.

Wednesday, June 6, 2007

கோயில் யானைக்கு கால்பந்தாட்ட பயிற்சி.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள மன்னார்குடி ராஜகோபால் சுவாமி கோயில் யானை செங்கம்மாவுக்கு கால்பந்தாட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் யானை செங்கம்மா. இதற்கு 17 வயதாகிறது. கடந்த 4 வருடங்களுக்கு முன் ஒரு பக்தரால் இந்த யானை கோயிலுக்கு காணிக்கையாக செலுத்தப்பட்டது. தற்போது இந்த யானை சர்க்கரை நோயால் அவதிப்படுகிறது. சர்க்கரையின் அளவை குறைக்க இந்த யானை பல பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தினந்தோறும் நடைபயிற்சி மேற்கொள்கிறது. செங்கம்மாவை தினமும் பயிற்சிக்கு அழைத்து செல்கிறார்களா என கோயில் நிர்வாகம் கண்காணித்து வருகிறது. நடைபயிற்சி மட்டுமல்லாமல், மாதத்திற்கு 2 முறை கால்பந்து விளையாட்டிலும், ஓய்வு நேரங்களில் மவுத்தார்கன் வாசிப்பதிலும் இந்த யானை ஈடுபடுகிறது. ராஜகோபாலசுவாமி புறப்பாடு நடைபெறும் போது சுவாமிக்கு செங்கம்மா சாமரம் வீசுவது இப்பகுதியில் பிரபலம். மனிதர்களை போல் காலையில் டீ குடிக்கும் பழக்கம் உடையது. தனக்கு டீ கொடுக்காவிட்டால் பாகனையும் இந்த யானை டீ குடிக்க விடாது. செங்கம்மா குழந்தைபோல சுட்டித்தனம் செய்யும் செங்கம்மாவுக்கு மன்னார்குடியில் தனி ரசிகர் கூட்டமே உள்ளது.இதுகுறித்து பாகன் ராஜா கூறும்போது, தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில் யானைகளும் ஆண்டுக்கு ஒருமுறை புத்துணர்வு முகாமிற்காக முதுமலைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இது யானைகளுக்கு போதாது. முகாமிலிருந்து வந்த பிறகும் செங்கம்மாவுக்கு நடை, கால்பந்து உள்பட பல்வேறு பயிற்சிகளை விடாமல் அளித்து வருகிறோம். இதனால் புத்துணர்வு முகாமிற்கு போவதற்கு முன்பே செங்கம்மா புத்துணர்வுடனே பராமரிக்கப்படுகிறது. இதேபோல் அனைத்து கோயில் யானைகளுக்கும் பாகன்கள் பயிற்சி அளிக்கவேண்டும். இதன்மூலம் யானைகள் ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியோடும் இருக்கும், என்றார்.

-o❢o-

b r e a k i n g   n e w s...