.

Thursday, June 14, 2007

குடியரசுத்தலைவர் : பெண் வேட்பாளர் ?

குடியரசுத் தலைவர் தேர்தலில் பெண் வேட்பாளரை நிறுத்தலாம் என்ற முடிவுக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும், இடது சாரிக் கட்சிகளும் வந்துள்ளதாக தெரிகிறது. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. ஆனால் இதுவரை முக்கிய அரசியல் கூட்டணிகள் வேட்பாளரை இறுதி செய்யாமல் உள்ளன. குறிப்பாக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும், அதற்கு ஆதரவாக உள்ள இடது சாரிக் கூட்டணிக்கும் இடையே வேட்பாளரை இறுதி செய்வதில் பெரும் குழப்பமும், பூசலும் நிலவுகிறது. மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலை காங்கிரஸ் கட்சி பரிந்துரைத்தது. ஆனால் அதை இடதுசாரிகள் ஏற்கவில்லை. தேசியவாத காங்கிரஸும் அதை ஏற்கவில்லை. தற்போது முக்கிய கூட்டணிக் கட்சியான திமுகவும் ஏற்கவில்லை என்று தெரிகிறது.
அதேபோல கரண் சிங், பிரணாப் முகர்ஜி, சுசில்குமார் ஷிண்டே ஆகியோரின் பெயர்களையும் இடதுசாரிகள் நிராகரித்துவிட்டன. இந்த நிலையில் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், இடதுசாரித் தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினர். முதல்வர் கருணாநிதியும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் சிவராஜ் பாட்டீலை நிறுத்தும் முடிவைக் கைவிட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஒத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் இன்னொரு மத்திய அமைச்சரான சுஷில் குமார் ஷிண்டேவையும் நிறுத்துவதில்லை என்றும் தீர்மானிக்கப்பட்டது. இவர்களை விட்டு விட்டு பெண் வேட்பாளர் ஒருவரை நிறுத்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும், இடதுசாரித் தலைவர்களும் கூட்டாக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. ராஜஸ்தான் ஆளுநர் பிரதீபா பாட்டீல், பிரபல காந்தியலாளரும், சமூக சேவகியுமான நிர்மலா தேஷ்பாண்டே உள்ளிட்ட சிலரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து இடது சாரித் தலைவர் ஒருவர் கூறுகையில், பெண் வேட்பாளரின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும். இன்று இரவு 7 மணிக்கு பிரமதர் இல்லத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர்கள், இடது சாரித் தலைவர்கள் முக்கிய ஆலோசனை நடத்துகின்றனர். அதன் பின்னர் வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்படும். அனைவருக்கும் வியப்பளிக்கும் வகையிலான பெயர் இந்தக் கூட்டத்தின் இறுதியில் வெளிப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...