.

Tuesday, August 7, 2007

'சென்னை சங்கமம்' நிகழ்ச்சி நிதி: 25 தன்னார்வ நிறுவனங்களுக்கு ரூ.40 லட்சம் உதவி

'சென்னை சங்கமம்' நிகழ்ச்சி நடத்தியதின் மூலம் கிடைத்த ரூ. 40 லட்சம் தொகை 25 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. திங்கள்கிழமை அறிவாலயத்தில் நடைபெற்ற விழாவில் இத்தொகைக்கான காசோலையை தொண்டு நிறுவனப் பிரதிநிதிகளிடம் முதல்வர் கருணாநிதி வழங்கினார்.

சென்னையில் உள்ள 'தமிழ் மையம்' என்ற அமைப்பு "சென்னை சங்கமம்' என்ற கலாசார விழாவை கடந்த பிப்ரவரி 6-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை சென்னையின் பல்வேறு பகுதிகளில் நடத்தியது. இதில் விளம்பரம் மூலம் கிடைத்த வருவாயில் செலவு போக எஞ்சிய தொகை தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதாக தமிழ் மையத்தின் நிர்வாக அறங்காவலர் ஜெகத் கஸ்பார் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியது:

'சென்னை சங்கமம்' நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் முதல்வரின் மகள் கனிமொழி. இந்நிகழ்ச்சியை 'தமிழ் மையம்' நடத்தியது. இந்நிகழ்ச்சியில் 750 கலைஞர்கள் பங்கேற்றனர். சென்னையில் 700 இடங்களில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை 10 லட்சம் மக்கள் கண்டு களித்தனர்.

தனியார் நிறுவனங்களிடமிருந்து விளம்பரம் மூலம் பெறப்பட்ட தொகை ரூ.2 கோடியே 94 லட்சத்து 54 ஆயிரத்து 900 ஆகும். இதில் நிகழ்ச்சிக்கான செலவுத் தொகை ரூ.2 கோடியே 56 லட்சத்து 27 ஆயிரத்து 895 ஆகும். எஞ்சிய தொகை ரூ.39 லட்சத்து 27 ஆயிரமாகும். தற்போது கூடுதலாக ரூ.73 ஆயிரம் நிதி சேர்க்கப்பட்டு ரூ.40 லட்சத்தை 25 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு முதல்வர் மூலம் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

முதல் கட்டமாக 5 நிறுவனப் பிரதிநிதிகளுக்கு முதல்வர் வழங்கினார். ஏனைய நிறுவனங்களுக்கு செவ்வாய்க்கிழமை வழங்கப்படும். இந்நிறுவனங்கள் அனைத்துமே குழந்தைகள், பெண்கள் மற்றும் உடல் ஊனமுற்றோர் நலனுக்காகச் செயல்படுபவை.

நகராட்சிப் பள்ளிகளில் கிராமியக் கலை: சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கிராமியக் கலை பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு ரூ.8 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 200 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் கஸ்பார்.

தினமணி

The Hindu : Tamil Nadu / Chennai News : ‘Chennai Sangamam’ surplus funds to be utilised for NGO projects

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...