.

Monday, May 14, 2007

சற்றுமுன்:சதி செய்து பதவியை பறித்துவிட்டனர்-தயாநிதி பேட்டி

சதி செய்து பதவியை பறித்துவிட்டனர்-தயாநிதி பேட்டி

சென்னை: கட்சியில் உள்ள சிலர் சதி செய்து தன்னை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிவிட்டதாக மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த தயாநிதி மாறன் கூறியுள்ளார்.

ஊட்டிலிருந்து இன்று சென்னை வந்த மாறன் கோபாலபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் நிருபர்களை சந்தித்தார். அவர் கூறுகையில்,

மதுரை தினகரன் மீதான தாக்குதலால் நான் ராஜினாமா முடிவை எடுக்கவில்லை. சன் டிவிக்கும் தினகரனுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், அந்த சம்பவத்தை வைத்து என் பெயரைக் கெடுக்க சிலர் முயன்றுள்ளனர். இந்த சம்பவத்தை காரணமாக வைத்து என்னை பதவி நீக்கம் செய்ய வைத்துள்ளனர்.

அமைச்சராக பணியாற்ற வாய்ப்பளித்த சோனியா காந்தி அவர்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு பதவி முக்கியமல்ல. அமைச்சராக இருப்பதும் இல்லாததும் என்னை எந்த விதத்திலும் பாதிக்காது.

எனது கட்சியான திமுகவுக்கோ தலைவர் கலைஞருக்கோ எந்த விதத்திலும் எதிராக செயல்பட மாட்டேன். ஆனால், நான் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது தான் மிகுந்த வருத்தத்தை தருகிறது.

கட்சியை விட்டு நீக்கப்பட்டாலும் நான் திமுககாரன் தான். கட்சிக்காக தொடர்ந்து உழைப்பேன். நான் பிறந்தது திமுககாரனாத்தான். கட்சியை விட்டு நீக்கினாலும் திமுக தொண்டனாகவே சாவேன்.

விரைவில் கலைஞரை சந்திப்பேன். என் நிலையை விளக்குவேன். ஆனால், இந்த விவகாரங்கள் குறித்து பேசப் போவதில்லை.

ஆனால், கலைஞரை சந்திக்க இதுவரை எனக்கு வாய்ப்பு தரப்படவில்லை. அது ஏன் என்று தான் புரியவில்லை.

எங்கள் குடும்பத்துக்கும் கலைஞர் குடும்பத்துக்கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. எனக்கு ஸ்டாலின், அழகிரியோடு நல்ல நட்புறவு தான் உள்ளது.

கட்சியிடம் இருந்து என்னை ஏன் நீக்கக் கூடாது என்று கேட்டு எனக்கு இதுவரை நோட்டீஸ் ஏதும் வரவில்லை. ஆனால், நான் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக திமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட மறு கணமே எனது ராஜினாமா கடிதத்தை பிரதமருக்கு அனுப்பி விட்டேன்.

கட்சி எடுத்த முடிவு அது. அதற்கு கட்டுப்பட்டுவிட்டேன்.

அமைச்சர் பதவியில் இருந்து விலகினாலும் எம்பியாக தொடரவே விரும்புகிறேன். சென்னை மத்தியத் தொகுதி மக்களுக்காக தொடர்ந்து உழைக்க தயாராக இருக்கிறேன். அந்தப் பதவியில் இருந்து விலகச் சொன்னாலும் நான் தயார் என்றார் தயாநிதி.

மதுரை சம்பவம் நடந்தவுடன் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலை சந்தித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினீர்களாமே என்று கேட்டபோது, இது பொய்யான தகவல். அப்போது நான் மக்களவையில் இருந்தேன் என்றார் தயாநிதி.

முன்னதாக நேற்றிரவு ஊட்டியிலிருந்து அவர் வெளியிட்ட அறிக்கையில், நான் திமுகவுக்கும், தலைவர் கலைஞருக்கும் என் மனதறிய துரோகம் நினைத்ததில்லை. இனியும் நினைக்க மாட்டேன்.

என் தாத்தாவும், என் தந்தையும் என்னை அப்படி வளர்க்கவில்லை. என்னைப் பதவி நீக்குவதும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதும் தலைவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சி தருவதாக இருந்தால், அதை ஏற்கவும் தயாராக இருக்கிறேன். ஏனென்றால் நான் அவரின் வளர்ப்பு. அவரால் ஆளாக்கப்பட்டவன்.

இந்த நேரத்தில் வேறு எதையும் தெரிவிக்க விரும்பவில்லை. மூன்றாண்டு காலம் இந்திய மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் நேர்மையாகவும், என்னால் முடிந்தளவுக்கு சிறப்பாகவும், பணியாற்றி பலரது பாராட்டைப் பெற வாய்ப்பளித்த தலைவருக்கும், கட்சிக்கும், எனது இதயங்கனிந்த நன்றிகள் என்று கூறியுள்ளார் தயாநிதி மாறன்..

நன்றி- தட்ஸ் தமிழ்

1 comment:

Anonymous said...

///அமைச்சராக பணியாற்ற வாய்ப்பளித்த சோனியா காந்தி அவர்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். ///

முன்னாள்.அமைச்சர்.சார்

நெஞ்சத்தொட்டு சொல்லுங்க..அந்த அம்மா மட்டும்தான் நீங்க அமைச்சரா பணியாற்ற காரணமா ?

மக்களும், கலைஞர் கருணாநிதி அவர்களும் இல்லையா ?

-o❢o-

b r e a k i n g   n e w s...