நோட்டீசை அனுப்பியது போல ஜெயலலிதா அறிக்கையில் சாடியிருக்கிறாரே?

ப:- அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட விவகாரம் எனக்கோ, துறையின் அமைச்சருக்கோ அவரது அறிக்கை வெளியிலே வரும் வரை தெரியாது. நீதி மன்றத் தீர்ப் பின் அடிப்படையில், கண் காணிப்பு குழுவின் முடி வின்படி அனுப்பப்பட்ட நோட்டீஸ்தான் அது. அரசுக்கு உயர்நீதி மன்றக் கண்காணிப்பு குழு சார்பில் தெரிவிக்க வேண்டிய கட்டாயமும் இதில் கிடையாது.

கே:- பொன்விழா, பிறந்த நாள் விழா கொண்டாடுவது பற்றி ஜெயலலிதா ஏன் இந்த அளவிற்கு வயிறு எரிகிறார்?

ப:- ஏதோ ஒரு தனிப்பட்ட நபர், காசு வாங்கிக் கொண்டு, ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்த போது "தங்கக்தாரகை'' என்ற விருது வழங்குவதாகக் கூறிக்கொண்டு, அதனை ஏதோ ஐ.நா. அமைப்பே தேர்ந்தெடுத்ததாகச் சொல்லிக் கொண்டு, கட்சி ஏட்டில் அந்த விழாவிற்காக ஐம்பது பக்கங்களுக்கு மேல் விளம்பரம் கொடுத்தார்கள். சென்னைப் பல்கலைக் கழக மண்டபத்தில் கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து பெருவிழா எடுத்தார்கள். அப்போதெல்லாம் மகிழ்ச்சியாக இருந்த அம்மையாருக்கு இப்போது வயிறு எரியாமல் எப்படி இருக்கும்?

கே:- கழகத்தை அழிப்பேன், சபதம் ஏற்கிறேன், இது சத்தியம் என்றெல்லாம் ஜெயலலிதா சவால் விட்டிருப்பது பற்றி?

ப:- நேற்று கொஞ்சம் "அதிகமாகி'' விட்டது போலும்! ஆம்; கோபம்!.

கொடநாடு எஸ்டேட் ஜெ. உடையது: இந்தப் பாய்ச்சலுக்கு என்ன காரணம். கொடநாட்டில் ரூ.50 கோடி செலவில் மாளிகையை ஜெயலலிதா கட்டி இருக்கிறார். கேட்டால் அது என்னுடயைது அல்ல என்கிறார். அதைத் தொட்டால் தொடாதே என்கிறார். மலைப்பகுதியான கொடநாட்டில் விதிகளை மீறி பங்களா கட்டி இருக்கிறார் என்று அப்பகுதியின் ஒன்றிய பெருந்தலைவர் கடிதம் எழுதி உள்ளார்.

பங்களாவுக்குள் சோதனை நடத்தச் சென்ற அதிகாரிகளையும் அனுமதிக்கவில்லை. மலைப்பகுதியில் பங்களா கட்டியதை கண்டிக்க வேண்டுமா? இல்லையா?

திமுகவை பூண்டோடு ஒழிப்பேன் என்ற ஜெயலலிதாவின் கோபத்தில் இருந்து, கொடநாட்டில் இருப்பது அவரது வீடுதான் என எனக்குத் தெரிகிறது.

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு திமுக நோட்டீஸ் அனுப்பவில்லை. நீதிமன்ற உத்தரவின் பேரில் சி.எம்.டி.ஏ. விடுத்த நோட்டீஸ். இது, நீதிமன்றத்துக்கும், அதிமுகவுக்கும் இடையே உள்ள பிரச்னை என்றார் கருணாநிதி.

மாலைமலர்
தினமணி
சற்றுமுன்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...