சென்னை: மின்னல் வேகத்தில் அரசியலுக்குக் கொண்டு வரப்பட்டு, அதி வேகமாக உச்சத்திற்குச் சென்ற தயாநிதி மாறனின் அரசியல் வாழ்க்கை, மூன்றே ஆண்டுகளில் தரைமட்டமாகியுள்ளது.
கருணாநிதியின் நிழலாக, அவரது மனக் குரலாக விளங்கிய மறைந்த முரசொலி மாறனின் இளைய மகன்தான் தயாநிதி மாறன். மாறன் மறைவுக்குப் பின்னர் டெல்லியில் திமுகவின் குரலாக இருக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்தது.
அந்த சமயத்தில் திடீரென உதயமானவர் தயாநிதி மாறன். தந்தையின் இடத்தில் தயாநிதியை உட்கார வைத்து அவருக்கு முக்கியத்துவம் கொடுத்தார் கருணாநிதி.
மத்திய சென்னை எம்.பி. தொகுதியில் நிறுத்தி வெற்றி பெற வைத்து, மாறன் குடும்பம் விரும்பிய முக்கியத் துறையை அவருக்கு வாங்கிக் கொடுத்து அழகு பார்த்தார் கருணாநிதி.
ஆனால் கருணாநிதியின் இந்த முடிவுக்கு கட்சிக்குள் அப்போதே கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் தனது பாணியில் இதை அமைதிப்படுத்தி, அடக்கினார் கருணாநிதி.
2004ம் ஆண்டு மத்திய அமைச்சரானார் தயாநிதி மாறன். அதற்கு முன்பு தயாநிதி மாறன் அதிகம் அறியப்படாதவர். சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனத்தின் இயக்குநராக மட்டுமே இருந்து வந்தார் தயாநிதி மாறன்.
ஆனால் மத்திய அமைச்சரான பின்னர் தனது செயல்பாடுகளால் டெல்லியில் பலரின் நட்பைப் பிடித்தார். குறிப்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடமும், பிரதமரிடமும் நெருங்கிய நட்பை ஏற்படுத்திக் கொண்டார்.
மிகக் குறுகிய காலத்தில் இந்தியா முழுவதும் தெரிந்த முகமாகி விட்டார் தயாநிதி மாறன். அதே சமயம் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கினார். சன் டிவியை வளர்ப்பதில் மட்டும்தான் அவர் அக்கறை காட்டுகிறார். மற்ற தமிழ் சானல்களை அழிக்கும் வேலையில் அவர் ஈடுபடுகிறார் என்று முன்பு பெரும் சர்ச்சை எழுந்தது.
ராஜ் டிவியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தயாநிதி மாறன் கடுமையாக முயல்வதாகவும் கூறப்பட்டது. இதை நிரூபிக்கும் வகையில் ராஜ் டிவிக்கு வழங்கப்பட்ட நேரடி ஒளிபரப்புக்கான உரிமம் ரத்து செய்யப்பட்டது. அந்த நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தி பல கோடி மதிப்புள்ள கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல ஜெயா டிவிக்கும் பல நெருக்கடிகளைக் கொடுத்தார் தயாநிதி மாறன் என்று கூறப்பட்டது. அந்த நிறுவனத்தின் சார்பில் புதிதாக ஒரு செய்தி சானலுக்கான உரிமத்தை வழங்கவும் தயாநிதியின் துறை தாமதம் செய்தது. பின்னர் நீதிமன்றத் தலையீட்டைத் தொடர்ந்து உரிமம் வழங்கப்பட்டது.
சமீபத்தில் விஜய் டிவியுடனும் மோதினார் தயாநிதி மாறன். அந்த டிவியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் பங்கு பெற்ற யூனிட்டை அப்படியே சன் டிவிக்கு ஹைஜாக் செய்ததில் தயாநிதி மாறன் முக்கியப் பங்கு வகித்ததாக கூறப்படுகிறது. மேலும், விஜய் டிவிக்கு பல ரூபங்களில் நெருக்கடியும் கொடுக்க ஆரம்பித்தார்கள்.
இந்த சர்ச்சைகளுக்கெல்லாம் முத்தாய்ப்பாக, உச்சமாக இந்தியாவின் மிகப் பெரும் தொழிலதிபரான ரத்தன் டாடாவை தயாநிதி மாறன் மிரட்டினார் என்ற சர்ச்சைதான். நான் மிரட்ட வில்லை என்று தயாநிதி மாறன் அதற்கு விளக்கம் கூறினார். ஆனால் அதுகுறித்து பிரதமரும், காங்கிரஸ் தலைவரும் மறுப்பு தெரிவிக்கவில்லை, விளக்கவும் இல்லை.
இந்த நிலையில்தான் தேவையில்லாத ஒரு கருத்துக் கணிப்பை தினகரன் வெளியிடப் போக தயாநிதியின் தலை உருண்டுள்ளது.
அடுத்து தயாநிதி மாறன் என்ன செய்யப் போகிறார் என்பதை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. மேலும், திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.பி. பதவியையும் அவர் ராஜினாமா செய்வாரா என்பது தெரியவில்லை. அதுகுறித்து திமுக தரப்பிலும் எந்த சத்தமும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
3 ஆண்டுகளில் பதவியிழக்கும் தயாநிதி மாறன்
பதவிக்கு வந்த 3 ஆண்டுகளில் தயாநிதி மாறன் தன் அமைச்சர் பதவியை இழக்கிறார்.
சன் டிவி குழுமத்தின் கேபிள் நெட்வொர்க்கான சுமங்கலி கேபிள் விஷன் நிறுவன இயக்குனராக இருந்த தயாநிதி மாறன், கடந்த 2004ல் முரசொலி மாறன் மறைவிற்கு பின்னர் நடந்த பொதுத் தேர்தலில் முதன்முதலாக மத்திய சென்னை மக்களவை தொகுதியில் திமுக சார்பில் வெற்றி பெற்றார்.
இதையடுத்து அவருக்கு மத்தியில் அமைந்த கூட்டணியில் முக்கியமான துறையான தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலை தொடர்புத் துறை கேபினட் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி ஆகியோரிடம் மிகுந்த செல்வாக்கு பெற்றார். டெல்லி அரசியலில் தமது செல்வாக்கை நிலை நிறுத்தினார்.
தொலைத் தொடர்புத்துறை அைமச்சராக மிகச் சிறப்பாக பணியாற்றி அந்தத் துறையைச் சேர்ந்தவர்களின் மதிப்பையும் பெற்றார். தொலைபேசி கட்டணங்களை குறைத்துக் கொண்டே வந்தார். அவருடைய மிகப் பெரிய சாதனையாக கருதப்படுவது இந்தியா முழுவதும் 1 ரூபாயில் பேசும் ஒன் இந்தியா திட்டம்.
ஆனால் தினகரன் வெளியிட்ட கருத்து கணிப்பு, அழகிரி கும்பல் தாக்குதல், அழகிரியை ரவுடி என சன் டிவி விமர்சித்தது, முதல்வர் கருணாநிதியை புறக்கணித்தது என திடீரென நிகழ்ந்த அரசியல் சூறாவளிகளால் கட்சியிலும் குடும்பத்திலும் குழப்பம் ஏற்பட்டு பதவியை இழந்து நிற்கிறார் தயாநிதி.
இதனால் யாருக்கு லாபமோ நஷ்டமோ தொலைத் தொடர்புத்துறையும் சாப்ட்வேர் துறையும் ஒரு இளம், எனர்ஜடிக் அமைச்சரை இழந்துவிட்டது.
நன்றி: தட்ஸ் தமிழ்
Monday, May 14, 2007
சற்றுமுன்: வேகமாக உயர்ந்து படு வேகமாக சரிந்த தயாநிதி
Posted by கவிதா | Kavitha at 3:27 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
1 comment:
திமுக ஒரு இளம் அமைச்சரை மட்டும் இழக்கவில்லை அடுத்த தேர்தலில் தனது ஆட்சியை இழக்க இப்பொழுதே
தயாராகிறது.
Post a Comment