.

Friday, August 31, 2007

இலங்கையில் இன்று --- ஆகஸ்ட் 31, 2007

கடந்த சில வருடங்களில் 5700 க்கு மேலானோர் காணாமல் போயுள்ளனர்


இலங்கையில் கடந்த சில வருடங்களில் காணமல் போன 5700 க்கு மேற்பட்டோர் பற்றி ஐக்கிய நாடுகள் சபை ஆராய்ந்து வருகிறது.


2007ல் மட்டும் நூற்றுக்கணக்கானோர் நாடு பூராவும் காணமல் போயுள்ளனர் என சர்வதேச மன்னிப்புச் சபை [Amnesty International (AI)] தெரிவித்துள்ளது.


அதிகமான ஆட்கடத்தல்கள் இலங்கை இராணுவத்தினராலும் அதனுடன் இணைந்து செயற்படும் துணைக் குழுக்களாலுமே நடாத்தப்படுகிறது எனவும் இதில் காணாமல் போனோர் தமிழர்களும் முஸ்லிம்களுமே ஆவர் எனவும் பல மனித உரிமை அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.



ஆதாரம் : BBC சிங்கள சேவை.


இலங்கை நாணயத்தின் பெறுமதி வரலாறு காணாத வீழ்ச்சி


இலங்கை நாணயத்தின் பெறுமதி வரலாறு காணாத [all time low] வீழ்ச்சியடைந்துள்ளது.
ஒரு அமெரிக்க டொலரின் பெறுமதி 113.36 இலங்கை ரூபாய்களாக நாணய மதிப்பு குறைந்துள்ளது.


இலங்கை நாணயத்தின் பெறுமதி வரும் வாரங்களில் ஒரு அமெரிக்க டொலர் 118 இலங்கை ரூபாய்கள் எனும் வகையில் வீழ்ச்சியடையலாம் என பொருளாதார ஆய்வாளர்கள் [economic analysts ]தெரிவித்துள்ளார்கள்.



ஆதாரம் : Daily Mirror




கொழுப்பில் உள்ள பிரிட்டிஸ் தூதுவரலாயத்தின் சில சேவைகள் சென்னைக்கு இடமாற்றம்


கொழுப்பில் உள்ள பிரிட்டிஷ் தூதுவராலயத்தின் விசா வழங்கும் சேவை மற்றும் விசா விண்ணப்பங்கள் ஏற்கும் சேவை போன்றன சென்னைக்கு மாற்றப்படவுள்ளதாக கொழுப்பிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளேடான டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இது பற்றி இன்னும் பிரிட்டிஷ் அதிகாரிகள் இறுதி முடிவு எடுக்கவில்லையெனவும் அச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது இவ்வாறிருக்க, பிரிட்டிஷ் தூதரகம் இச் சேவைகளை கொழுப்பில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக டெய்லி மிரர் தெரிவிக்கிறது.


கொழும்பில் உள்ள Visa Facilitation Service (VFS) எனும் தனியார் நிறுவனம் வேறு பல நாட்டு தூதரகங்களுக்காக இச் சேவையை ஏற்கனவே செய்து வருவது குறிப்பிடத்தக்கது.



ஆதாரம் : டெய்லி மிரர்


அரசு அனுசரணையுடன் ஆட்கடத்தல், ஆசியாவில் இலங்கை முதலிடத்தில்!


பலவந்தமான ஆள் கடத்தல்களுக்கு நேர்முகமாகவும் மறைமுகமாகவும் அரசாங்கங்கள் அனுசரணை வழங்கும் ஆசிய நாடுகளில் இலங்கை முதலிடம் வகிக்கிறது.


அரசாங்கத்துக்கும் அதன் சார்பு அமைப்புகளுக்கும் எதிரானவர்களே கடத்தப்பட்டு காணாமற் போகச் செய்யப்படுகிறார்கள். இவற்றில் ஈடுபடுவோருக்கு தண்டனை விலக்கு அளிக்கப்படுகிறது.


