.

Wednesday, March 28, 2007

சற்றுமுன்: டீசல் இல்லாமல் நடுவழியில் நின்ற ஆம்புலன்ஸ் நோயாளி சாவு

டீசல் தீர்ந்துபோனதால் நடுவழியில் நின்றது ஆம்புலன்ஸ். அதில் நெஞ்சுவலியுடன் துடித்துக் கொண்டிருந்த மெக்கானிக் பரிதாபமாக இறந்தார்.

புதுக்கோட்டை காந்திநகரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (45). மெக்கானிக். இவருக்கு நேற்று திடீரென வயிற்றுவலியும், நெஞ்சுவலியும் ஏற்பட்டது. உடனடியாக அவரை உறவினர்கள் புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். நேற்றிரவு அவரது உடல்நிலை மோசமானதால் தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

இதையடுத்து, தனியார் தொண்டு நிறுவனத்தின் ஆம்புலன்சில் கோவிந்தராஜை அவரது உறவினர்கள் தஞ்சாவூருக்கு கொண்டு சென்றனர். அவர்களுடன் ஒரு நர்சும் சென்றார். நள்ளிரவு 1 மணிக்கு கந்தர்வக்கோட்டை அடுத்த காடவராயன்பட்டி என்ற இடத்தில் சென்றபோது டீசல் தீர்ந்துவிட்டதால் ஆம்புலன்ஸ் நடுவழியில் நின்றுவிட்டது.

ஆம்புலன்சில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கோவிந்தராஜ் சிறிது நேரத்தில் இறந்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் டிரைவரை திட்டித் தீர்த்தனர். உறவினர்களின் கதறலை கேட்டு ஊர்மக்கள் அங்கு திரண்டனர். நிலைமை மோசமானதை உணர்ந்த நர்ஸ், ஆம்புலன்சில் இருந்து இறங்கி ஓடிவிட்டார். கோவிந்தராஜ் இறந்த தகவலை தெரிந்து கொண்ட டிரைவர் ராஜேந்திரனும் திரும்பி வரவே இல்லை.

இதுபற்றி கோவிந்தராஜின் உறவினர் ஒருவர் கூறுகையில், புதுக்கோட்டையில் ஆம்புலன்ஸ் புறப்படும்போதே டீசல் போட டிரைவருக்கு பணம் கொடுத்தோம். ஆனால், அவர் பணத்தை வாங்கிக் கொண்டு டீசல் போடவில்லை. அவரது அலட்சியத்தால் இப்போது ஒரு உயிர் போய்விட்டது என்றார்.

- மாலைச் சுடர்

1 comment:

Anonymous said...

அம்புலென்ஸ் நிலைமையே இப்படியா...

வாழ்க பாரதம்

-o❢o-

b r e a k i n g   n e w s...