.

Monday, July 16, 2007

துணை ஜனாதிபதி வேட்பாளர் தேர்வில் அரசியல் கட்சிகள் தீவிரம்: பா.ஜனதா வேட்பாளராக நஜ்மா ஹெப்துல்லா?

துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வதில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி உள்ளன. பா.ஜனதா சார்பில் நஜ்மா ஹெப்துல்லா வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி மேல் சபை முன்னாள் துணை தலைவரான நஜ்மா ஹெப்துல்லா பா.ஜனதா வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்று அந்த கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நஜ்மா, கடந்த 2004-ம் ஆண்டில் பா.ஜனதாவில் இணைந்தவர்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி-இடதுசாரி அணியின் சார்பில் துணை ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் நிறுத்தப்படலாம் என்று பேச்சு அடிபடுகிறது. அத்துடன் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ள பெண் வேட்பாளர் பற்றிய காங்கிரசின் பிரசாரத்தை முறியடிக்கும் வகையில் நஜ்மா பெயர் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

என்றாலும், கூட்டணி கட்சியினரை கலந்து பேசிய பிறகுதான் அதுபற்றி இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் பா.ஜனதா தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியை பொறுத்தவரை, துணை ஜனாதிபதி பதவி இடதுசாரி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. ஆனால், அந்த வேட்பாளர் எந்த கட்சியை சேர்ந்தவர், அரசியல்வாதியா? என்பதுபோன்ற கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.

கம்யூனிஸ்டுகள் தேர்வு செய்யும் முஸ்லிம் வேட்பாளருக்கு காங்கிரஸ் ஆதரவு: துணை ஜனாதிபதி தேர்தலில் புதிய முடிவு

கம்யூனிஸ்டு கட்சிகள் முஸ்லிம் ஒருவரை வேட்பாளராக நிறுத்தும் திட்டத்தில் உள்ளனர். கல்வித் துறையில் புகழ்மிக்க ஒருவரை இந்த பதவிக்கு கொண்டுவரவேண்டும் என்று விரும்புகின்றனர். இதில் ஜாமியா பிலியா பல்கலைக் கழக துணை வேந்தர் முசிருல் ஹசன், வரலாற்று அறிஞர் இர்பான் ஹபீப் ஆகியோர் பெயரை முன் வைத்து உள்ளனர்.

இதில் முசிருல் ஹசனுக்கு முன்னுரிமை கொடுத்து வருகின்றனர். அவருக்கு காங்கிரஸ் கட்சிகாரர்களிடமும் நல்ல செல்வாக்கு உண்டு. சமீபத்தில் கூட அவர் காந்தி, நேரு பற்றிய புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டார்.

இந்த நிலையில், டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் ஏ.பி.பரதன், தான் துணை ஜனாதிபதி வேட்பாளர் என்று வெளியான தகவலை திட்டவட்டமாக மறுத்தார்.

துணை ஜனாதிபதி தேர்தலுக்கு பரதன் பெயர் பரிசீலிக்கப்பட்டபோதிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு அதில் விருப்பம் இல்லை என்பதால் அந்த முயற்சி கைவிடப்பட்டதாக தெரியவந்துள்ளது.

"துணை ஜனாதிபதி வேட்பாளர் அரசியல்வாதியாக இருக்கவேண்டும் என்பது அல்ல. வரலாற்று அறிஞராகவோ, கல்வி மேதையாகவோ, அல்லது பொருளாதார வல்லுனராகவோ இருக்கலாம் என்று பிரகாஷ் கரத் டெலிவிஷன் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார்.

மாலைமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...