நாகப்பட்டினம், ஜூலை 7: ஜீவஜோதி கடத்தல் வழக்கில் சென்னை சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால் உள்ளிட்ட 6 பேர் மீது நாகை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இது குறித்த விசாரணைக்காக ஓட்டல் அதிபர் ராஜகோபால் உள்ளிட்ட 6 பேர் நாகை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜராயினர்.
ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலைவழக்கில் ராஜகோபால் முக்கிய குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. கணவரை இழந்த ஜீவஜோதி, நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள தேத்தாகுடியில் தனது பெற்றோர் வீட்டில் தங்கியிருந்தார். கடந்த 7.7.2003 -ம் தேதி ராஜகோபால் உள்ளிட்ட 6 பேர் தேத்தாகுடிக்கு வந்து சாந்தகுமார் கொலை வழக்கில் தங்களுக்கு ஆதரவாக சாட்சியம் அளிக்குமாறு ஜீவஜோதியை வற்புறுத்தியுள்ளனர்.
ஜீவஜோதி மறுத்ததால் அவரை கடத்திச் செல்ல முயற்சித்தனர். தடுக்க முற்பட்ட கிராம மக்களை கொலை செய்து விடுவதாக மிரட்டியதுடன் தாக்குதலிலும் ஈடுபட்டனர். தன்னை கடத்திச் சென்று கொலை செய்ய முயன்றதாக வேதாரண்யம் காவல் நிலையத்தில் ஜீவஜோதி புகார் மனு அளித்தார். கொலைமுயற்சி உள்பட 7 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் இந்த வழக்கு கடந்த ஆண்டு விசாரணைக்கு வந்தது. நீதிபதி தங்கராஜ் இந்த வழக்கை கொலைமுயற்சி பிரிவுக்குப் பதிலாக கொலை மிரட்டல் பிரிவாக மாற்றி விசாரணை மேற்கொண்டார்.
இதனை அரசு தரப்பில் ஆட்சேபித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கொலைமுயற்சி பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம் இந்த வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றவும் உத்தரவிட்டது.
இதனடிப்படையில் இந்த வழக்கு கடந்த ஏப். 27 -ம் தேதி நாகை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, நீதிபதி ரவீந்திரன் உத்தரவின் பேரில் இந்த வழக்கை மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி சேதுமாதவன் விசாரித்து வருகிறார்.
வரும் 23 -ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்துள்ளதாகவும் அன்றைய தினத்தில் இருந்து சாட்சிகள் விசாரணை தொடர்ந்து நடைபெறும் எனவும் நீதிபதி சேதுமாதவன் அறிவித்தார்.
தினமணி
Saturday, July 7, 2007
ஓட்டல் அதிபர் ராஜகோபால் உள்பட 6 பேர் மீது நாகை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுப் பதிவு: ஜீவஜோதி கடத்தல் வழக்கு
Labels:
சட்டம் - நீதி,
சமூகம்,
தமிழ்நாடு,
மரணம்
Posted by
Boston Bala
at
4:50 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment