.

Tuesday, August 21, 2007

சிலிக்கான் நகராக மாறிவரும் சென்னை நகருக்கு வயது 368

சிலிக்கான் நகராக மாறிவரும் சென்னை நகருக்கு வயது 368
சுருக்கமாக அதன் வரலாறு மற்றும் அறிய பல ஒளிப்படங்களுடன்
- எம். ஹூஸைன்கனி

பழைய சினிமா படங்களில் சென்னையைக் காண்பிக்கும்போது சென்டிரல் ரெயில் நிலையத்தையும் அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி. கட்டிடத்தையும் காட்டுவார்கள்.
இன்று எல்.ஐ.சி. கட்டிடத்தை விட உயரமான பெரிய பெரிய கட்டிடங்களையும், கம்ப்யூட்டர் நிறுவனங்களையும் ஆங்காங்கே பார்க்கலாம். குதிரை வண்டிகள் ஓடிய அண்ணா சாலையில் இன்று விதவிதமான வெளிநாட்டு சொகுசு கார்கள் சீறிப்பாய்ந்து செல்கின்றன.

வானளாவிய உயர்ந்த கட்டிடங்களையும், நவீன வசதிகளையும் கொண்டுள்ள சென்னை நகரம் உருவான வரலாறு நீண்ட நெடியது. 2007 ஆகஸ்ட் 22-ந்தேதி (புதன்கிழமை) சென்னைக்கு 368 வயது ஆகிறது.

சென்னையை உருவாக்கியவர்கள்

பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ் டே, ஆண்ட்ரு கோகன் ஆகிய இருவரும்தான் சென்னையை உருவாக்கியவர்கள். இப்போதைய சென்னை அந்த காலத்தில் 'சென்னப்பட்டினம்' என்றும், 'மெட்ராஸ்பட்டினம்' என்றும் அழைக்கப்பட்டு வந்தது.

இதற்கு முன்பு மைலாப்பூர், எழும்பூர், திருவல்லிக்கேணி, திருவான்மியூர், திருவொற்றியூர் என்று பல்வேறு சிறுசிறு கிராமங்களாகவும், குட்டி குட்டி நகரங்களாகவும் சென்னைப்பட்டினம் காட்சி அளித்தது. புதர்கள், காடுகள், மரங்கள் சூழ்ந்த இந்த ஊர்களுக்கு இடையே கூவம், அடையாறு போன்ற ஆறுகள் பாய்ந்து ஓடின.

ஆங்கிலேயர்கள் வருகை

சென்னப்பட்டினம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வாசனை திரவியம் மற்றும் ஜவுளி வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்தது. போர்ச்சுக்கீசியர்களின் வருகைக்குப் பின்னரே அது வளர்ச்சி அடையத் தொடங்கியது. கி.பி. 1552-ம் ஆண்டில் போர்ச்சுக்கீசியர்கள் சாந்தோமில் குடியேறி வியாபாரம் செய்தனர்.

சென்னப்பட்டினத்தில் விலை உயர்ந்த ஜவுளி மூலப்பொருட்கள் கிடைத்தன. இதை குறிவைத்து இங்கு கால்பதிக்க ஆங்கிலேயர்கள் திட்டமிட்டனர். இதற்காக கிழக்கிந்திய கம்பெனி பிரான்சிஸ் டே, ஆண்ட்ரு கோகன் என்ற 2 வியாபாரிகளை சென்னப்பட்டனத்திற்கு அனுப்பி வைத்தது. சென்னப்பட்டினத்துக்கு வந்த அவர்கள் இருவரும் வணிக மையம் கட்டுவதற்காக இடம் பார்த்தனர்.

ஜார்ஜ் கோட்டை

அதற்காக பூந்தமல்லி நாயக்கர் மன்னரிடமிருந்து ஒரு குறிப்பிட்ட அளவு நிலத்தை வாங்கினார்கள். அந்த இடத்தில் கிழக்கிந்திய கம்பெனியின் வணிக மையத்தையும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும் 22.8.1639-ல் கட்டினர். இதுதான் சென்னை உருவாக காரணமாக அமைந்தது.

