மதுரை மேற்கு சட்டசபைத் தொகுதிக்கு ஜூன் 26ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மதுரை மேற்கு தொகுதியில், அதிமுக சார்பில் எஸ்.வி.சண்முகம் தேர்வு செய்யப்பட்டிருந்தார். கடந்த பிப்ரவரி மாதம் சண்முகம் திடீர் மரணம் அடைந்தார். இதையடுத்து இத்தொகுதி காலியானது. மதுரை மேற்குத் தொகுதிக்கு 6 மாதங்களுக்குள் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய சூழ்நிலை உருவானது. இந்த நிலையில் தற்போது இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, ஜூன் 1ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கும். வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூன் 8ம் தேதியாகும். மனுக்கள் 9ம் தேதி பரிசீலனை செய்யப்படும். 11ம் தேதிக்குள் மனுக்களை வாபஸ் பெற வேண்டும். ஜூன் 26ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை 29ம் தேதி நடைபெறும். இடைத் தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன என்று கூறியுள்ளார் நரேஷ்குப்தா. மதுரை மேற்குத் தொகுதியில் புகைப்பட வாக்காளர் பட்டியல் பயன்படுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment