.

Monday, August 20, 2007

வெங்காயம்: ஆட்சியாளர் கண்ணில் நீர்.

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தால் இடதுசாரிகளின் கோபத்துக்கு ஆளாகியுள்ள மத்திய அரசுக்கு மற்றொரு தலைவலியாக வந்துள்ளது வெங்காய விலை உயர்வு.

1998 தில்லி சட்டப்பேரவை தேர்தலில் வெங்காயத்தை பிரசார ஆயுதமாக பயன்படுத்தி ஆட்சியைப் பிடித்தது பாரதீய ஜனதா.

இந்த ஆண்டு தொடக்கத்தில் அதே வெங்காய விலை உயர்வை காரணம் காட்டி தில்லியின் தற்போதைய காங்கிரஸ் அரசை பலமாக அசைத்துப் பார்த்தது பாஜக. ஆனால் அந்த முயற்சி பலனளிக்க வில்லை.

இந்நிலையில், கடந்த ஒரு வாரத்துக்குள் 11 சதவீதம் அளவுக்கு வடமாநிலங்களில் வெங்காயம் விலை உயர்ந்திருக்கிறது.

ஒரு கிலோ வெங்காயம் ரூ.20-க்கு விற்கிறது. நடுத்தர மக்களால் எப்படி வாங்க முடியும் என்கிறார் தில்லியை சேர்ந்த குடும்பத் தலைவி மம்தா.

ஆகஸ்ட் 13-ம்தேதி ரூ.962-க்கு விற்ற ஒரு குவிண்டால் வெங்காயத்தின் தற்போதைய விலை ரூ.1070.

சந்தையில் வெங்காயத்தின் வரத்து குறைந்திருப்பதால் விலை உயர்ந்து கொண்டே செல்வதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

கோகல்பூர், பெல்லாரி ஆகிய வெங்காய உற்பத்தி பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கினால் தில்லிக்கு வெங்காய வரத்து அறவே நின்று, விலை உச்சாணி கொம்புக்கு எகிறிவிடும் என்கிறார் மொத்த வியாபாரி ஒருவர்.

எதிர்க்கட்சிகள் அடிக்கடி வெங்காயத்தை காட்டி மிரட்டுவதால், வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்குமாறு மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் தில்லி முதல்வர் ஷீலா திட்சித்.

ஆனால் இதுவரை வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப் படவில்லை. எனினும் ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் வகையில் ஒரு டன் ஏற்றுமதி வெங்காயத்தின் மீதான விலையை 20 டாலரிலிருந்து 345 டாலர் வரை விலை உயர்த்தியுள்ளது மத்திய அரசு.

தினமணி

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...