.

Friday, May 4, 2007

கக்கனின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதி: முதல்வர் அறிவிப்பு

சென்னை, மே 4: முன்னாள் அமைச்சர் கக்கனின் மகன் மற்றும் அவரது பேரனுக்கு தலா ரூ. 1 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

காமராஜர் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த கக்கனின் மகன் மற்றும் அவரது பேரன் ஆகியோர் வறுமையில் வாடுவதாகவும் அவர்களுக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் சட்டப்பேரவையில் வியாழக்கிழமை கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். இப்பிரச்சினையை தகவல் கோரலாக எடுத்துக் கொள்வதாக ஆவுடையப்பன் அறிவித்தார்.

இதற்கு பதிலளித்து முதல்வர் கூறியது:

கக்கனின் மகன் நடராசமூர்த்தி உடல்நலமும் மன நலமும் பாதிக்கப்பட்டு 18 ஆண்டுகளாக சென்னை மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது இன்னொரு மகன் கே. பாக்யநாதன் வறுமையில் வாடுகிறார். அவரது மகன் கண்ணன் வேலையின்றி உள்ளார் என்று ஞானசேகரன் குறிப்பிட்டு அவர்களுக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

கக்கனுக்கு பத்மநாபன், பாக்யநாதன், சத்தியநாதன், காசி விஸ்வநாதன், நடராச மூர்த்தி என 5 மகன்களும், கஸ்தூரி என்ற மகளும் இருந்தனர். இவர்களில் பத்மநாபன், காசி விஸ்வநாதன் ஆகியோர் தற்போது உயிருடன் இல்லை. மற்றும் சத்தியநாதன் மருத்துவராக பணிபுரிகிறார். மகள் கஸ்தூரி சென்னையில் வசிக்கிறார், அவரது கணவர் அந்தமானில் பொறியாளராக உள்ளார்.

நடராசமூர்த்தி திருமணம் ஆகாதவர். அவர் மனநலம் குன்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், அரசு பராமரிப்பில் உள்ளார். அவருக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மற்றொரு மகனான 62 வயதுடைய பாக்யநாதன் எவ்வித ஆதரவுமின்றி சிரமப்படுகிறார். அவரது மகன் கண்ணன் விவசாயக் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இருவரும் சிரம நிலையில் இருப்பதாக மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அரசு அக்கறையோடு பரிசீலனை செய்ததில் கண்ணன் தாங்கள் வசிக்கும் கிராமத்திற்கு வெளியே நிலமோ, வீட்டு மனையோ பெற்றுக்கொள்ள தங்களுக்கு விருப்பமில்லை என்று தெரிவித்துவிட்டார். இதைக் கருத்தில் கொண்டு பாக்யநாதன் மற்றும் கண்ணன் ஆகியோருக்கு தலா ரூ. 1 லட்சம் வங்கியில் கட்டி, அதன் மூலம் கிடைக்கும் வட்டியை அவர்களது மாத செலவுக்கு வழங்க வகை செய்யப்படுகிறது. மேலும் அவர்களது உடனடி தேவையை பூர்த்தி செய்து கொள்ள தலா ரூ. 25 ஆயிரம் ரொக்க நிதி வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது என்றார் கருணாநிதி.

2 comments:

Anonymous said...

yahoo merges with Microsoft -- hot news isnt it ?

http://mediabiz.blogs.cnnmoney.com/2007/05/04/media-merger-mania/?source=yahoo_quote

சிறில் அலெக்ஸ் said...

anony - the deal is not finalized. just talks going on

-o❢o-

b r e a k i n g   n e w s...