.

Saturday, July 7, 2007

உ.பி. பேரவையில் பெரியார் பற்றி விவாதம்

உத்தரப்பிரதேச சட்டப் பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது பெரியார் குறித்து விவாதம் நடைபெற்றது.

'பெரியார் பற்றி பட்ஜெட் உரையில் மாயாவதி குறிப்பிட்டிருக்கிறார்; பிராமணர்களின் ஆதிக்கத்துக்கு எதிராகக் குரல் கொடுத்தவர் பெரியார். அவரைத் துணை கொள்வது உத்தரப்பிரதேச மாநில பிராமணர்களின் நலனுக்கு ஆபத்தாக முடியும்' என்று எச்சரித்தார் லால்ஜி தாண்டன் (பாஜக).

'நாட்டின் தென் பகுதியில் பிராமணர்களின் ஆதிக்கத்தை ஒழிப்பதையே தனது குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டவர் பெரியார். அவர் தீவிர பிராமண எதிர்ப்பாளர். பட்ஜெட் உரையில் பாபா சாஹேப் பீம்ராவ் அம்பேத்கர், நாராயண குரு, சாஹுஜி மகராஜ் ஆகியோரின் பெயர்கள் இடம்பெறுவதில் ஆட்சேபம் இல்லை. இந்த விஷயத்தில் மாயாவதி தனது நிலை என்ன என்று விளக்க வேண்டும். உத்தரப்பிரதேச மாநில பிராமணர்கள் மாயாவதியை நம்பி வாக்களித்திருக்கிறார்கள்' என்றார் தாண்டன்.

மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் ராகேஷ் தர் திரிபாடி இதை வன்மையாக ஆட்சேபித்தார். 'பிராமணர்களை பகுஜன் சமாஜ் கட்சி கௌரவப்படுத்தியிருப்பதால்தான் ஆளுங்கட்சியின் முதல் வரிசையில் இப்போது அமர்ந்திருக்கிறேன்' என்று அவர் சுட்டிக்காட்டினார். 'பாரதீய ஜனதாதான் பிராமண எதிர்ப்புக் கட்சி, அது உத்தரப்பிரதேசத்தில் இதுவரை எந்த பிராமணரையும் முதலமைச்சராகத் தேர்வு செய்ததே இல்லை' என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

பிராமணர்களைத் தனது அரசியல் நோக்கத்துக்காகத்தான் பகுஜன் சமாஜ் பயன்படுத்திக் கொள்கிறதே தவிர அவர்களை உண்மையில் கௌரவப்படுத்த அல்ல என்று சுநீல் சர்மா (பாஜக) குறிப்பிட்டார். தலித் தலைவர்களுக்கு மாயாவதி மரியாதை தந்து பெருமைப்படுத்துவதைப் போல, பகுஜன் சமாஜ் கட்சியின் பிராமண உறுப்பினர்களும் தங்களுடைய சமூகத் தலைவர்களைப் பெருமைப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தினமணி

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...