இந்தியா-அமெரிக்கா அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் போன்று தங்கள் நாடுகளுக்கு இடையே ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள சீனாவும் பாக்கிஸ்தானும் முயன்று வருகின்றன. இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிய வந்துள்ளது.
பிராந்திய பாதுகாப்பை சமநிலைப்படுத்தும் நோக்கில் இவ்விரு நாடுகளும் இம்முயற்சியில் இறங்கியுள்ளன என்று கூறப்படுகிறது.
இந்தியா-அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தத்தை, அணுசக்தி தயாரிப்புக்கான மூலப் பொருள்களை விற்கும் நாடுகள் (என்எஸ்ஜி) அங்கீகரித்துவிட்டால் பாக்கிஸ்தானுடன் அணுசக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தும் முயற்சியில் சீனா தீவிரமாக இறங்கிவிடும் என்று பெய்ஜிங்கில் இருந்து வெளிவரும் தகவல்கள் கூறுகின்றன.
அணுசக்தி விஷயத்தில் இந்தியா பலம் பெற்றுவிட்டால் அதற்கு இணையான பலத்தைப் பெற தங்களுக்கும் உதவ வேண்டும் என்று சீனாவிடம் பாக்கிஸ்தான் வலியுறுத்தி வருகிறது. இதுமட்டுமல்லாமல், இந்தியாவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ளும் அமெரிக்காவுக்கு போட்டியாக அல்லது பதிலடியாக தானும் பாக்கிஸ்தானுடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என சீனாவும் விரும்புகிறது.
இதற்கு முன்னோடியாக பாக்கிஸ்தான் ராணுவ தலைமை அதிகாரி ஒரு உயர்நிலைக் குழுவுடன் இம்மாத ஆரம்பத்தில் சீனா சென்று சீன துணை அதிபர், பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்டோருடன் பாதுகாப்பு விஷயங்கள் குறித்து பேச்சு நடத்திவிட்டு வந்துள்ளார்.
பதிலுக்கு சீனாவும் தனது உதவி வெளியுறவுத் துறை அமைச்சர் குய் தியான்காயை இஸ்லாமாபாத்துக்கு அனுப்பி அதிபர் பர்வீஸ் முஷாரப், பிரதமர் ஷெüகத் அஜீஸ், வெளியுறவு அமைச்சர் குர்ஷித் கசூரி உள்ளிட்டோரை சந்திக்க வைத்துள்ளது. அப்போது "சீனா-பாக்கிஸ்தான் சிவிலியன் அணுசக்தி உத்தேச ஒப்பந்தம்" குறித்து விவாதித்ததாக தெரிகிறது.
சீனாவுக்கும் இப்போது இந்தியா மீது பலவிதங்களில் அதிருப்தி இருக்கிறது. எல்லைப் பிரச்னையில் உள்ள தேக்க நிலை, அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம், ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இந்தியாவுக்கு இருக்கும் நெருக்கம் ஆகியன சீனாவை எரிச்சலூட்டி வருகின்றன.
அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தம் மற்றும் சர்வதேச சட்டங்கள் அதன் தூய நோக்கம் கெடாதபடி கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதையும் சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் வலியுறுத்தி கூறி வருகிறது.
இந்தியா-அமெரிக்கா அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தால் சர்வதேச ஆயுதப் பரவல் தடை முயற்சிகளுக்குப் பின்னடைவு ஏற்படும் என்று சீனாவின் 2 அதிகாரபூர்வ ஏடுகளில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
"இந்தியாவில் ஆட்சி மாற்றம் வரும்'
அணுசக்தி ஒப்பந்தத்தால் இந்திய அரசியலில் புயல் கிளம்பும். ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றெல்லாம் சீனப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
அணுசக்தி தொடர்பான 123 ஒப்பந்தம் பற்றிய இடதுசாரிகளின் கருத்துகளை சீனப் பத்திரிகைகள் விரிவாக வெளியிட்டுள்ளன. அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டு உலக அரங்கில் இந்தியாவை பகடைக்காயாக பயன்படுத்த அமெரிக்கா முயற்சிப்பதாகவும் சீன பத்திரிகைகள் குற்றம்சாட்டியுள்ளன.
தினமணி
Tuesday, August 21, 2007
அணுசக்தி ஒப்பந்தம்: சீனாவுடன் பாக்கிஸ்தான்.
Labels:
அரசியல்,
உலகம்,
பாக்கிஸ்தான்
Posted by வாசகன் at 7:16 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment