.

Thursday, August 23, 2007

பாராளுமன்றம்: அமளியில் ஈடுபட்டால் தினப்படி இனி கிடையாது

பாராளுமன்ற அவைகளில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தினமும் ஏதாவது ஒரு காரணத்துக்காக அமளியில் ஈடுபடுவதும், கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்துவதும், சபையின் மையப்பகுதிக்கு வந்து சபாநாயகருக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதுமாக இருந்து வருகின்றனர். இதனால், கேள்வி நேரம் உட்பட சபை அலுவல்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. லோக்சபா சபாநாயகராக முன்பு பாலயோகி இருந்த போது, இப்பிரச்னை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. சபையின் மையப் பகுதிக்குள் எம்.பி.,க்கள் நுழைந்தாலே அவர்கள், "இடைநிறுத்தம்' செய்யப்பட்டதாக கருதப்படுவர் என்ற நடவடிக்கை நடைமுறைக்கு வந்தது. ஆனால், என்ன காரணத்தாலோ இது கைவிடப்பட்டது.

தற்போது, சபாநாயகராக இருக்கும் சோம்நாத் சட்டர்ஜி, தினம் தினம் சபை அலுவல்கள் பாதிக்கப்படுவதால், கடுமையாக அதிருப்தி அடைந்துள்ளார். சபையில் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் இல்லாவிடில், சபையை நடத்துவதற்காக ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ள 10 மூத்த உறுப்பினர்களுடன் கடந்த ஜூன் மாதம் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. "பணி இல்லாவிடில் பணமும் இல்லை' என்ற அடிப்படையில், கூட்டத் தொடர் நடக்கும் போது உறுப்பினர்களுக்கு அளிக்கப்படும் தினப்படியை, அமளி ஏற்படும் நாட்களில் பிடித்தம் செய்யலாம் என்று அப்போது முடிவு செய்யப்பட்டது.

பா.உறுப்பினர்களுக்கு தற்போது தினப்படியாக ஆயிரம் ரூபாய் அளிக்கப்படுகிறது. அமளியால் அவைகள் ஒத்தி வைக்கப்பட்டு விட்டாலும், வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு விட்டால், இந்த பணம் கிடைத்து விடும். ஆனால், இனிமேல் அமளியில் ஈடுபடுவோருக்கு ஆயிரம் ரூபாய் தினப்படியை பிடித்தம் செய்வது என்ற முடிவில் சோம்நாத் சட்டர்ஜி உறுதியாக உள்ளார்.

சபை நடவடிக்கைகள் பாதிக்கப்படுவது அவரை கடுமையாக கவலை அடைய செய்துள்ளது. இதுநாள் வரை, அமைதியாக இருக்கும்படி அன்பாக வேண்டுகோள் விடுத்தபடி இருந்த சோம்நாத் சட்டர்ஜி, சில நாட்களுக்கு முன் கேரள எம்.பி., தாமஸ் மீது நடவடிக்கை எடுத்தே விட்டார். ஒரு பிரச்னைக்காக அரசிடம் விளக்கம் கேட்டு தாமஸ் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார். அரசு பின்னர் விளக்கம் அளிக்கும் என்று சபாநாயகர் கூறிய பிறகும், தாமஸ் இருக்கையில் அமராமல் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார். இதனால் கோபம் அடைந்த சபாநாயகர், 373 விதியை பயன்படுத்தி, தாமசை சபையில் இருந்து வெளியேற்றினார்.

ஒழுங்கீனமாக நடக்கும் எம்.பி.,க்களை சபையில் இருந்து வெளியேற்றும் அதிகாரம் 373 விதியின் கீழ் சபாநாயகருக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 374 ஏ விதியின் கீழ் அமளியில் ஈடுபடும் எம்.பி.,க்களை நாள் முழுவதும், "சஸ்பெண்ட்' செய்யவும் சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளது. இந்த அதிகாரங்களை பயன்படுத்த சோம்நாத் சட்டர்ஜி முடிவு செய்துள்ளார். இதற்காக அவரது ஆலோசனையின்படி இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடக்கிறது. இதில், சபையை அமைதியாக எப்படி நடத்துவது, ஒழுங்கீனமாக செயல்படும் எம்.பி.,க்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து பேசப்பட உள்ளது.

தினமலர்

2 comments:

Boston Bala said...

நல்ல விஷயம்.

சட்டசபைக்கும் அமலில் கொண்டு வரலாம்.

வடுவூர் குமார் said...

அமளிக்கு 3000ம் என்று வெளியில் யாராவது சொன்னால்?
1000 ரூபாய் எல்லாம் நம் உறுப்பினர்களுக்கு ஒரு அமௌண்டா?
அவர்களுக்கே சுயக்கட்டுப்பாடு வேண்டும்.

-o❢o-

b r e a k i n g   n e w s...