இவ்வாறு அறிவித்துள்ளது, ஹொங்ஹொங்கை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக் குழு.



ஆதாரம் : உதயன்




"இலங்கையில் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறது பிரிட்டன்" - இலங்கை அரச உயர் அதிகாரி


இலங்கையில் மகிந்த ராஜபக்சாவின் ஆட்சியைவிட ரணில் விக்கரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியையே பிரிட்டன் விரும்புவதாக இலங்கை அரசின் சமாதனச் செயலகத்தின் செயலர் இரஜீவ விஜேசிங்கா குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்குலக நாடுகள் தமது நலன்களுக்காக மனித உரிமை என்ற போர்வையில் இலங்கை மீது அழுத்தங்களைத் திணிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.


ஆதாரம்: IANS



இலங்கை விமானப்படைத் தாக்குதலில் காலை இழந்த 6 வயதுச் சிறுவனுக்கு பிரபாகரன் நிதியம் உதவி



தை 2007 ல் மன்னார் மாவட்டத்தில் இலங்கை விமானப் படைகள் தாக்கியதில் 14 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 34 பேர் காயமடைந்தும் இருந்தனர். இத் தாக்குதலில் ஒரு 6 வயதிச் சிறுவன் ஒரு காலை இழந்தான். அவனின் தந்தையும் இத் தாக்குதலில் காலை இழந்திருந்தார். இச் சிறுவனின் 4 வ்யதுச் சகோதரன் இத் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தான்.
இச் சிறுவனுக்கு விடுதலைப் புலிகளின் தலைவர் திரு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் பிரபாகரன் நிதியத்திலிருந்து [Pirapaharan’s Trust Fund] 100,000 ரூபாய்களை வழங்கியுள்ளார்.


ஆதாரம் : Tamilnet



மன்னாரில் 3 இளைஞர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.


இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணியளவில் மன்னார் நகரில் மூன்று இளைஞர்கள் இனந்தெரியாத ஆயுததாரிகளால் கடத்தப்பட்டுள்ளனர். கடத்தப்பட்டவர்களில் இருவர் முஸ்லிம்கள், மற்றையவர் தமிழர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஆதாரம் : Tamilnet



மட்டக்களப்பிலிருந்து தமிழ்மக்களை விரட்டிய பின் சனத்தொகைக் கணிப்பீடு : தமிழ் நா.உ க்கள் குற்றச்சாட்டு


அண்மையில் இலங்கை இராணுவம் மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை கைப்பற்றினர்.


இந்த இராணுவ நடவடிக்கையால் ஏப்பிரல் 2007 ல் இருந்து இன்று வரை 250,000 தமிழர்கள் மட்டக்களப்பில் அகதிகளாக்கப்பட்டனர். இவர்களில் ஆக 75,000 பேரே இதுவரை மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.கிட்டத்தட்ட 25,000 பேர் தமிழகத்திற்குச் சென்றுள்ளனர்.


இந்த நிலையில் இலங்கை அரசு சனத்தொகைக் கணிப்பீட்டை நடத்தி அதன் அடிப்படையில் வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பதன் மூலம் தமிழ்மக்களின் வாக்குரிமையை பறிக்கத் திட்டமிடுகிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.



ஆதாரம் : Tamilnet




தோற்கடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு பிரிட்டன் புத்துயிர் அளிக்கிறது -ஜே.வி.பி சாடுகிறது



அரசியல் ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் தோற்கடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு பிரிட்டன் புத்துயிர் அளிக்கிறது என சிங்கள இனவாத இடதுசாரிக் கட்சியான ஜே.வி.பியின் பொதுச் செயலாளரான ரில்வின் சில்வா பிரிட்டனைச் சாடியுள்ளார்.


ஜக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற அமைப்புக்கள் பல சாட்டுக்கள் சொல்லி இலங்கையின் உள்நாட்டு விடயங்களில் ஏற்கனவே தலையிட்டு வந்தாலும், பிரிட்டனின் இத் தலையீடு மிகவும் ஆபத்தானது என்கிறார் சில்வா.


