.

Thursday, July 12, 2007

கேபிள் டிவி: தமிழக அரசுக்கு இராமதாஸ் கடிதம்.

தமிழகத்தில் கேபிள்டிவி'யை அரசே எடுத்து நடத்த வேண்டும் என்று முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளதாக பா.ம.க.,இராமதாஸ் கூறினார்.

திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது: கூட்டுறவு சங்கத் தேர்தலை ரத்து செய்ததை வரவேற்கிறேன். தோழமைக் கட்சிகளின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து திறந்த மனதுடன் முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார். துணை நகரம்,விமான நிலைய விரிவாக்கம் போன்ற பிரச்னைகளில் எங்கள் கொள்கையை ஏற்று, மாற்று கருத்துக்கு முதல்வர் மதிப்பு தரும் வகையில் அரசின் நிலைப்பாட்டை மாற்றியுள்ளார்.

கடந்த சட்டசபைத் தேர்தலில் பா.ம.க., தி.மு.க., கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தவைகளை நிறைவேற்ற நாங்கள் தமிழக அரசை வற்புறுத்துவோம். தமிழகத்தில் கேபிள் "டிவி'யை தமிழக அரசே எடுத்து நடத்த வேண்டும். மக்களுக்கு சலுகை வழங்கினாலும் ரூ.500 கோடி அரசுக்கு வருமானம் வரும். கேபிள் "டிவி'யை தமிழக அரசு எடுத்து நடத்த, மத்திய அரசு தடையாக இருக்காது. இதை தனியார் நடத்தி கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டிக் கொண்டுள்ளனர். இது போதாது என்று தற்போது, வேறு சிலரும் கேபிள் "டிவி'யை நடத்த போட்டி போடுகின்றனர். சென்னையில் விளம்பர பலகை வைக்கும் நிறுவனம் நடத்துபவரும், சேலம் மாநகரைச் சேர்ந்த ஒருவரும் உட்பட மூன்று பேர் இணைந்து இந்தத் தொழிலை தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் நடத்த உள்ளதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது.

கேபிள் "டிவி'யை ஏற்று நடத்த தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது. இதை நான் சுட்டிக் காட்டி தமிழக முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளேன். இதற்கு முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகின்றேன். காவிரியில் கர்நாடகம் பல தடுப்பணைகள் கட்டி வருகின்றது. இதைத் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை நடுவர் மன்றம் ஏற்கவில்லை. எனவே, தமிழக அரசு இதை அவசர வழக்காக ஏற்கும் படி உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும். இவ்வாறு இராமதாஸ் கூறினார்.

நன்றி

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...