பாதுகாப்பை கருத்தில் கொண்டு செயிண்ட் ஜார்ஜ் கோட்டையைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. வணிக வளாகம் கட்டப்பட்டதால் ஐரோப்பியர்கள் நிறைய பேர் வந்தனர். அவர்கள் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை சுற்றிலும் வீடு கட்டி குடியேறினர். அந்த பகுதி வெள்ளை பட்டினம் என்று அழைக்கப்பட்டது. அதற்கு வெளிப்புற பகுதியில் ஆந்திராவில் இருந்து வந்த ஏராளமான நெசவாளர்கள் குடியேறினர். இது கறுப்புபட்டினம் என்று அழைக்கப்பட்டது. இந்த பகுதிதான் பின்னர் ஜார்ஜ் டவுண் ஆனது.

கைமாறியது

செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வடக்கே உள்ள பகுதி சென்னப்பட்டினம் என்றும், தெற்குப் பகுதி மதராஸ் பட்டனம் என்றும் அழைக்கப்பட்டது. இந்த இரண்டு பட்டணங்களையும் ஒன்றுசேர்த்து ஆங்கிலேயர்கள் மதராஸ் பட்டினம் என்றும், தமிழர்கள் சென்னப்பட்டினம் என்றும் அழைத்தனர்.

1653-ல் சென்னப்பட்டினம் சென்னை மாகாணமாக மாறியது. அதன் பின்னர் 1702-ல் முகலாயர்களாலும், 1741-ல் மராட்டியர்களாலும் அது தாக்குதலுக்கு உள்ளானது. 1746-ம் ஆண்டு பிரெஞ்சுக்காரர்கள் கைவசமானது.

பெயர் மாற்றம்

பின்னர் ஆங்கிலேயர்களின் கைக்கு போனது. 1758-ல் மீண்டும் பிரெஞ்சுக்காரர்கள் கைப்பற்றினர். ஆனால், 2 மாதங்களிலேயே ஆங்கிலேயர்கள் திரும்பவும் மீட்டனர். அன்றுமுதல் 1947-ம் ஆண்டுவரை சென்னை மாகாணம் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.

சென்னை மாகாணம் 1968-ம் ஆண்டு தமிழ்நாடு என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது.

அதுபோல, மெட்ராஸ் என்று இருந்த பெயர் 1997-ம் ஆண்டு சென்னை என்று மாற்றப்பட்டது.

30 ஆயிரம் மக்கள்தொகையுடன் உருவான சென்னை நகரின் மக்கள்தொகை தற்போது 60 லட்சத்தை தாண்டிவிட்டது. சென்னை நகரின் பரப்பும் விரிவடைந்து கொண்டே போகிறது.

'மெட்ராஸ் டே'

1639-ம் ஆண்டு உருவான சென்னை நாளை (22-ந் தேதி) தன்னுடைய 368 வயதை அடைகிறது.


hussainghani@gmail.com

1 comment:

Anonymous said...

சென்னையில் ஒரு நல்ல உலகத்தரம் வாய்த டிஸ்கோவோ பார்றோ இல்லை இதையெல்லாம் எப்பிடி ஒரு மெற்றோபோலித்தான் என்று சொல்லுவீர்கள்? 368 வயது ஒரு கேடா?
தெரிந்தால் பட்டியல் இடவும் அடுத்த முறை ஒரு கலக்கு கலக்க!
இதில் கொடுமையிலும் கொடுமை என்ன வென்றால் நான் போயிருந்த பார்கள் எல்லாம் இரவு ஒரு மணிக்கே பூட்டிவிடுகிறார்கள்! சென்னை(இந்தியாவில் மற்ற நகரங்களுக்கு நான் செல்லவில்லை)வாசிகள் இரவுக்கோளிக்கை என்றால் கிலோ என்ன விலை என்று கேப்பார்கள் போலிருக்கு!

-o❢o-

b r e a k i n g   n e w s...