.

Thursday, June 14, 2007

'இந்தியன்' விமான ஊழியர் போராட்டம் விலக்கம்!

கடந்த செவ்வாய் இரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இந்தியன் விமான நிறுவனத்தின் 13000 ஊழியர்கள், நிர்வாகத்துடன் உடன்பாடு எட்டியதால் இன்று பிற்பகலில் போராட்டத்தை கைவிட்டனர். விமானப்போக்குவரத்து அமைச்சகமும், விமான நிறுவன நிர்வாகமும் இணைந்து ஊழியர் சங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப்பின் இம்முடிவு எட்டப்பட்டது.

இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்கள் சமீபத்தில் இணைக்கப்பட்டு இந்தியன் என்ற பெயரில் இயக்கப்பட்டு வருகிறது.

இப்போது இந்தியன் ஏர்லைன்ஸ் ஊழியர்கள், ஏர் இந்தியா ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்துக்கு இணையான ஊதியம், பதவி உயர்வு கோரி, 10 ஆண்டு சம்பள பாக்கி கோரி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இவர்களின் கோரிக்கையை ஏற்று சம்பள பாக்கி வழங்கினால் ரூ.800 கோடி செலவாகும் என்பதால் கோரிக்கை ஏற்கப்படவில்லை. எனினும் விமானப்போக்குவரத்து அமைச்சகம், விமான ஊழியர் சங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து 267 கோடி ரூபாய் சம்பளபாக்கி 18 மாதங்களில் தீர்க்கப்பட ஒப்புக்கொண்டுள்ளது

நேற்று முன் தினம் இரவு தொடங்கிய வேலை நிறுத்தத்தால் விமான சேவைகள் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டிருந்தன. சுகாதார பணியாளர்கள் கூட போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததால் விமான நிலையங்கள் நாற ஆரம்பித்தன.

வேலை நிறுத்தத்தால் இந்தியா வரும் வெளிநாட்டு விமானங்களும் பாதிக்கப்பட்டன. விமானங்கள் குறித்து தகவல் தெரிவிக்கும் அலுவலர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் விமானங்கள் குறித்து தகவல் தெரியாமல் பயணிகள் அவதிப்பட்டனர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 27 பேருக்கு தற்கால பணி நீக்கம் உத்தரவு அனுப்பப்பட்டது. உடனே பணிக்கு திரும்பாவிட்டால் லாக் அவுட் போன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய விமான போக்குவரத்துறை எச்சரித்திருந்தது. இவர்களை தற்போது மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ளவும் சம்மதிக்கப்பட்டது.

இந் நிலையில் இந்தியன் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் யூனியனும், இந்திய விமான நிறுவன நிர்வாகமும் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதனால் ஊழியர்கள் தங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.

சென்னையில் இந்த போராட்டத்தால் இரண்டாவது நாளாக இன்று 12 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. மொத்தம் 28 விமானங்களில் 16 மட்டுமே இயக்கப்பட்டன. 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

சென்னை-டெல்லி, சென்னை-மும்பை, சென்னை-ஹைதராபாத் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. வெளிநாட்டு விமானங்களில் சென்னை-சிங்கப்பூர் மற்றும் சென்னை- கொழும்பு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...