மேற்குலக நாடுகள் எப்போதும், சமாதனத்திற்கான உதவி, மனித மேம்பாட்டுக்கான உதவி, மனித உரிமை எனும் வார்த்தை ஜாலங்களோடு வந்து உள்நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்துபவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


ஆதாரம் : டெய்லி மிரர்


ஜனாதிபதி ராஜபக்சாவின் எதிர்ப்பாளர்களுடன் சந்திரிகா சந்திப்பு



ஜனாதிபதி ராஜபக்சாவின் கட்சியான சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து பிரிந்து சிறீலங்கா சுதந்திரக் கட்சி - மக்கள் பிரிவு எனும் அமைப்பை ஆரம்பித்திருக்கும் அணியினரை இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா இன்று சந்தித்துக் கருத்துப் பரிமாறினார்.


சிறீலங்கா சுதந்திரக் கட்சி - மக்கள் பிரிவின் சார்பில் மங்கள சமரவீர , ஸ்ரீபதி சூரியாராச்சி, ரிரான் அலஸ், விபுலாங்கனி மலாகமுவ, சிசில் பண்டார செனவிரத்ன ஆகியோர் இச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.


ஆதாரம் : Lanka Dissent




யாழ்ப்பாணத்தில் 10 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் சிறப்பு அடையாள அட்டை பெற வேண்டும் : இலங்கை இராணுவம்


10 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் யாழ்ப்பாணத்தில் விசேட அடையாள அட்டைகள் வழங்க இராணுவம் முயன்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இதற்கு முன்னர் 15 வயதுக்கு அதிகமான அனைவருக்கும் விசேட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டிருந்தது, தற்போது நிலவும் பாதுகாப்பு சூழ்நிலை காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகிறது.


இந்த நடவடிக்கையின் மூலம் இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் வேறு நபர்களின் வருகையைத் தடுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விசேட அடையாள அட்டை நடைமுறைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் சில தினங்களில் இவை வழங்கப்படவுள்ளன எனவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



ஆதாரம் : Lanka Dissent

1 comment:

வெற்றி said...

/* பலவந்தமான ஆள் கடத்தல்களுக்கு நேர்முகமாகவும் மறைமுகமாகவும் அரசாங்கங்கள் அனுசரணை வழங்கும் ஆசிய நாடுகளில் இலங்கை முதலிடம் வகிக்கிறது. */

ஆசியாவிலேயே பிலிப்பைன்சுக்கு அடுத்த படியாக மக்களின் வாழ்க்கைத் தரத்தில் சிறந்து விளங்கிய நாடு, 99%எழுதப் படிக்கத் தெரிந்திருந்த மக்களைக் கொண்ட நாடு எனப் புகழ் பெற்ற நாடு ... இன்று...ம்ம்ம்...குரங்கின் கையில் பூமாலையைக் கொடுத்தது போல பிரிட்டிஸார் இனவாத/சுயநல சிங்கள அரசியல்வாதிகளிடம் நாட்டைக் கொடுத்துச் சென்றனர்...இன்று நாடு குட்டிச் சுவாராகி விட்டது...
பிரிட்டனின் குடியாதிக்க காலத்திலிருந்த இலங்கையைப் போல சிங்கப்பூரைக் கட்டியெழுப்ப வேணும்மென்ற கனவில் சிங்கப்பூரைக் கட்டியெழுப்பினாராம் சிங்கப்பூரின் முதலாவது பிரதமர்...

/* இலங்கை நாணயத்தின் பெறுமதி வரலாறு காணாத [all time low] வீழ்ச்சியடைந்துள்ளது. */

இரண்டாவது உலக மகா யுத்தத்தின் போது பிரிட்டனுக்கே கடன் கொடுத்த நாடு இன்று உலகத்திடம் பிச்சை கேட்டு நிற்கிறது...

-o❢o-

b r e a k i n g   n e w s...